மாசு கலந்த கழிவு நீரை கர்நாடக அரசு காவிரி ஆற்றின் மூலமாக தமிழகத்துக்கு திறந்துவிடுகிறது! – AanthaiReporter.Com

மாசு கலந்த கழிவு நீரை கர்நாடக அரசு காவிரி ஆற்றின் மூலமாக தமிழகத்துக்கு திறந்துவிடுகிறது!

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள  அறிக்கையில், ‘ உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் கூறியது 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது என்பதே.  காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தவிர்த்து மத்திய அரசுக்கு மாற்று வழியில்லை என டெல்லி கூட்டத்தில் அரசு எடுத்து கூறியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம், நீர் ஒழுங்காற்று குழு என காவிரி நடுவர்மன்ற ஆணையில் கூறப்பட்டு உள்ளது.காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வேண்டும் என டெல்லி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.  மத்திய அரசை வலியுறுத்தி நாடாளு மன்றத்திலும் தமிழக எம்.பி.க்கள் போராடி வருகின்றனர். காவிரி நீரை ஆதாரமாக கொண்ட விவசாயிகளின் நலனை பேணி பாதுகாக்க ஜெயலலிதா வழியில் தமிழக அரசு செயல்படும்’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக  காவிரி நதி நீர் விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது குறித்து, மத்திய நீர்வளத்துறை சார்பில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். உச்சநீதிமன்றம் விதித்துள்ள கெடுவுக்குள், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தியது. காவிரி நடுவர் மன்றத்தின் ஆணைகளை திறம்பட செயல்படுத்துவதற்கான அனைத்து அதிகாரங்களையும் கொண்ட அமைப்புகளாக அவை இருக்க வேண்டும் எனவும், தமிழக அதிகாரிகள் வலியுறுத்தினர். இந்த கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது பற்றி தீர்ப்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என கர்நாடகா அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நீர்வளத்துறை செயலாளர் உபேந்திர பிரசாத் சிங், உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில், மாநிலங்களுக்கு இடையேயான நீர்த்தகராறு சட்டத்தின் அடிப்படையில் திட்டம் ஒன்றைச் செயல்படுத்து மாறு கூறியிருப்பதாக தெரிவித்தார். அதன் செயல்பாடு, பொறுப்பு மற்றும் பங்களிப்பு எத்தகையதாக இருக்க வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட வேண்டி இருப்பதாகவும் அவர் கூறினார். இந்நிலையில், காவிரி விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. டெல்லியில் நடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட அம்சங்களை, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட அதிகாரிகள், முதலமைச்சரிடம் விவரித்தார்கள்.

இதனிடையே கர்நாடகாவில் இருந்து மாசு கலந்த கழிவு நீரை காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறந்துவிடப்படுவதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதாவது கர்நாடக அரசு காவிரி நீரில் மாசு கலந்த கழிவு நீரை தமிழகத்துக்கு திறந்து விடுகிறது. காவிரியில் கழிவு நீர் திறந்துவிடுவதை தடுக்கக் கோரி தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் காவிரியில் மாசு கலந்த கழிவு நீர் கலப்பது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த இடைக்கால அறிக்கையில், “பெங்களூருவில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சிற்றாறுகளின் மூலம் காவிரி நதியில் கலக்கிறது. இந்த மாசு கலந்த கழிவு நீரை கர்நாடக அரசு காவிரி ஆற்றின் மூலமாக தமிழகத்துக்கு திறந்துவிடுகிறது”இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இந்த அறிக்கையால், காவிரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்கும் வழக்கில் தமிழகத்துக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளதாக தெரிகிறது.