கருணாநிதி ஹெல்த் கண்டீசன்: 24 மணி நேரம் போனாதான் எதுவும் சொல்ல முடியுமாம்! – AanthaiReporter.Com

கருணாநிதி ஹெல்த் கண்டீசன்: 24 மணி நேரம் போனாதான் எதுவும் சொல்ல முடியுமாம்!

தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் 24 மணி தாண்டிய பிறகு தான் நிலைமையை சொல்ல முடியும் என்றும் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு முதல் கருணாநிதி மூச்சுத் திணறல் காரணமாக காவேரி மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நுரையீரலுக்கு அதிக ஆக்ஸிஜனை செலுத்தும் டிரக்கியோஸ்டமி அறுவை சிகிச்சையும் அவருக்கு செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று காவேரி மருத்துவ மனையின் செயல் இயக்குநர் அரவிந்தன் செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”கருணாநிதி யின் உடல்நிலையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. வயது மூப்பு காரணமாக, கருணாநிதியின் உடல் உறுப்புகளை இயங்க வைப்பது பெரும் சவாலாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை தொடர்பாக, 24 மணி நேரத்திற்கு பின்னரே, எதையும் தெரிவிக்க முடியும் எனவும், தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானதையடுத்து, காவேரி மருத்துவமனை முன்பு, திமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

கருணாநிதியின் தற்போதைய மருத்துவ அறிக்கை சாராம்சம் இதுதான் .!

➤”சவாலான நிலைக்கு சென்றுவிட்டது திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை”
➤”உடல்நிலை பற்றி அடுத்த 24 மணி நேரத்திற்கு பிறகுதான் எதையும் சொல்ல முடியும்”
➤ “முதுமையால் கருணாநிதியின் உடல் உறுப்புகளின் செயல்பாடு மோசமடைந்துள்ளது”
➤”கருணாநிதியின் உயிர்வாழ் உடல் உறுப்புகளை தொடர்ந்து செயல்பட வைப்பது சவாலாக உள்ளது”
➤”கருணாநிதி தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார்”

இதனிடையே இந்த 10 நாட்களில் முதல் முறையாக கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் மருத்துமனைக்கு வந்திருக்கிறார். மற்ற குடும்ப உறுப்பினர்களும் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். முன்னதாக காலையில் கருணாநிதியின் உடல் நிலை பின்னடைவு ஏற்பட்டதாக, நலம் விசாரிக்க வந்த காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார். அவர் கூறியதாவது “ காலையில் மருத்துவமனைக்கு வந்தேன். அவரது உடல் நிலையில் சிறிது பின்னடைவு ஏற்பட்டது. பின்னர், முன்னேற்றம் பெற்றது. இப்போது கருணாநிதியின் உடல் நிலை சீராக உள்ளது. மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார். அவர் விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்” என்று அவர் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

தொடர்ந்து 10 நாட்களாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தி.மு.க தலைவர் கருணாநிதியை, குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரள முதல்வர் பினராய் விஜயன், ரஜினிகாந்த், கமல் போன்ற முக்கிய அரசியல் தலைவர்களும், சினிமா துறையை சேர்ந்தவர்களும் நேரில் வந்து நலம் விசாரித்துச் சென்றனர்.