கக்கூஸ் ஆவணப்பட இயக்குநர் தோழர் திவயபாரதி அரெஸ்ட்! – AanthaiReporter.Com

கக்கூஸ் ஆவணப்பட இயக்குநர் தோழர் திவயபாரதி அரெஸ்ட்!

கக்கூஸ்’ ஆவணப்பட இயக்குநரும் சமூக செயல்பாட்டாளருமான திவ்யபாரதி 8 வருடங்களுக்கு முன்பு தொடரப்  பட்ட வழக்கில் மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

2009-ல் சட்டக்கல்லூரியில் சட்டம் படித்து வந்தவர் மதுரையைச் சேர்ந்த மாணவி திவ்யபாரதி. அப்போது தலித் மாணவர் விடுதியில் பாம்பு கடித்து சக மாணவர் இறந்துள்ளார். அப்போது தலித் மாணவர்களுக்கான விதிகளை மேம்படுத்தக் கோரியும், இறந்த மாணவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, பல்வேறு மாணவர்கள் இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். அந்த போராட்டம் மதுரை அரசு மருத்துவமனையின் முன்பு நடத்தப்பட்டது.

அப்போது மதுரை மதிச்சியம் போலீஸார் திவ்யபாரதி மீது வழக்கு தொடர்ந்திருந்தனர் இந்த வழக்கு 8 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. இந்நிலையின் இன்று (செவ்வாய்க்கிழமை) மதுரை 2-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் திவ்யா ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது நீதிமன்றம் திவ்யபாரதியை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திவ்யபாரதி, ”தொடர் அரசியல் செயல்பாடுகளில் இருப்பவர்களை முடக்குவதற்காக இதுபோன்ற வழக்குகள் போடப்படுகின்றன. சமூக செயல்பாட்டாளர்களுக்கு இதுபோன்ற நடவடிக்கைகள் இயல்புதான்” என்று தெரிவித்தார்.

இடதுசாரி இயக்க செயல்பாட்டாளரான திவ்யபாரதி கடந்த சில வாரங்கள் முன்பாக “கக்கூஸ்” என்ற ஆவணப்படத்தை இயக்கியதன் மூலம் பரவலான கவனத்தை பெற்றார். மலம் அள்ளும் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அவலங்களையும், மலம் அள்ளுவதற்கென்றே பிரத்யேக சாதியை கொண்டுள்ள சமூகத்தின் இழிவையும் வெளிச்சம் போட்டுக் காட்டியதால் ‘கக்கூஸ்’ ஆவணப்படம் தமிழின் மிக முக்கிய ஆவணப்படம் வரிசையில் முக்கிய இடத்தை பிடித்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த ஆவணப்படத்தை திரையிட போலீசார் தடை விதித்த நிலையில், YouTube-இல் இப்படம் பதிவேற்றப்பட்டு பரவலாக வெகுமக்களை சென்றுச் சேர்ந்தது. இந்தியா மட்டுமல்லாமல் வேறு சில நாடுகளிலும் இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டு இந்த சமூக இழிவுத் தொடர்பாக பரவலாக கவனம் ஈர்த்தது.

இந்நிலையில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராகத் துண்டுப் பிரசுரம் விநியோகித்த வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சேலம் மாணவி வளர்மதி, மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி ஆகியோரின் கைதுக்கு எதிராகத் திவ்யபாரதி தொடர்ந்து தனது கருத்துகளைப் பதிவு செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.