காஷ்மீர் சிறுமி : புகைப்படத்தை வெளியிடுவது தப்பில்லையா? – ஊடகங்களுக்கு கோர்ட் நோட்டீஸ் – AanthaiReporter.Com

காஷ்மீர் சிறுமி : புகைப்படத்தை வெளியிடுவது தப்பில்லையா? – ஊடகங்களுக்கு கோர்ட் நோட்டீஸ்

பாரத தேசம் என்று பீற்றிக் கொள்ளும் நம் இந்தியாவில் 2 கோடியே 10 லட்சம் பெண் குழந்தை களை, அவர்களின் பெற்றோர்கள் ‘தேவையில்லாமல் பெற்று விட்டோம்’ என்று கருதுவதாக கடந்த ஜனவரியில் வெளியான இந்திய பொருளாதார ஆய்வறிக்கை யில் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த 2016ம் ஆண்டில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகியுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாலியல் பலாத்காரம் தொடர்பாக பதிவான வழக்குகளில் 229 மட்டுமே தீர்ப்பு அளிக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் அதிகரித்து வரும் சூழலில் காஷ்மீரில் இருக்கும் கத்துவா என்ற கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுமி ஆசிஃபா 7 பேரால் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அமைப்பினர் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

தற்போது இந்த கொலை மற்றும் பலாத்கார வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த கொலை சம்பவமும், அந்த சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது பற்றி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில் இந்த சம்பவத்திற்கு முக்கிய காரணம், மற்றும் முதல் குற்றவாளி என்று முன்னாள் அரசு அதிகாரி சாஞ்சி ராம் பெயர் இடம்பெற்றுள்ளது. மேலும் ஒரு காவல்துறை அதிகாரியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. வழக்கில் இரண்டு சிறுவர்கள் குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது ஆசிஃபா காட்டுப்பகுதியில் குதிரை மேய்ப்பதை பலமுறை சாஞ்சி ராமும் அவரது மகன் விஷால் கவனித்துள்ளனர். கடந்த ஜனவரி 10ம் தேதி அந்த சிறுமியை பின் தொடர்ந்து கடத்தி இருக்கிறார்கள். ஆசிஃபாவிற்கு கொடூரமான மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்துள்ளனர். மயக்க மருந்துகளை தினமும் கொண்டு வந்து, 7 நாட்கள் கோவிலில் வைத்து ஆசிஃபாவை பலாத்காரம் செய்துள்ளனர். இந்நிலையில் மீண்டும் பலாத்காரம் செய்துவிட்டு, பின் அந்த சிறுமியை கொலை செய்ய முடிவெடுத்து இருக்கிறார்கள். அந்த பெண்ணின் கழுத்தை அழுத்தி தீபக் காஜூரியா கொலை செய்ய முயற்சித்துள்ளார். ஆனால் அதில் ஆசிஃபா மரணம் அடையவில்லை. கடைசியாக தலையில் கல்லால் அடித்து மரணம் அடைந்ததை உறுதி செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், வழக்கை தானாக முன்வந்து (suo motu) விசாரணைக்கு எடுத்துள்ளது சுப்ரீம் கோர்ட். இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவிடாமல் போலீசாருக்கு முட்டுக்கட்டை போட்டதாக காஷ்மீரை சேர்ந்த வழக்கறிஞர்கள் சிலர் மீது புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து விளக்கம் கேட்டு சுப்ரீம் கோர்ட் இந்திய பார் கவுன்சில், ஜம்மு மற்றும் காஷ்மீர் பார் கவுன்சில், கதுவா பார் அசோஷியேஷன் ஆகியவற்றுக்கு, சுப்ரீம் கோர்ட் இன்று நோட்டீஸ் அனுப்பி வரும் 19ம் தேதிக்குள் இதற்கு பதில் அளிக்கவும் சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

அதே சமயம் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படம், அடையாளங்களை வெளியிட்ட ஊடகங்களுக்கு டெல்லி ஐகோர்ட்ம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தை டெல்லி உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து இன்று விசாரணைக்கு எடுத்தது. டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கீதா மிட்டல், நீதிபதி சி ஹரி சங்கர் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்தனர்.

நீதிபதிகள் கூறுகையில், ‘காஷ்மீர் மாநிலம், கதுவா பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது தொடர்பான செய்திகளை செய்தி சேனல்களிலும், பத்திரிகைகளிலும் பார்த்தோம். இதில் பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தது மிகவும் துரதிருஷ்டமாகும், உண்மையில் எங்களை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்குகிறது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படத்தை, அடையாளத்தை, பெயரை வெளியிடக்கூடாது என்பது ஊடகங்களுக்கு தெரியாதா?. இதுபோன்ற பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்களையும், பெயர்களையும், அடையாளங்களையும் வெளியிடுதல் என்பது அவர்களின் தனிப்பட்ட, அந்தரங்க உரிமையை மீறுவதாகும், அவர்களை அவமானப்படுத்துவதாகும்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் அந்தரங்க, தனிப்பட்ட உரிமைகள் எந்தவிதத்திலும், எந்த சூழலிலும் மீறப்படுவதை நாங்கள் அனுமதிக்க முடியாது.

குழந்தைகள் பலாத்கார தடுப்புச்சட்டமாக ‘போஸ்கோ’ சட்டத்தில் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட குழந்தைகள், சிறுமிகளின் புகைப்படம், பெயர், அடையாளங்களை வெளியிடக்கூடாது என்று இருப்பது ஊடகங்களுக்கு தெரியவில்லையா.

கூட்டுப்பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட அந்த 8வயது சிறுமியின் புகைப்படத்தையும் அடையாளங்களையும் வெளியிட்ட ஊடகங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என்பது குறித்து விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம்.

இனிவரும் காலங்களில் பாலியல்ரீதியாக பாதிக்கப்பட்டவர்களின் பெயர், புகைப்படம், அடையாளம், அவர்கள் படிக்கும் பள்ளி உள்ளிட்ட எந்தவிவரங்களையும் ஊடகங்கள் வெளியிடக்கூடாது”என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

ஆனாலும் இந்த வழக்கையும் ட்ரெண்டிங்குக்காக எடுத்து கொள்ளாமல் விரைவாக விசாரிக்க வேண்டும் என்று பலரும் சொல்லி வருகிறார்கள்