‘கே.டி (எ) கருப்பு துரை’ விமர்சனம்! – AanthaiReporter.Com

‘கே.டி (எ) கருப்பு துரை’ விமர்சனம்!

நம் தமிழ் சினிமாவில் முன்னெல்லாம் அதிகமாகவும் இப்போது அவ்வப்போது குடும்ப பாங்கான படங்கள் வருகின்றன. அப்படியான குடும்ப உறவுகளில் தமிழில் இது வரை யாரும் தொடாத ஒரு உறவை மையமாக வைத்து ’வல்லமை தாராயோ’, ‘கொல கொலயா முந்திரிக்கா’போன்ற படங்களை இயக்கிய பெண் இயக்குநர் மதுமிதா இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம்தான்‘கே.டி (எ) கருப்பு துரை’.ஆம் எந்த வித உறவுமுல்லாமல் ஒரு சூழலில் இணைந்த ஒரு தாத்தாவையும், ஒரு சிறுவனையும் கோர்த்து நாட்டு நடப்பு, சென்டிமெண்ட் ஆகியவற்றுடன் நகைச்சுவையையும் சரியான விகிதத்தில் கலந்து கட்டி கொடுத்திருக்கும் திடீர் விருந்து இப்படம் என்று சொன்னால் மிகையல்ல.

படத்தின் கதை ரொம்ப சிம்பிள்தான் -ஐந்து பிள்ளைகளை பெற்றெடுத்தவர் கருப்புதுரை. அவருக்கு உடல் நிலை பாதிக்கப்படும் போது, பெற்ற பிள்ளைகள் ஒன்று கூடி அப்பாவை கருணை கொலை செய்து விட முடிவு செய்கிறார்கள். இது தெரிந்து, யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளி யேறும் கருப்புதுரை, கோவில் ஒன்றில் தஞ்சம் அடைய, அதே கோவிலில் வளரும் ஆதரவற்ற சிறுவனான குட்டியின் நட்பு கிடைக்கிறது. இருவரும் சேர்ந்து பயணிக்க, இருவருக்கும் இடையிலான உறவு பாசமிகுந்ததாக மாற, ஒரு கட்டத்தில், குட்டியும், கருப்பு துரையும் பிரிய வேண்டிய சூழல் ஏற்படும் போது, அவர்கள் அதை எவ்வாறு எதிர் கொள்கிறார்கள், என்பது தான் படத்தின் மீதிக்கதை.

 

இத்திரைப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு, விருதுகளை வென்ற நிலையில்தான் இங்கு ரிலீஸாகிறது. முன்னதாக லண்டனில் நகரில் நடைபெற்ற ‘ஆசிய திரைப்பட விழா’வில் கலந்து கொண்டு ‘சிறந்த இயக்குநர்’ விருதையும், அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்ற ‘இந்திய திரைப்பட விழா’வில் ‘சிறந்த இயக்குநர்’ விருதையும், சிங்கப்பூரில் நடை பெற்ற ‘ஆசிய சர்வதேச திரைப்பட விழா’வில் ‘ஜூரி விருதையும்’ வென்றிருக்கிறது. மேலும், ‘தஸ்வீர் தெற்காசிய திரைப்பட விழா’, ‘அமெரிக்க-ஆசிய திரைப்பட விழா’, 1௦0-வது ‘ஜாக்ரான் திரைப்பட விழா’, ‘நியூயார்க் இந்திய திரைப்பட விழா’, ‘ஒட்டாவா இந்திய திரைப்பட விழா’ என பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் அதிகாரப்பூர்வமாக தெரிவு செய்யப்பட்டு, திரையிடப்பட்டு ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் பாராட்டினைப் பெற்றுள்ளது.

இப்படி உலகளவில் பலரை கவர்ந்த இந்த கே டி சினிமாவின் இயக்குநர் மதுமிதா இதற்கு முன்பு இயக்கிய திரைப்படங்களுக்கும், இந்த படத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசங்கள் இருப்பதை படத்தின் டிசைனே சொல்லி விடுகிறது. இருந்தாலும் எந்தவிதமான எதிர்ப்பார்ப்பு இன்றி, சாதாரணமாக படம் பார்க்க உட்காரும் நம்மை, படம் ஆரம்பித்த 10 வது நிமிடத்தில், ஆச்சரியப்பட வைத்து விட்டார்

கதையின் முதுகெலும்பாக எழுத்தாளர் மு.ராமசாமி கருப்பு துரை கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். கோமாவில் இருந்து திடீரென்று கண் விழித்து எழுந்துக்கொள்வதில் வெளிப்படுத்தும் அசத்தலான நடிப்பை, பிரியாணி சாப்பிடுவது, மது குடிப்பது, பள்ளிப் பருவ காதலியை சந்திப்பது என அனைத்துக் காட்சிகளிலும் அப்ளாஸ் வாங்கிறார். சில இடங்களில் சிறுவனின் பேச்சை கேட்டு, ஆச்சர்யத்துடன் சிரிப்பதில் கூட, கருப்பு துரை என்று ஒரு கேரக்டர் நிஜமாகவே இருக்கிறாரோ என்று யோசிக்க வைத்து விடுகிறார்.குட்டி என்ற கேரக்டரில் வரும் நாகவிஷால், பார்ப்பதற்கும் குட்டியாக இருந்தாலும் நடிப்பில் அபாரம்.

மு.ராமசாமி மற்றும் நாகவிஷால் இவர்கள் இருவரை சுற்றி கதை நகர்ந்தாலும், படத்தில் வரும் சில சிறு சிறு வேடங்கள் கூட கவனிக்க வைக்கிறது.

கேமராமேன் மெய்யேந்திரன் கெம்புராஜ் கை வண்ணப் பார்வையில் நெல்வேலி இம்புட்டு அழகா என்று நெல்லைவாசிகளே அதிசயப்படும் அளவுக்கு படமாக்கியிருக்கிறார். கார்த்திகேயா மூர்த்தியின் இசையில் பாடல்கள் இனிமையாகவும், பின்னணி இசை கூர்மையாகவும் இருக்கிறது. மொத்தத்தில் கதையுடனே பயணிக்கும் இசையையும், ஒளிப்பதிவையும் பிரித்துப் பார்க்கவே முடியவில்லை. இவர்களின் பணிக்கு மேலும் பலம் சேர்த்திருக்கிறார் படத்தொகுப்பாளர் விஜய் வெங்கட்ரமணன்.

கருப்பு துரை போல குடும்பத்திற்காகவே வாழ்ந்து, தங்களது வாழ்க்கையை வாழாமல் இருப்பவர்களுக்கு, வாழ்க்கை என்றால் என்ன? என்பதை தெளிவாகவும், கவிதை போல இனிமையாகவும் சொல்லியிருக்கிறார். அதையும் விசு பாணியில் வசன ஊசிகள் இல்லாமல், அட்வைஸ் செய்து எரிச்சலூட்டாமல் ஜாலியாக, இரண்டு மணி நேரம் போவதே தெரியாதவாறு, எதை எந்த அளவுக்கு சொல்ல வேண்டும் என்பதை சரியான அளவில் சொல்லியிருக்கும் இயக்குநர் மதுமிதாவுக்கு ஒரு பொக்கே பார்சல் அளிக்கலாம்.

மொத்தத்தில் இந்த கே டி உள்ளம் கவர் கள்வன்

ரேட்டிங் 3.25 / 5