கனா – திரை விமர்சனம்!

கனா – திரை விமர்சனம்!

சினிமாவில் கனா காட்சிகள் வருவது இயல்புதான்.. ஆனா கனா என்ற பெயரில் ஒரு சினிமா-வை அதுவும் கண்டவர்கள் அனைவரும் ஆசைப்படும் சினிமாவை எடுத்து அசத்தி இருக்கிறார்கள் சிவ கார்த்திகேயனும், அருண காமராஜும். இவர்கள் கண்ட கனாவுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் என்ற மட்டை கிடைத்தது அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். தமிழில் புராணம், காதல், பாசம், சண்டை, பகை, காமெடி, பேய் என்று எத்தனையோ வெரைட்டிக் கதைகள் எக்கச்சக்கமாக வந்த நிலையில் விளையாட்டை மையப்படுத்தி வந்த கதைகள் என்னவோ கொஞ்சம் குறைச்சல்தான்.

அதிலும் நீச்சல், ஹாக்கி, கபடி, குத்துச் சண்டை, கிரிக்கெட் என்று நாலைந்து விளையாட்டை மையப்படுத்திதான் வந்துள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ஓட்டப்பந்தயத்தில் சாதிக்கும் ஒரு ஏழை பெண்ணின் வாழ்க்கையை கண் முன் கொண்டு வந்து நிறுத்திய படம் எதிர் நீச்சல்.விளையாட்டில் உள்ள அரசியலால் ஒரு வீராங்கனையின் கனவு எப்படி சிதைந்து போகிறது என்பதை விரிவாக பேசிய படமும் இது. ஒரு மீனவ குடும்பத்தை சேர்ந்த பெண் குத்துச் சண்டை யில் உலக சாதனையை எப்படி எட்டிப் பிடிக்கிறார் என்பதை காட்டிய படம் இறுதிச் சுற்று. பயிற்சி யாளராக மாதவன், குத்துச்சண்டை வீராங்கனையாக ரித்திகா சிங் நடித்த இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். அந்த வகையில் வெளியாகி ஹிட் அடித்த விளையாட்டுப் பட வரிசையில் பெண்கள் கிரிக்கெட் குறித்தும் கூடவே இந்தியாவின் முதுகெலும்பாக இருந்து நொடிந்து போன விவசாயத்தையும் இணைந்தே அலசி இருக்கிறது கனா படம்..

விவசாயி முருகேசன் (சத்யராஜ்) மகள் கெளசல்யா. சொந்த அப்பா இழப்பிற்கு கூட அழாத சத்ய ராஜ், கிரிக்கெட்டில் இந்தியா தோற்றதற்கு கண்ணீர் விடுவதைக் கண்டு, கெளசல்யா அந்தக் கிரிக்கெட் மீது சிறு வயதிலே மையல் கொள்கிறார். கூடவே தானே கிரிக்கெட் விளையாடி இந்தியாவை ஜெயிக்க வைத்து தனது அப்பாவை சிரிக்க வைக்க வேண்டும் என்றும் ஆசை கொள்கிறார். அதையொட்டி ஆண்கள் மட்டுமே கிரிக்கெட் ஆடும் ஒரு கிராமத்தில்,  கிரிக்கெட் விளையாடி, உரிய பயிற்சி பெற்று இந்திய மகளிர் அணியில் சேர எப்படியெல்லாம் போராடுகிறார் என்பது தொடங்கி விளையாடுவதில் உள்ள பல்வேறு சூட்சமங்களை, அதிலுள்ள வலியையும், ரொம்ப யதார்த்தமாக சொல்லி படத்தை சுவைபட கடத்திச் செல்கிறார் இயக்குநர் அருண் ராஜா காமராஜ் .

ஆரம்ப பேராவில் சொன்னது போல் ஐஸ்வர்யா ராஜேஷ்-தான் படத்தை ரன் அவுட் ஆகாமல் பார்த்துக் கொள்கிறார் முகத்தில் மிகக் குறைச்சலான மேக்-அப் போட்டுக் கொண்டு அப்பா செல்ல மாக அதே சமயம் அம்மாவுக்கு பயந்த பொண்ணாக, விளையாட்டு வீராங்கனையாக அது, இது, எது மாதிரியான பிரச்சனைகளையெல்லாம் எதிர்க் கொள்ளும் கதாபாத்திரத்தில் அப்படியே மூழ்கி போய் பிரமிக்க வைத்து விட்டார்.

சத்யராஜ் விவசாயியாக அதிலும் பெரியாரிஸ்ட் ரோலில் வருபவர் ஜமாய்க்காமல் என்ன செய்வார். அம்மாவாக வரும் ரமாவும் தனது கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்துள்ளார். நல்ல கதையோ அல்லது உருப்படியான தயாரிப்பாளர்களோ கிடைக்காத புரொடியூசர் கவுன்சிலுக்கு பூட்டெல்லாம் போடும் இந்தக் கால காலக் கட்டத்தில் தன் நண்பனை கதை சொல்ல சொல்லி அதை கூடவே உட்கார்ந்து செதுக்கி அதையும் தானே தயாரிப்பாளராகி அற்புதமான படத்தையும் ஒரு டைரக்டரையும் கோலிவுட்டுக்கு அளித்து உள்ள சிவாவுக்கு ஸ்பெஷல் உம்மா.

திபு நினன்தாமஸ் இசையில் வாயாடி பெத்த புள்ள…. கேட்ட போதே தாளம் போட வைத்த பாடல் திரையிலும் கவர்கிறது. மற்ற பாடல்களும் ரசிக்கும்படியாக உள்ளது. குறிப்பாக பின்னணி இசை ரொம்ப நீட்.

தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு-க்கு எக்ஸ்ட்ரா கொஞ்சம் கைத் தட்டலாம். விவசாய நிலங்களும், கிராமமும், கிரிக்கெட் காட்சிகளை படமாக்கியிருக்கும் விதமும் அசத்துகிறது.

அப்ப குறைகளே இல்லாத படமா? என்று கேட்டால் இருக்குது.. ஆன அப்படியான குறைகள் அப்பட்டமாக தெரியாத அளவில் எல்லோரும் விளையாடி இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

மொத்தத்தில் ‘கனா’ – மறுபடி, மறுபடி காண நேரிட்டாலும் போரடிக்காத பட்டியலில் சேர்ந்த படம்!

மார்க் 3.75 / 5

error: Content is protected !!