இந்த கவுன்சிலர் எலெக்‌ஷனெல்லாம் வேண்டாம் :ஸ்ட்ரெய்ட்டா சி. எம்.தான்- கமல் அறிவிப்பு!

இந்த கவுன்சிலர் எலெக்‌ஷனெல்லாம் வேண்டாம் :ஸ்ட்ரெய்ட்டா சி. எம்.தான்-  கமல் அறிவிப்பு!

தமிழகத்தில் 4 மாவட்டங்களிலிருந்து புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர, பிற மாவட் டங்களில் அனைத்துக் கிராமப்புற, ஒன்றிய, மாவட்ட அளவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு அனுமதி வழங்கி சுப்ரீம் கோர்ட் வெள்ளிக் கிழமை தீர்ப்பளித்தது. சம்பந்தப்பட்ட 9 மாவட்டங்களிலும் மறுவரையறைப் பணிகளை முடித்து 4 மாதங் களில் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல் மறு அறிவிப்பாணையை தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி நேற்று சனிக்கிழமை மாலை 4:30 மணியளவில் வெளியிட்டார். இந்நிலையில் இந்த உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மக்களை நீதி மய்யத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அதில், “இப் பெரு மய்யத்தின் குழுக் கூட்டமாகிப் பெருகி, இன்று மக்கள் சக்தியாக மாறிவிட்டது. இதுவே நமது நேற்றைய விமர்சகர்களை இன்றைய ஆதரவாளர்களாக மாற்றியிருக்கிறது என்பது இனிய உண்மை. நம்மைப் பற்றி ஹாஸ்யமும் ஹேஷியமும் ஜோசியமும் பேசியவர்கள், இன்று நம் நலம் விசாாிக்கத் தொடங்கிவிட்டார்கள். தமிழ்நாட்டில் நிகழவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல், முழுமையான மக்களின் தேர்வாக இருக்கப்போவதில்லை எனும் உண்மை அனைவரும் அறிந்ததே. இந்த உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் பங்குபெறுவதால் கிட்டக்கூடிய முன்னேற்றம் சொற்பமானது.

மாற்றத்தை லட்சியமாகக் கொண்டுள்ள மக்கள் நீதி மய்யம், அதைத் தவணை முறையில் பெறுவதில் எந்தச் சாதனையும் இல்லை. மக்கள் நீதி மய்யத்தின் வெற்றிக்கான வித்து, சாதுர்யமோ பண பலமோ அல்ல. நேர்மையும் மக்கள் பலமுமே ஆகும். இத்தேர்தலில், மக்கள் பங்கீடு மிகக் குறைவாக இருக்கும் என்பது உறுதியாகிவிட்டது. ஊழல் கட்சிகள் தங்களுக்குள் போட்டுக்கொண்ட வியாபாரப் பங்கீடு மட்டுமே அரங்கேறப்போகிறது என்பதே பகிரங்கப்படுத்தப்படாத நிஜம். மக்கள் நலன் நோக்கிய பயணமாக இந்த உள்ளாட்சித் தேர்தல் இருக்கப்போவதில்லை.

ஆதலால், மக்கள் நீதி மய்யத்தார் ஏற்கெனவே இரு கட்சிகள் எழுதி இயக்கும் அரசியல் நாடகத்தில் எந்தப் பாத்திரத்தையும் ஏற்க மாட்டோம் என்பதே நமது பிரகடனமாக இருக்க வேண்டும். இதுவே, என் ஆசையும் அறிவுரையும் ஆகும். வரும் ஐம்பது வாரங்களில், மக்கள் நலம் பேணி, நற்பணிகள் செய்வோம். நாளை பறக்கப்போகும் நம் வெற்றிக்கொடியே தமிழகத்தின் அன்னக்கொடியுமாகும் என்பதை மக்கள் உணரச் செய்வோம். 2021 தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதே நம் லட்சியமாக இருப்பின் வெற்றி நிச்சயம்” என்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!