கமல் கட்சிக்கு கிடைத்த சின்னமான ‘பேட்டரி டார்ச்’-சால் யாருக்கு என்ன லாபம்? – AanthaiReporter.Com

கமல் கட்சிக்கு கிடைத்த சின்னமான ‘பேட்டரி டார்ச்’-சால் யாருக்கு என்ன லாபம்?

நடிகர் கமல் இன்று நடந்த தனது மக்கள் நீதி மய்யம் வழக்கறிஞர்கள் ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் சின்னமான ’பேட்டரி டார்ச்சை’ அறிமுகம் செய்தார். அப்போது காணாமல் போயிருக்கும் பாஜகவை தேடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு கூட இந்த டார்ச்லைட் உதவும் என்று கமல் குரிப்பிட்டார்.

நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகள் அவரவர் சின்னங்களில் போட்டியிடலாம். இதனிடையே இதுவரை குறிப்பிட்ட வாக்குகள் பெறாத அங்கீகாரம் இல்லாத கட்சிகள் மற்றும் புதிய கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்கியுள்ளது. இந்த பட்டியலை தேர்தல் கமிஷன் தனது இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதில் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட உள்ளது.

மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி, உறுப்பினர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை வாங்கி வருகிறது. விரைவில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தங்கள் கட்சிக்கு ‘பேட்டரி டார்ச் ‘ சின்னம் ஒதுக்கியதற்காக தேர்தல் கமிஷனுக்கு கமல், ட்விட்டர் மூலம் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கமல் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,‘‘மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு “பேட்டரி டார்ச்” சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி. பொருத்தமான சின்னம் தான். @maiamofficial தமிழ்நாட்டிற்கும் இந்திய அரசியலுக்கும் ஒளி தரும் புது விளக்காய் இன்று முதல் மிளிரும்’’ எனக் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மக்கள் நீதி மய்யம் வழக்கறிஞர்கள் ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் சின்னமான பேட்டரி டார்ச்சை’ கமல்ஹாசன் அறிமுகம் செய்தார். பின்னர் பேசிய அவர் மக்கள் நீதி மய்யம் இந்த தேர்தலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார்.

தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த கமல், மக்கள் நீதி மய்யம் கட்சி மக்களுடன் கூட்டணி வைத்திருப்பதாகவும், எங்கள் கூட்டணி மிகபலமான கூட்டணி எனவும் தெரிவித்தார். மனசாட்சியுடன் நிகழ்த்திக் காட்டக்கூடிய தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்படும் என தெரிவித்த கமலஹாசன், வரும் 11 முதல் 15 வரை வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

மேலும் எழுவர் விடுதலை தொடர்பாக கருணை காட்ட வேண்டியவர்கள் காட்ட வேண்டும் எனவும், ஏழு பேர் மட்டுமல்ல ஏழரை கோடி பேரையும் பற்றி தற்போது பேச வேண்டும் எனவும் கமல் பேசினார்.

ரஜினியிடம் ஆதரவு கேட்பதை விட அவராகவே கொடுப்பது தான் சிறந்ததாக இருக்கும் எனவும், ஆதரவு கொடுப்பார் எனவும் நம்பிக்கொண்டிருப்பதாகவும் கமல் தெரிவித்தார். மேலும் நாடாளுமன்ற தேர்தலில் தான் நிச்சயம் போட்டியிடப்போவதாகவும் அது எந்த இடம் என்பதை விரைவில் அறிவிப்பேன் எனவும் கமல்ஹாசன் கூறினார்.

அது மட்டுமின்றி டார்ச்லைட்டை வைத்து கமல் அவரது கட்சியை கண்டுபிடிக்கட்டும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த கமலஹாசன், காணாமல் போயிருக்கும் பாஜகவை தேடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு கூட இந்த டார்ச்லைட் உதவும் எனவும் நோட்டா சின்னத்திலாவது பாஜக போட்டியிடலாம் எனவும் தெரிவித்தார்.