தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் கேட்டா புகார் கொடுங்க! – செங்கோட்டையன் பேட்டி! – AanthaiReporter.Com

தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் கேட்டா புகார் கொடுங்க! – செங்கோட்டையன் பேட்டி!

தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டண வசூலைதடுக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் மே 2-ம் தேதி முதல் அனைத்து அரசு பள்ளி களிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும், ஜூன் 1-ம் தேதி அனைத்துப்பள்ளிகளும் திறக்கப்படும் எனவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளதால் பள்ளிகள் திறக்கும் நாள் தள்ளிப்போடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜூன் 1-ம் தேதி அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், ”தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ. 27,205 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. அதன் மூலம் பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மே 2 ஆம் தேதி முதல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

ஜுன் 1 ஆம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும். கோடை விடுமுறையை நீடிப்பு செய்யமுடியாது. ஏனென்றால், கரிகுலம் என்று சொல்லப்படுகிற புதிய பாடத்திட்டங்கள் மாற்றத்தினால், அதை படிப்பதற்கு மாணவர்களுக்கு குறிப்பிட்ட காலங்கள் தேவைப்படும் என்பதால் ஜுன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு பொதுத்தேர்வுக்கு தயார் ஆகவேண்டியுள்ளதால் அவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டண வசூலைதடுக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியைக்கொண்டு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அவரிடம் புகார்கள் வரும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றார்.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரபாகர், கோட்டாட்சியர் கோவிந்தராஜன் மாவட்ட பள்ளிக்கல்வி அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கத்தினர் மற்றும் மாணவர்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.