காவேரி மேலாண்மை & ஸ்டெர்லை ஆலை ; பாய்ச்சல் காட்டுகிறார் கமல்!

காவேரி மேலாண்மை & ஸ்டெர்லை ஆலை ; பாய்ச்சல் காட்டுகிறார் கமல்!

நம் விவசாயிகளின் வாழ்வாதாரமான காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி சுப்ரீம் கோர்ட் வெளியானது. அந்தத் தீர்ப்பில், காவிரி நடுவர் மன்றத்தினால் இதுநாள் வரை தமிழகத்துக்கு வழங்கப்பட்டு வந்த 192 டிஎம்சி நீரில் 14.75 டிஎம்சியைக் குறைத்து 177.25 டிஎம்சியாக வழங்க உத்தரவிடப்பட்டது. மேலும் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை 6 வாரத்தில் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது. இந்தக் காலக்கெடு இன்றோடு நிறைவடைந்தது. தர்போது வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனத் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளும் குரல் கொடுத்துவருகின்றன. இதேபோல் தமிழக விவசாயிகளும் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். எனினும் மத்திய அரசு தரப்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று(மார்ச் 29) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள், அதிகாரிகள் உட்படப் பலரும் இதில் கலந்துகொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், சி.வி.சண்முகம், ஓ.எஸ். மணியன், செங்கோட்டையன், துரைக்கண்ணு, திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, தங்கமணி மற்றும் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.
சுமார் 1 மணி நேரம் இந்தக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் காவிரி நதிநீர் விவகாரத்தில் சட்டப்பூர்வமாக எத்தகைய நடவடிக்கைகள் எடுப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனை முடிவுபெற்ற பின்னர் அதிகாரிகளையும் அனுப்பிவிட்டு அமைச்சர்களுடன் தனியாக முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் மூத்த நடிகரும், மக்கள் நீதி மய்யம் என்ற புதுக் கட்சி தலைவருமான கமல்ஹாசன் இன்று நிருபர்களை அழைத்து பேசிய போது, “இரண்டு மாநிலங்களுக்கும் தண்ணீர் வேண்டும். மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது அதற்கான வழி. அதைச் செய்ய வேண்டும். இதில் அரசியல் புகுந்து விளையாடினால், அது ஓட்டு வேட்டைக்கான விளையாட்டு. ‘ஓட்டு வேட்டைக்காக இந்த விளையாட்டை விளையாடாதீர்கள். தயவுசெய்து மக்களுக்கான தேவை என்ன என்பதைப் பாருங்கள்’ என ஏற்கெனவே நான் சொல்லியிருக்கிறேன். ஒவ்வொரு அரசும் தங்களுக்கு வேண்டிய வாதங்களை எடுத்து வைக்கிறார்கள். இங்கே தமிழக அரசு யார் பேரைச்சொல்லி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறதோ, வாரியம் அமைப்பதற்கு அவர்கள் வலியுறுத்தாவிட்டால் அந்தப் பெயருக்கே களங்கம் விளைவிப்பதாக அமையும். எங்கள் கோரிக்கையாக, மக்களின் பிரதிநிதியாக இந்த கோரிக்கையை முன்வைக்க விரும்புகிறேன். அதற்காக, முதல்வரைச் சந்திக்க இன்று நேரம் கேட்டுள்ளேன். நான் மட்டுமின்றி, எல்லாத் தரப்பில் இருந்தும் அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் கருத்து” என்று தெரிவித்தார்.

‘காவிரி விவகாரத்தில் தமிழக முதல்வரை நீங்கள் சந்திப்பதன் மூலம் நல்லது நடக்கும் என நம்புகிறீர்களா?’ என்ற கேள்விக்குப் பதில் அளித்த கமல்ஹாசன், “நம்பிக்கை தான் வாழ்க்கை. நம்பித்தான் ஆக வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது கடினமான காரியம் அல்ல. நினைத்தால் செய்யலாம். மத்திய அரசுக்கு வலுவான எண்ணம் இருந்தால் அதைச் செய்யலாம்” என்றார்.

‘அதிமுக எம்.பி. நவநீத கிருஷ்ணன் தற்கொலை செய்து கொள்வேன் என நாடாளுமன்றத்தில் சொன்னதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’ என்ற கேள்விக்கு, “மனமொடிந்து தற்கொலை செய்து கொள்வதையே ஏற்றுக் கொள்ளாதவன் நான். அரசியல் விளையாட்டுக்காக அப்படிச் சொல்லி விளையாடுவதைப் பித்தலாட்டம் என்றே நான் நினைக்கிறேன். அது செய்ய வேண்டியதில்லை. ஆனால், ராஜினாமா செய்வேன் என்று சொன்னவர்கள், உண்மையிலேயே ராஜினாமா செய்தால் அவர்களுக்கு என் பாராட்டு உரித்தாகும்” என்றார் கமல்ஹாசன்.

‘உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே தீர்வாக இருக்கும்’ என்ற ரஜினிகாந்தின் கருத்து பற்றிய கேள்விக்கு, “ஆதரிக்கிறேன்… நல்ல கருத்து” எனப் பதிலளித்துள்ளார் கமல்ஹாசன்.

மேலும் ”ஸ்டெர்லைட் பிரச்னைக்காக, வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 1) தூத்துக்குடி சென்று மக்களுடன் மக்களாக அமர இருக்கிறேன். நான் போக வேண்டாம் என்றுதான் இருந்தேன். ஆனால், சில பேர் சில காரணங்களுக்காக வர வேண்டாம் என்று சொல்லி இருந்தனர். 47 நாட்களாக அந்தப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. மக்களின் பிரதிநிதியாக அதில் கலந்துகொள்ள வேண்டியது என் கடமை” என்றும் சொன்னார்..

கடந்த வாரம் “ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழக மக்களும் ஊடகங்களும் பங்கு பெற வேண்டும். இந்த ஆலைக்கு எதிரான இப்போராட்டத்தில் தூத்துக்குடி மக்களுடன் நானும் உள்ளேன். புரட்சிக் களம் அழைத்தால் நானும் வருவேன்” எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.  உடனே அங்கு போராட்டத்தை முன்னெடுத்து செல்லும் சிலர் “எந்தக் கட்சியையும் அதைச் சார்ந்த அரசியல்வாதிகளையும் போராட்டக் களத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். கட்சிக் கொடி, கார்கள் அணிவகுப்பு இல்லாமல் தனி ஒருவராக கமல் களத்திற்கு வந்தால் அவரை வரவேற்போம்” என்றனர்.

இதனிடையே  நேற்று (28.03.18) அன்று அந்த  ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டக் குழுவினர் சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து ஸ்டெர்லைட் ஆலையின் விதிமீறல்கள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசி விட்டு தொடர்ந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் கட்சி அலுவலகத்தில் கமலை, போராட்டக் குழுவினர் நேரில் சந்தித்து ட்விட்டரில் ஆதரவு தெரிவித்தற்கு நன்றி தெரிவித்து. கமல் ட்விட்டரில் கூறியபடியே, போராட்டக் களத்துக்கு வர அழைப்பு விடுத்தனர்.  இந்நிலையில்தான் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்த கமல், வரும் ஏப்ரல் 1 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடிக்கு வருவதாகத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!