அஸ்க்கு.., புஸ்ஸூகு.. இந்த எலெக்சனிலே ஜெயிச்சது நாங்களாக்கும்! – கருணாநிதி கணக்கு!

அஸ்க்கு.., புஸ்ஸூகு.. இந்த எலெக்சனிலே ஜெயிச்சது நாங்களாக்கும்! – கருணாநிதி கணக்கு!

“திமுக இந்தத் தேர்தலில் வெற்றி முகட்டினை சட்ட ரீதியாக எட்டிப் பிடிப்பதில் மிகச் சிறிய இடைவெளி ஒன்று ஏற்பட்டு விட்டது என்பது தான் உண்மை. மேலும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதாகச் சொல்லிக் கொள்ளலாமே தவிர, உண்மையில் கடந்த தேர்தலுக்கும், இப்போதைய தேர்தலுக்கும் உள்ள புள்ளி விவரங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், தி.மு.கழகம் வெற்றி பெற்றிருக்கிறதா இல்லையா? “என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

karuna may 22

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “தற்போது நடைபெற்ற 234 தொகுதிகளுக்கான தேர்தலில், அ.தி.மு.க. அணி 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்திலே தான் போட்டியிட்டன. திராவிட முன்னேற்றக் கழகம் 174 இடங்களில் போட்டியிட்டது. இதில் அதிமுக. 134 இடங்களிலும், திமுக கூட்டணி 98 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த 98 இடங்களில், தி.மு.கழகம் 89 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 8 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

திமுகவும் அதிமுகவும் நேரடியாக போட்டியிட்ட 172 இடங்களில், திராவிட முன்னேற்றக் கழகம் 89 இடங்களில் வென்றுள்ளது. திமுக கூட்டணியில், கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட 51 இடங்களை அதிமுக கைப்பற்றியுள்ளது.தோழமைக் கட்சிகளைப் பற்றி குறை கூறுவதற்காக நான் இதையெல்லாம் சொல்கிறேன் என்று யாரும் தவறாக கருதிடக் கூடாது. தி.மு.கவை ஆதரிக்கவே மக்கள் முனைந்தார்கள் என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவே இந்த விவரங்களைத் தெரிவிக்கிறேனே தவிர, கூட்டணிக் கட்சிகளை குறை கூறுவதற்காக அல்ல.

மேலும், கடந்த 2011 ஆம் ஆண்டு தேர்தலைவிட, தற்போது திமுக கூட்டணியின் வாக்குகள் 36.61 லட்சம் அதிகரித்துள்ளது.
வேட்பாளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதாகச் சொல்லிக் கொள்ளலாமே தவிர, உண்மையில் கடந்த தேர்தலுக்கும், இப்போதைய தேர்தலுக்கும் உள்ள புள்ளி விவரங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், தி.மு.கழகம் வெற்றி பெற்றிருக்கிறதா இல்லையா?

23 இடங்களில் மட்டுமே இருந்த திமுக, ஐந்தாண்டுகளுக்குப் பிறகு 89 இடங்கள் என்ற அளவுக்கு, அதாவது சுமார் நான்கு மடங்கு உறுப்பினர்கள் கூடுதலாகி இருக்கிறார்கள் என்றால், அது வெற்றியா? தோல்வியா?அதே நேரத்தில் 234 இடங்களிலும் போட்டியிட்ட அதிமுக 134 இடங்களை மட்டுமே வென்றுள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், அதிமுக. வேட்பாளர்கள் 2 தொகுதிகளில் 100 வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசத்திலும், 8 தொகுதிகளில் 101 முதல் 1000 வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசத்திலும், 21 தொகுதி களில் 1001 முதல் 5000 வரையிலான வாக்குகள் வித்தியாசத்திலும், 22 தொகுதிகளில் 5001 முதல் 10000 வரையிலான வாக்குகள் வித்தியாசத்திலுமாக மொத்தம் 53 தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றி ருக்கிறார்கள்.

இந்தப் புள்ளி விவரங்களையெல்லாம் பார்க்கும்போது, திராவிட முன்னேற்றக் கழகம் இந்தத் தேர்தலில் வெற்றி முகட்டினை சட்ட ரீதியாக எட்டிப் பிடிப்பதில் மிகச் சிறிய இடைவெளி ஒன்று ஏற்பட்டு விட்டது என்பது தான் உண்மை. ஆனால் தமிழக வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வலிவுடன் சட்டப் பேரவையில் எதிர்க்கட்சியாகச் செயல்படக் கூடிய வாய்ப்பு திராவிட முன்னேற்றக் கழகத்திற்குக் கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பினை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தி, தமிழகச் சட்டப் பேரவையில் ஆக்கப் பூர்வமான வகையில் நல்லதோர் எதிர்க்கட்சியாக மக்களின் பிரச்சினைகளை முன் வைத்துப் பணியாற்றும் என்ற நம்பிக்கையை தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் கருணாநிதி.

error: Content is protected !!