எனக்கு வேலை இருக்கு! – தேர்தலில் போட்டியிடாதது குரித்து கமல் விளக்கம்!

எனக்கு வேலை இருக்கு! – தேர்தலில் போட்டியிடாதது குரித்து கமல் விளக்கம்!

எனக்கு வேலை இருக்கிறது. இந்த பல்லக்கில் நான் பவனி வர விரும்பவில்லை. இந்த பல்லக்குக்கு தோள் கொடுக்க விரும்புகின்றேன். அதுதான் என் வேலை. மேலும் நான் ஒரு கால்டாக்ஸி எனவும், அதில் வேட்பாளர்கள் பயணிக்கட்டும் எனவும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் புதுசாக முளைத்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சி யில் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அரசு வேலைகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு, 5 ஆண்டுகளில் 50 லட்சம் பேருக்கு வேலை, விவசாயிகளுக்கு உற்பத்தி செலவு களுக்கு மேல் 100% லாபம் கிடைக்க நடவடிக்கை, மீனவர்களுக்கு நவீன கருவிகள், சிறுபான்மை யினருக்கு பாதுகாப்பான சூழல், ரேசன் பொருட்கள் வீட்டிற்கு கொண்டு வந்து சேர்க்கப்படும், கல்லூரிகள், அரசு நிறுவனங்கள், பேருந்து நிலையங்களில் இலவச வைஃபை உள்ளிட்ட பல வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதல் மெரினா போராட்டம் வரை தமிழகத்தின் பல்வேறு பிரச்னைகள் குறித்து பிக்பாஸ் போல் குறும்படம் ஒன்றை பிரமாண்ட எல்.இ.டி. திரையில் போட்டுக் காட்டினார் கமல்ஹாசன். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவிட்டதாக குற்றம்சாட்டிய கமல்ஹாசன், அதை நடித்தும் காட்டினார். பிரதமர் நரேந்திர மோடியின் சாதனை தமிழக இளைஞர்கள் அனைவரையும் ட்விட்டருக்குக் கொண்டுவந்தது தான். சவ்கிதார் எனத் தன்னை சொல்லிக்கொள்ளும் பிரதமர் மோடி, ஏழைகளின் காவலர் அல்ல. பணக்காரர்களின் காவலர் என்றும் கமல் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய கமல், “எதிர்க்கட்சித் தலைவர் என்னைப் பற்றிச் சொல்லும்போது, ‘நடிகர்தானே’ என்கிறார். ஆமாம். நடிகன்தான். நேர்மையான நடிகன். வருமான வரி பாக்கி வைக்காத நடிகன். மக்களுக்கு நல்லது நடக்கவேண்டும் என நினைக்கும் நடிகன். என்னை யார் என்று கேட்கிறார் அவர். அதேகேள்வியை அவரைப் பார்த்து, ’நீங்கள் யார்?’ என்று கேட்டால் என்ன பதில் சொல்வார். ‘நான் அப்பாவின் மகன்’ என்று சொல்லுவார். வேறு என்ன சொல்லிவிடமுடியும்?

எனக்கு என்ன தெரியும் என்று கேட்கிறார். 20 ஆயிரம் ரூபாய் கடனுக்காக தூக்கில் தொங்கிய விவசாயிகள் வேதனை எனக்குத் தெரியும். எட்டுமணி நேரம், பத்துமணி நேரம் உழைக்கும் தொழிலாளியின் வலி தெரியும். இளைஞர்களை பூட்ஸ் கால் கொண்டு அடக்கும்போது இளைஞர்களின் அடக்கமுடியாத கோபம் எப்படிப்பட்டது என்பது தெரியும். எல்லாவற்றுக்கும் மேலாக நேர்மையாக இருக்கத் தெரியும். நேர்மையாக இருப்பதை வார்த்தையாக இல்லாமல், வாழ்க்கையாகவே பதில் சொல்லத் தெரியும்.

நடிகன் என்றால் ஏன் இப்படி கோபம் வருகிறது அவர்களுக்கு? ஒரு நடிகரிடம் தோற்றவர்கள் என்பதால்தான் இந்தக் கோபமா? அந்த நடிகர் இருக்கும் வரை, வனவாசத்தில் இருந்தார்களே. அதனால்தான் கோபமா? மீண்டும் ஒரு நடிகர், சட்டப்பேரவைக்கு வந்துவிடக்கூடாது என்று நினைக்கிறார்களா? சட்டப்பேரவையை சட்டைசபை என்று மாற்றியவர்கள்தானே நீங்கள். நான் நல்ல நடிகன் என்று மக்களிடம் பெயர் வாங்கியிருக்கிறேன். அதேபோல், நல்ல அரசியல்வாதி என்றும் மக்களிடம் பெயரெடுப்பேன். அந்த நாள், வெகுதொலைவில் இல்லை”என்று கமல் பேசினார்.

அதே கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் கமல்ஹாசன். மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள பட்டியலில் அக்கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் கோவை தொகுதியிலும், பாடலாசிரியர் சினேகன் சிவகங்கை தொகுதியிலும் போட்டியிடுவதாக கமல் அறிவித்தார். மக்கள் நீதி மய்யம் சார்பில் 18 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களையும் கமல் குறிப்பிட்டார். அப்போது ஒரு வேட்பாளர் கட்சியின் சின்னமான டார்ச் லைட்டை அடித்தவாறு மேடையேறினார்.

இந்நிலையில், கமல்ஹாசன் இன்று (திங்கள்கிழமை) சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தேர்தலில் போட்டியிடாமல் பின்வாங்குவதாக எழுந்துள்ள விமர்சனம் குறித்து கமல்ஹாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், “வேட்பாளராக நிற்பதற்கு தயக்கமில்லை, எனக்கு வேலை இருக்கிறது. இந்த பல்லக்கில் நான் பவனி வர விரும்பவில்லை. இந்த பல்லக்குக்கு தோள் கொடுக்க விரும்புகின்றேன். அதுதான் என் வேலை. இன்று இந்த முகங்கள் தெரியாமல் இருக்கலாம். நாளை இந்த முகங்களை மக்களுக்கு தெரியவைப்பது என்னுடைய கடமை. என்னை ஒரு உபேர் டாக்ஸி போன்று கருதுகிறேன். அதில் வேட்பாளர்கள் பயணிக்கட்டும்.

இதன்மூலம் இன்னும் அதிக மக்களை ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. ஒரு தொகுதியில் நான் நின்றிருந்தால், தொகுதி நலன் கருதி, சுயநலன் கருதி அந்த இடத்திலேயே தங்கியிருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கும். இதனால், ஒவ்வொரு தொகுதிக்கும் நான் இருமுறையாவது செல்ல வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அந்த விமர்சனம் பின்னர் பாராட்டாக மாறும்” என கமல்ஹாசன் தெரிவித்தார்.

பின்னர் 50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற வாக்குறுதி சாத்தியமா என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.

அதற்கு, “சாத்தியமாவதை மட்டுமே நாங்கள் வாக்குறுதிகளாக அளித்துள்ளோம். சாத்தியமில்லாத பெருங்கனவுகளை காட்டி மக்களை மயக்க விரும்பவில்லை. எது சாத்தியமோ அதைமட்டுமே எடுத்துச் சொல்லியிருக்கிறோம். அதனை சொல்வதற்கு முன்னர், இது முடியுமா, முடியாதா என்பதை பல வல்லுநர்களுடன் ஆராய்ந்து தான் முடிவெடுத்திருக்கிறோம்” என கமல்ஹாசன் தெரிவித்து விட்டு விமானமேறி விட்டார் கமல்.

error: Content is protected !!