முரசொலி பவள விழாவில் கருணாநிதி கலந்து கொள்ள வாய்ப்பில்லை! – முக ஸ்டாலின் கடிதாசு! – AanthaiReporter.Com

முரசொலி பவள விழாவில் கருணாநிதி கலந்து கொள்ள வாய்ப்பில்லை! – முக ஸ்டாலின் கடிதாசு!

திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் தன் கட்சி தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், “என் உயிருடன் கலந்த தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் வழி மேல் விழி வைத்து எழுதும் வரவேற்பு மடல். தலைவர் கலைஞர் அவர்களின் மூத்த பிள்ளை என்ற பெருமைக்குரியது கழகத்தினரின் கை வாளாய் பாதுகாப்புக் கேடயமாய் விளங்கும் முரசொலி நாளேடு. அது 75 வயது நிறைவடைந்து பவள விழா காணும் பெருமைமிகு நிகழ்வில், தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகள் அனைவரும் பங்கேற்க விரும்பி இந்த அன்பான அழைப்பினை விடுக்கிறேன். தன் இளமைப் பருவத்தில் திராவிட இயக்கக் கொள்கைகளை இதயத்தில் ஏந்தி, புலி-வில்-கயல் சின்னங்கள் பொறித்த தமிழ்க்கொடியை கைகளில் ஏந்தி, ‘ஆதிக்க இந்தி மொழிக்கு இந்த மண்ணில் இடமில்லை’, என்று தமிழ்காக்கும் போரில் ஈடுபட்ட தலைவர் கலைஞர் அவர்களின் சிந்தனைகளை ஏந்தி நின்ற இதழ்தான் முரசொலி.

நாடகம், திரைப்படம், தொலைக்காட்சி எனத் தலைவர் கலைஞர் அவர்களின் படைப்புகள் வெற்றிக்கொடி நாட்டாத துறைகளே இல்லை. எந்தத்துறையாக இருந்தாலும் அங்கே தன் கொள்கை முழக்கத்தை முன்வைத்து, மக்கள் மனதில் பதியவைத்த பாங்கு தலைவர் கலைஞர் அவர்களின் எழுத்தாற்றலுக்கு உண்டு. அவரின் மூத்த பிள்ளையான முரசொலியின் நெடிய பயணமும் திராவிட இயக்கத்தின் கொள்கை முழக்கமாக – தமிழர் நலம் காக்கும் உரிமைக் குரலாக அமைந்துள்ளது என்றால் மிகையில்லை.

திருவாரூர் ஓடம்போக்கி ஆற்றினைக் கடந்து முரசொலி இதழ்களைத் தூக்கிச் சுமந்து, துண்டறிக்கையாக அதனை வெளியிட்ட காலம் முதல், இன்று சென்னையில் தனி அலுவலகத்துடன் – தனித்துவம் மிக்க செய்திகளுடனும் உயரிய தொழில்நுட்பத்துடனும் வெளியாகும் காலம் வரை முரசொலி கடந்த வந்தப் பாதையும், அந்தப் பாதையில் சந்தித்த இடர்ப்பாடுகளும் – நெருக்கடிகளும், அவை அனைத்தையும் எதிர்கொண்டு ‘இன்றைய செய்தி நாளைய வரலாறு’ என்று தன் தலைப்பில் சூடியுள்ள பொன்மொழிக்கேற்ப ஒவ்வொரு செய்தியையும் வரலாறாக்கிய பெருமை முரசொலிக்கு உண்டு. அந்தச் சிறப்புமிக்க வரலாற்றின் ஒவ்வொரு அங்குலமும், முரசொலி பவளவிழா மலரில் மிக நேர்த்தியாகவும் நேர்மையாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

திராவிட இயக்க ஆய்வாளர் அண்ணன் க.திருநாவுக்கரசு அவர்களின் பொறுப்பில் தயாராகியுள்ள இந்த மலர், பவளவிழாவில் வெளியிடப்படவிருக்கிறது. அதுமட்டுமா? 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ந் தேதி தொடங்கப்பட்ட முரசொலி இதழின் 75ஆம் ஆண்டு விழாவைக் குறிப்பிடும் வகையில், எதிர்வரும் ஆகஸ்ட் 10, 11 ஆகிய இரண்டு நாட்களில் முரசொலி அறக்கட்டளையின் சார்பில் ‘முப்பெரும் விழா’ நடைபெறவிருக்கிறது. ஆண்டுதோறும் செப்டம்பரில்தானே தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – கழகம் ஆகியவற்றின் பிறந்தநாளை முப்பெரும்விழாவாகக் கொண்டாடுவோம். இந்தமுறை ஆகஸ்ட்டிலேயே அவசரமாகக் கொண்டாடுகிறோமே என்று நினைத்திட வேண்டாம்.

செப்டம்பரில் வழக்கமாகக் கொண்டாடப்படும் முப்பெரும் விழாவுக்கு முன்னோட்டமாக நடைபெறுகிறது முரசொலி 75ஆம் ஆண்டின் முப்பெரும் விழா. ஆகஸ்ட் 10ந் தேதி காலையில் முரசொலி அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள காட்சி அரங்கத்தின் திறப்பு விழாவிற்குத் தாய்க்கழகமாம் திராவிடர் கழகத்தின் தலைவர், மானமிகு ஆசிரியர் அண்ணன் கி.வீரமணி அவர்கள் தலைமை தாங்குகிறார். திராவிட இயக்கத்தின் முன்னோடி இயக்கமான நீதிக்கட்சி தொடங்கப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை திராவிட இயக்க அரசியலைப் பதிவு செய்தும் விமர்சித்தும் இதழியல் பணியாற்றும் பாரம்பரியம்மிக்க ‘இந்து’ குழுமத்தின் தலைவர் ‘இந்து’ என்.ராம் அவர்கள் காட்சி அரங்கத்தைத் திறந்து வைக்கிறார்.

முரசொலி தொடங்கப்பட்ட காலம் முதல் இன்று வரையிலான வரலாற்றையும் வளர்ச்சியையும் புகைப்படங்கள், ஓவியங்கள், அரிய காட்சிகள் மூலம் கண்முன் நிறுத்தும் இந்த அரங்கம் வெறும் காட்சி அரங்கமன்று, ஓர் அருங்காட்சியகம் என்றால் மிகையாகாது. முரசொலி ஆசிரியர் முரசொலி செல்வத்தின் மேற்பார்வையிலும் வழிகாட்டுதலிலும் இந்தக் காட்சி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் ஏற்பாடுகளை சென்னை மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு. ஜெ.அன்பழகன் மேற்கொண்டு வருகிறார்.

ஆகஸ்ட் 10ந்தேதி மாலையில், தி.மு.கழக ஆட்சிக்காலத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் எண்ணத்தில் மலர்ந்த வடிவமைப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட, சென்னை கலைவாணர் அரங்கில் முரசொலி பவளவிழா வாழ்த்தரங்கம் நடைபெறுகிறது. முரசொலி ஆசிரியர் செல்வம் அவர்கள் வரவேற்புரையாற்றும் இந்த நிகழ்வில், தலைவர் கலைஞர் அவர்களால் ‘கலைஞானி’ எனப்பட்டம் சூட்டப்பெற்றவரும், தலைவர் கலைஞர் அவர்களின் அனல் தெறிக்கும் வசனங்களே தனது திரை வாழ்வுக்குப் பாலப்பாடம் எனப் பெருமையுடன் சொல்பவரும், தமிழ்த் திரையுலகை உலகளவில் உற்று நோக்கச் செய்தவருமான திரு.கமல்ஹாசன் அவர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்குகிறார்.

திரைத்துறையிலும் இலக்கியத்திலும் தன் படைப்புத் திறமையால் எண்ணற்ற விருதுகளைக் குவித்து, இளைய சமுதாயத்திற்கு உந்துசக்தியாக விளங்கும் ‘கவிப்பேரரசு’ வைரமுத்து அவர்களும் வாழ்த்துரை வழங்குகிறார். பல பட்டங்களைப் பெற்ற கவிஞருக்கு, ‘கவிப்பேரரசு’ என்றப் பட்டத்தை வழங்கிச் சிறப்பித்த தலைவர் கலைஞர் அவர்களைத் தன் ‘தமிழ் ஆசான்’ எனப் பெருமையுடன் உரைக்கும் திரு. வைரமுத்து அவர்கள், தலைவர் கலைஞர் அவர்களின் தமிழுக்குக் காதலர் என்றால் மிகையில்லை.

திரைக்கலைஞர், கவிஞர் ஆகியோரின் வாழ்த்துகளுடன் முரசொலியை சகோதரப் பாசத்துடன் நேசித்து, அரசியல் தலைவர் என்பதையும் கடந்து மூத்த பத்திரிகையாளர் என்ற தோழமையுடன் தலைவர் கலைஞர் அவர்களுடன் பழகும் தமிழ் இதழ் உலகின் முன்னோடி பத்திரிகையாளர்களான ‘இந்து’ என்.ராம், தினத்தந்தி குழும அதிபர் திரு. பாலசுப்ரமணிய ஆதித்தன், ஆனந்தவிகடன் குழுமத்தின் மேலாண் இயக்குநர் திரு. பா.சீனிவாசன், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத் தலைவர் திரு. மனோஜ்குமார் சந்தாலியா, தினமலர் ஆசிரியர் திரு. ரமேஷ், நக்கீரன் இதழின் ஆசிரியர் ‘நக்கீரன்’ கோபால், டெக்கான் கிரானிக்கள் ஆசிரியர் திரு. பகவான் சிங், டைம்ஸ்ஆஃப் இந்தியா ஆசிரியர் திரு. அருண்ராம், தினகரன் செய்தி ஆசிரியர் திரு. மனோஜ்குமார் உள்ளிடடோர் வாழ்த்தி மகிழ்கின்றனர். முரசொலி நிர்வாக மேலாண்மை இயக்குநரான திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நன்றியுரை ஆற்றுகிறார். வாழ்த்தரங்க நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை சென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. பி.கே.சேகர்பாபு அவர்கள் செய்து வருகிறார்.

ஆகஸ்ட் 11ம் தேதி மாலையில் சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் முரசொலி பவளவிழாப் பொதுக்கூட்டம் சிறப்பான முறையிலே நடைபெறவிருக்கிறது. அரசியல் இயக்கத்தின் கொள்கை முழக்கமாக 75 ஆண்டுகளாக வெளியாகும் முரசொலி இதழ், ஒரு முழுமையான செய்திப் பத்திரிகைக்குரிய வகையில் தலைப்புச் செய்திகள், தலைவர் கலைஞர் அவர்களின் எழுத்தோவியங்கள், அவரே வரைந்த கார்ட்டூன்கள், புகழ்மிக்க கார்ட்டூனிஸ்ட்டுகளின் கேலிச்சித்திரங்கள், புகைப்படங்கள், ஆதாரப்பூர்வமான ஆவணங்களுடனான கட்டுரைகள், நாட்டு நடப்புகளை நகைச்சுவையுடன் வெளியிடும் உரையாடல்கள், இலக்கியப் பகுதிகள், தமிழர் திருநாளாம் பொங்கல் – தலைவர்களின் பிறந்தநாள்விழா மலர்கள் என அனைத்து வகையான தகவல்களையும் உள்ளடக்கி வெளியாகும் இதழ் என்பதால் கழகத்தினர் மட்டுமின்றி, மற்ற இயக்கத்தினரும் முரசொலியின் வாசகர்களாக இருக்கிறார்கள் என்பதை மறுத்திட முடியாது.

மாற்றுக் கொள்கை கொண்டோரும், அரசியல் களத்தில் எதிர்நிலையில் நிற்பவர்களும் கூட முரசொலியில் தலைவர் கலைஞர் அவர்கள் என்ன சொல்லியிருக்கிறார் என்பதைப் பொறுத்தே வினையாற்றும் நிலையை அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாகத் தமிழகம் கண்டு வருகிறது.அந்தவகையில், முரசொலி பவளவிழாக் கூட்டத்தில் கழகத்தின் கூட்டணிக் கட்சியினர், தோழமைக் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்கள். இந்தப் பொதுக்கூட்டத்திற்கு கழகப் பொதுச்செயலாளர் பெருந்தகை இனமானப் பேராசிரியர் அவர்கள் தலைமை வகிக்க, கழக முதன்மைச் செயலாளர் அண்ணன் துரைமுருகன் அவர்கள் வரவேற்புரை ஆற்றுகிறார்.

முரசொலி பவளவிழா மலரைப் பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான திரு. இரா.நல்லகண்ணு அவர்கள் வெளியிட, முரசொலியின் முதல் மேலாளராகப் பணியாற்றிய திரு. சி.டி.தட்சிணாமூர்த்தி அவர்கள் பெற்றுக்கொள்கிறார்.தொடர்ந்து நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் திரு. கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு.திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழு உறுப்பினர் திரு. டி.கே.ரங்கராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில குழுச் செயலாளர் திரு. ஆர்.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் திரு. கே.எம்.காதர்மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. தொல்.திருமாவளவன், எம்.ஜி.ஆர்.கழகத் தலைவர் திரு. ஆர்.எம்.வீரப்பன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் திரு. எம்.எச்.ஜவாஹிருல்லா, இந்திய சமுக நீதி இயக்கத் தலைவர் பேராயர் எஸ்றா. சற்குணம், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் திரு. ஈ.ஆர்.ஈஸ்வரன், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் திரு. சுப.வீரபாண்டியன், தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்கள் கட்சித் தலைவர் திரு. பொன்.குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சி அமைப்பாளர் திரு. என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணன், அகிய இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவனத் தலைவர் டாக்டர் என்.சேதுராமன், உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் திரு. கு.செல்லமுத்து, அகில இந்திய பார்வார்டு ப்ளாக் மாநிலப் பொதுச்செயலாளர் திரு. பி.வி.கதிரவன், தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனத் தலைவர் திரு. தி.வேல்முருகன், ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் திரு. அதியமான், தமிழ் மாநில தேசிய லீக் பொதுச் செயலாளர் திரு. திருப்பூர் அல்தாப், தேசிய லீக் தலைவர் திரு. பஷீர் அகமது, அகில இந்திய வல்லரசு பார்வார்டு ப்ளாக் அமைப்பின் திரு. பி.என்.அம்மாவாசி, கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

பவளவிழாவில் பங்கேற்பதற்கான அன்பு அழைப்பினை இன்னும் பல அரசியல் தலைவர்களுக்கும் அரசியல் மாச்சரியமின்றி அனுப்பியுள்ளோம். அவர்களும் தங்கள் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்திருப்பதுடன், வாய்ப்பிருப்பின் நேரில் வருகை தருவதாகத் தெரிவித்துள்ளனர்.பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவோருக்கும் வருகை தந்து சிறப்பிக்கும் பிரமுகர்களுக்கும் முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் என்ற முறையில் நன்றி தெரிவித்து நான் உரையாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு மேடையில் நன்றி தெரிவிக்கும் நிலையில், தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளான உங்களை வரவேற்க வாசலில் காத்திருப்பேன்.

தனது மூத்த பிள்ளையான முரசொலி வாயிலாக, ‘உடன்பிறப்பே..’ என்று ஒவ்வொரு நாளும் உங்களுடன் உரையாடியவர் தலைவர் கலைஞர் அவர்கள். அவரது கடிதங்கள், அறிக்கைககள், கேள்வி – பதில்கள், சொற்பொழிவு கள் அனைத்தையும் ஏந்திவந்து உங்களிடம் சேர்த்தது முரசொலி எனும் மூத்த பிள்ளைதான். இன்று உடல்நலன் குன்றியிருக்கும் நம் தலைவரால் தனது மூத்த பிள்ளையின் பவளவிழாவில் பங்கேற்கும் வாய்ப்பு இல்லா விட்டாலும் அவரது மனம் அந்த விழாவிலேயே சுழன்று கொண்டிருக்கும். தனது மனக்கண்ணால் தன் அன்பு உடன்பிறப்புகளைக் கண்டு அக மகிழ்வார். அந்த உணர்வுடன் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் தலைவர் கலைஞர் அவர்களின் உடன்பிறப்புகள் குவிந்து, கொள்கை முரசொலிப்பதே இத்தனைக் காலமாக அவர் ஓய்வின்றிப் பட்ட அரும்பாடுகளுக்கு நாம் சேர்க்கும் பெருமையாகும்.தலைவர் கலைஞர் அவர்களின் மூத்த பிள்ளைக்கு கொண்டாடப்படும் கோலாகல பவளவிழாவில், அதன் இளைய சகோதரனாக நான் முன்னின்று அன்புடன் ” என்று முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.