பிரதமர், அமைச்சர்களின் ஊழலை விசாரிக்கும் அமைப்பான லோக்பால் தலைவர் பொறுபேற்றார்! – AanthaiReporter.Com

பிரதமர், அமைச்சர்களின் ஊழலை விசாரிக்கும் அமைப்பான லோக்பால் தலைவர் பொறுபேற்றார்!

பிரதமர், மத்திய அமைச்சர்கள் மற் றும் மத்திய அரசு உயர் அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதியான பினாகி சந்திர கோஸ் இன்று (மார்ச் 23) பதவியேற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சி டெல்லியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. லோக்பால் தலைவர் பினாகி சந்திர கோஸ் 2017ஆம் ஆண்டு மே மாதம் உச்ச நீதிமன்ற நீதிபதி பொறுப்பிலிருந்து பணி ஓய்வு பெற்றார். அதன்பின் தேசிய மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினராக பணிபுரிந்து வந்தார்.

இந்த லோக்பாலின் தலைவரும், உறுப்பினர்களும் ஐந்து ஆண்டுகளுக்கு பதவி வகிப்பர். 70 வயதைத் தொட்ட பொறுப்பாளர்களால் பதவியில் தொடர்ந்து இருக்க முடியாது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வழங்கப்படும் ஊதியமும், சலுகைகளும் லோக்பால் தலைவருக்கும் வழங்கப்படும். சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கு வழங்கப்படும் ஊதியமும், சலுகைகளும் லோக்பால் உறுப்பினர்களுக்கு வழங்கப்படுமாக்கும்.

நம் நாட்டில் அரசு தரப்பில் நடக்கும் ஊழலைக் கண்காணிக்க மத்தியில் லோக்பால் அமைப்பும் மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்பும் அமைக்கப் பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கடந்த 2013-ம் ஆண்டு உத்தரவிட்டது.

பிரதமர், மத்திய அமைச்சர்கள் மற் றும் மத்திய அரசு உயர் அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் வகையில் லோக்பால் சட்டம் இயற்றப் பட்டது. ஆனால், சட்டம் இயற்றப் பட்ட பின்னரும் லோக்பால் அமைக்கப் படுவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.

மேலும் லோக்பாலை நியமிப்பதற் கான ஆலோசனைக் குழுவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்ள விடுக்கப்பட்ட மத்திய அரசின் அழைப்பை மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே 7 முறை நிராகரித்தார். பின்னர் ஒரு வழியாக லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி பினாகி சந்திர கோஷ் நியமிக்கப்பட்ட நிலையில் இன்று அவருக்கு ஜனாதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

மேலும், லோக்பாலின் நீதித்துறை உறுப்பினர்களாக வெவ்வேறு ஐகோர்ட்டு களின் முன்னாள் தலைமை நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். நீதிபதிகள் திலிப் பி. போஸ்லே, பிரதீப் குமார் மோகந்தி, அபிலாஷ குமாரி, சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி அஜய் குமார் திரிபாதி ஆகியோர் நீதித்துறை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அர்ச்சனா ராமசுந்தரம், மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் தலைமை செயலர் தினேஷ் குமார் ஜெயின், மகேந்தெர் சிங், இந்திரஜித் பிரசாத் ஆகியோர் லோக்பாலின் நீதித்துறை சாரா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.