மகாத்மா காந்தியின் மனைவி கஸ்தூரிபாய் காந்தி!

மகாத்மா காந்தியின் மனைவி கஸ்தூரிபாய் காந்தி!

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நிழலாக வாழ்ந்தவர், அவர்தம் வாழ்க்கைத் துணைவியார் கஸ்தூரிபா காந்தி. கணவர் ஏற்ற தேசிய விரதத்திற்காக தானும் உடன் உழைத்த பாரத மங்கையர் திலகம் அவர். காந்தியடிகள் மகாத்மா ஆக காரணமே இவர்தான் என்றால் மிகையல்ல..

குஜராத் டிஸ்ட்ரிக் போர்பந்தரில், வணிக குடும்பத்தில், கோகுல்தாஸ் கபாடியாவின் மகளாக 11.04.1869 ல் பிறந்தார் கஸ்தூரிபா. இவருக்கு 13 வயதான போது (1883) குடும்ப உறவினரான மோகன்தாஸ் கரம்சந்த் (மகாத்மா) காந்தியுடன் திருமணம் செய்து வைக்கப்பட்டார். அப்போது காந்தியின் வயது 14. இத் தம்பதியினருக்கு, ஹரிலால் (1888), மணிலால் (1892), ராமதாஸ் (1897), தேவதாஸ் (1900) ஆகிய நான்கு புதல்வர்கள் பிறந்தனர். காந்தி பொதுவாழ்வில் தீவிரமாக ஈடுபட்டதால் குடும்பப் பொறுப்பு முழுவதும் கஸ்தூரிபா கவனித்துக் கொண்டார்.

1897 ல் தொழில்நிமித்தமாக, வழக்கறிஞர் பணிக்காக தென் ஆப்பிரிக்கா சென்ற கணவருடன் சென்றார் கஸ்தூரிபா. அங்கு அவர் போராட்டமயமான வாழ்க்கை நடத்த வேண்டியிருந்தது. 1904 முதல் 1914 வரை டர்பன் நகரில் காந்தி குடும்பம் வசித்தது. தென் ஆப்பிரிக்காவில் நிலவிய நிறவெறிக் கொடுமைக்கு எதிரான கணவரின் போராட்டத்தில் துணை நின்றார் கஸ்தூரிபா.

இந்தியா வம்சாவளி தொழிலாளர்கள் மீதான கொடிய சட்டங்களைக் கண்டித்து காந்திஜி நடத்திய அறப்போராட்டங்களில் கஸ்தூரிபா காந்தியும் பங்கேற்றார். 1913 ல் நடந்த அறப் போராட்டத்தில் கலந்துகொண்ட கஸ்தூரிபா, கைது செய்யப்பட்டு, மூன்று மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டார். காந்திஜி கைதான நேரங்களில் அறப் போராட்டங்களை தலைமை தாங்கி நடத்திய பெருமையும் இவருக்குண்டு.

1915 ல் பாரதம் திரும்பியது மகாத்மா காந்தி குடும்பம். அதன் பிறகு இந்திய விடுதலைப் போரில் களமிறங்கினார் காந்தி. அவருக்கு உற்ற துணையாக கஸ்தூரிபா காந்தி விளங்கினார்.

சிறு வயதிலேயே ஏற்பட்ட நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட அவர் வாழ்நாள் முழுவதும் அதனால் சிரமப்பட்டார். ஆயினும், கணவருடன் எளிய வாழ்வு வாழ்ந்தார். சபர்மதி ஆசிரமத்தின் சூழல் அவருக்கு ஒத்துக்கொள்ளாத போதும், கணவரின் பாதையே தனது பாதை என, ஒரு இந்திய குடும்பத் தலைவியாகவே அவர் வாழ்ந்தார். அங்கு ராட்டை நூற்றல் உள்ளிட்ட காந்தியப் பணிகளில் ஈடுபட்டு மற்றவர்களுக்கு முன் மாதிரியாக விளங்கினார்.

வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது (1942) கைது செய்யப்பட மகாத்மா காந்தியுடன் கஸ்தூரிபா காந்தியும் கைதானார். இருவரும் பூனாவிலுள்ள ஆகா கான் மாளிகையில் சிறை வைக்கப்பட்டனர். அங்கு, நோயால் இதே நாளில்தான் மரணம் அடைந்தார் (22.02.1944) கஸ்தூரிபா காந்தி.

தனது மனைவி குறித்த தகவல்களை உருக்கமாக தனது ‘சத்திய சோதனை’ நூலில் குறிப்பிட்டுள்ளார் மகாத்மா காந்தி. காந்தியின் சினத்தையும் அடக்குமுறையையும் பொறுமையுடன் ஏற்று குடும்பத்தைக் காத்த கஸ்தூரிபா காந்தி குறித்து அவர் எழுதியுள்ளதைப் படிக்கும் எவரது கண்ணிலும் கண்ணீர் துளிர்க்கும்.

கஸ்தூரிபா காந்திக்கு என்று தனித்த வாழ்க்கை ஏதுமில்லை. மகாத்மா காந்தியின் வாழ்க்கையே கஸ்தூரிபா காந்தியின் வாழ்க்கை. நாட்டை வழிநடத்திய தனது கணவர் வீட்டுக் கவலைகளில் மூழ்காமல் காத்தவர்; கணவரின் பாதை கல்லும் முள்ளும் நிரம்பியது என்று தெரிந்து அதனை மலர்ப்பாதையாக ஏற்றவர்; காந்தியின் நிழலாக வாழ்ந்தவர் கஸ்தூரிபா.

ஒரு இந்திய குடும்பத் தலைவி எப்படி இருப்பாரோ, அப்படியே அவர் வாழ்ந்தார். கணவரின் புகழில் என்றும் அவர் குளிர் காய்ந்ததில்லை. ஆனால், கணவருக்காக அவர் பல துயரங்களை ஏற்றிருக்கிறார். இந்தியாவின் பெண்மைக்கு உதாரணம் சீதை என்று சுவாமி விவேகானந்தர் கூறுவார். அந்தப் பட்டியலில் கஸ்தூரிபா காந்தியையும் கண்டிப்பாகச் சேர்க்கலாம்.

இன்று கஸ்தூரிபா காந்தி காலமான நாள் 

error: Content is protected !!