இனியொரு ஃபாத்திமாவை நாங்கள் இழக்க தயாரில்லை..! – AanthaiReporter.Com

இனியொரு ஃபாத்திமாவை நாங்கள் இழக்க தயாரில்லை..!

சென்னை ஐஐடியில் எம்ஏ முதலாம் ஆண்டு மனிதம் மற்றும் சமுதாயம் பயின்று வந்தவர் பாத்திமா லத்தீப். இவர் கடந்த வாரம் ஐஐடி வளாகத்திற்குள் உள்ள தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் ஒரே ஒரு பாடத்தில் தோல்வி அடைந்த காரணத்தினால் பாத்திமா இந்த முடிவை எடுத்துவிட்டதாக கூறினார்கள்.

ஆனால் பாத்திமாவின் செல்போனை ஆராய்ந்த போது அவரது தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. தனது செல்போனில் நோட் எனும் பிரிவில் தனது தற்கொலைக்கு என்ன காரணம் என்பதை பாத்திமா தெளிவுபடுத்தியிருந்தார். ஐஐடியில் தனக்கு பேராசிரியாக உள்ள பத்மநாபன் என்பவர் தான் தனது தற்கொலைக்கு காரணம் என்று அவர் கூறியிருந்தார்.

இந்த பதிவை பாத்திமா கடந்த 8ந் தேதி இரவு செல்போனில் பதிவு செய்திருந்தார். மறுநாள் அவர் தற்கொலை செய்து கொண்டார். மேலும் தன்னை துன்புறுத்தியதாக மேலும் இரண்டு பேராசிரியர் களின் பெயரையும் செல்போன் நோட் பிரிவில் பாத்திமா குறிப்பிட்டிருந்தார். இதனை அடுத்து இந்த வழக்கு சூடுபிடித்து போராட்டமெல்லாம் நடக்கிறது.

இதனிடையே ஃபாத்திமா லத்தீஃப் தாயார் ஊடகங்களிடம் பேசியதாக மலையாள பேட்டியின் தமிழ் மொழிபெயர்ப்பு இது என்றொரு செய்தி ஆன் லைனில் பரவி வருகிறது.

அது இதுதான்:

“எங்களுக்கு பெண் பிள்ளையை கல்விக்கூடத்திற்கு வெளியூருக்கு அனுப்புவதற்கு பயமாக இருந்தது. நாட்டில் நிலவிவரும் மதவெறுப்பின் காரணமாக எனது மகளை முக்காடு(சால்) அணிவதற்கு கூட வேண்டாமென மறுத்து விட்டோம். எங்கே முக்காடு அணிந்தால் இஸ்லாமியப் பெண் என்ற அடிப்படையில் அவள் தொல்லைகளுக்கு உட்படுவாளோ என நாங்கள் அஞ்சினோம். நாங்கள் என்ன செய்ய பெயர் ஃபாத்திமா லத்தீஃப் ஆகிவிட்டதே. எல்லா பிள்ளைகளைப் போல சாதாரணமாக உடை அணிந்து கொள் என்று வலியுறுத்தினோம். ஏனெனில் நாட்டில் நிலவும் சூழல் அப்படிப்பட்டது.

முதலில் அவளுக்கு பனாரஸில் மேற்படிப்பு படிக்க இடம் கிடைத்தது. ஆனால் வட மாநிலங்களில் நிலவும் கும்பல் படுகொலையை நினைத்து நாங்கள் அஞ்சினோம். வேண்டாம் மகளே என நான் மறுத்தேன். அம்மா நான் விமானத்தில் அல்லவா போகப் போகிறேன் ஏன் கவலை என்றாள். வேண்டாம் மகளே.., விமானத்தில் போனாலும் சாலையிலும் நாம் நடக்க வேண்டியிருக்கும். சாலைகளில் சர்வ சாதரணமாக கும்பல் படுகொலை(Mob Lynching) நடக்கும் தேசமிது வேண்டாம் மகளே என நான் பலவந்தமாக மறுத்தேன். அதன்பின் தான் மெட்ராஸ் ஐஐடி யில் படிக்க அனுப்பினோம்.

ஐஐடி யில் என் மகளுக்கு தொல்லைகள் தரப்பட்டிருக்கிறது என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். இன்டெர்னல் மதிப்பெண்ணை குறித்து பேராசிரியரிடத்தில் எனது மகள் விவாவதம் செய்தது அவருக்கு பிடிக்கவில்லை. நவீன கால பிள்ளைகளைப் போன்று நண்பர்களோடு ஊர் சுற்றுவது போன்ற எந்த செயலிலும் எனது மகள் பங்கெடுத்தது இல்லை. படிப்பில் நல்ல ஆர்வத்தோடு இருந்தவள். வேண்டுமெனில் ஐஐடி வளாகத்தில் விசாரித்து கொள்ளலாம். எனது மகளுக்கு தெரிந்த விஷயமெல்லாம் வகுப்பறை, விடுதி, நூலகம், மற்றும் உணவகம் மட்டும்தான். இதைத்தவிர வேறெங்கும் அவள் சென்றதில்லை.

பேராசியர் சுதர்சன் பத்மநாபனின் தொல்லைகள் தாங்காமல் தான் அவள் இறந்துபோயிருக்கிறாள். அவளுக்கு முஸ்லிம் நண்பர்களும் ஐஐடி யில் குறைவானவர்களே. இந்தியாவின் சூழல் மாறி வருகிற காரணத்தினால் தமிழ்நாடெனில் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பித்தான் நாங்கள் ஐஐடி மெட்ராஸில் படிக்க அனுப்பினோம். சுதர்சன் பத்மனாபன்தான் எனது மகளை இல்லாமல் ஆக்கியது. முதலமைச்சரை சந்தித்தோம். இனியொரு ஃபாத்திமா சாகமாட்டாள் அதற்கான எல்லா நடவடிக்கைகளும் தாங்கள் எடுப்பதாக அவர் உத்தரவாதம் அளித்தார்.

அடுத்த செமஸ்டருக்கு படிப்பதற்கான புத்தகங்களை இப்பொழுது ஆன்லைனில் ஆர்டர் செய்து எனக்கு தகவல் தந்தாள்.

மூன்றாவது செமஸ்டரில் இருக்கும் இருக்கும் பொருளாதார கணிதம் கொஞ்சம் கடினமானது எனவே நான் இப்பொழுதிருந்தே டியூசன் செல்ல வேண்டுமென திட்டமிடும் ஒரு பெண் பிள்ளை இப்படி சாவதற்கு விருப்பபடுமா..?

சுடிதார் பேண்டின் கயிறினை கட்டத்தெரியாத பெண் எனது மகள். காரணம் அது அவளை இறுக்கி வலியை உண்டாக்கும் எனச்சொல்வாள். 18வயதான பின்னும் அவளுக்கு அதனை இறுக்கமாக கட்டத் தெரியாத காரணத்தால் அவளுக்கு லெங்கின்சும், ஜீன்சும் வாங்கி கொடுத்தோம். அவள் தூக்குக் கயிறை நெரிப்பதை எப்படி எதிர்கொண்டாள் என்று தெரியவில்லையே..? அவளா இப்படி செய்து கொண்டாள்..?

ஐஐடியில் தொடர்ச்சியாக மாணவர்களுக்கு தொல்லைகள் தரப்படுகின்றன. கடந்து வருடம் 5நபர்கள் தொல்லை தாங்காமல் விலகி சென்றுவிட்டனர். நாங்கள் உயர் நீதிமன்றமானாலும், உச்சநீதிமன்றமானாலும் சென்று என் மகளுக்கு நீதியை பெற்றே தீருவோம். இல்லையேல் நாங்கள் வாழ்வதற்கு அர்த்தமே இல்லை.

இனியொரு ஃபாத்திமாவை நாங்கள் இழக்க தயாரில்லை..

#JusticeForFathima #IITmadrasKilledFathima

:

அஹ்மது யஹ்யா அய்யாஷ்