சிவகங்கையில் காங்கிரஸ் சார்பில் களம் இறங்குபவர் – கார்த்தி சிதம்பரம்! – AanthaiReporter.Com

சிவகங்கையில் காங்கிரஸ் சார்பில் களம் இறங்குபவர் – கார்த்தி சிதம்பரம்!

வர இருக்கும் பார்லிமெண்ட் தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் 20 பேரில் 6 பேர் மூத்த நிர்வாகிகளின் மகன் அல்லது மகள்களாக இருக்கின்றனர். அதிமுகவில் கூட இந்த எண்ணிக்கை 4-ஆக இருக்கிறது. அதே சமயம் இது வாரிசு அரசியல் இல்லை என்றும், கட்சிக்காக கடுமையாக உழைத்தவர்கள், விசுவாசிகள், மக்கள் ஆதரவு கொண்டவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக இரு கட்சிகளும் இந்த விமர்சனங்களை மறுத்து வரும் சூழலில் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகின்றார்.

17வது மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் கட்சிகள் சில தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இன்னும் வெளியிடவில்லை. தமிழகத்தில் பிரதான கட்சிகளாக திமுகவும், அதிமுகவும் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து பரப்புரையையும் மும்மரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

பாஜக தனது 5 வேட்பாளர்களை முழுமையான அறிவித்த நிலையில், காங்கிரஸ் 9 வேட்பாளர் களை மட்டும் அறிவித்தது. சிவகங்கை தொகுதிக்கு மட்டும் வேட்பாளரை அறிவிக்காமல் இருந்தது. சிவகங்கை தொகுதியை பொருத்தவரையில் முன்னதாகவே தேர்தல் பணிகளை, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தொடங்கியிருந்தார். ஆனால் கார்த்தி சிதம்பரம் மீது வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அவருக்கு வாய்ப்பளிக்க கட்சி மேலிடம் மறுப்பதாக தகவல் வெளியாகியது.

வேட்பாளர் அறிவிப்பில் தாமதம் குறித்து பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, “ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு தான் பதவி” என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி முடிவெடுத்து உள்ளதால் தான் சிவகங்கை தொகுதியில் வேட்பாளர் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்தார். மேலும் நாடு முழுவதும் 40 இடங்களில் காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு பதவி கேட்டுள்ளனர். எனவே சிவகங்கை போன்று 40 இடங்களில் உள்ள தலைவர்களிடம் ராகுல் இன்று இதுகுறித்து பேச உள்ளார் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், சிவகங்கை தொகுதியில் கார்த்திக் சிதம்பரம் போட்டியிடுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. அதனால், காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் நிலவிய இழுபறி முடிவுக்கு வந்துள்ளது. சிவகங்கை தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா களமிறங்குகிறார். அமமுக சார்பில் வி. பாண்டி என்பவர் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.