ஜெ.மரண சர்ச்சைக் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி கமிஷன் ஆயுள் நீட்டிப்பு! – AanthaiReporter.Com

ஜெ.மரண சர்ச்சைக் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி கமிஷன் ஆயுள் நீட்டிப்பு!

அதிமுகவின் சுப்ரீம் தலைவியாக இருந்தவரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவிக் காலம் இன்றுடன் முடிவடையும் 5வது முறையாக, மேலும் 4 மாத காலம் அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், டிசம்பர் 5 ம் தேதி திடீரென மரணம் அடைந்தார். ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக ஓபிஎஸ் உள்பட அரசியல் கட்சியினர் கூறியதால், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 24-ஆம் தேதி நீதிபதி ஆறுமுகசாமி விசாரணையைத் தொடங்கினார்.

தொடர்ந்து  அப்போலோ மருத்துவர்கள், போயஸ்கார்டன் ஊழியர்கள், ஜெயலலிதாவின் தனி உதவியாளர், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் என நூற்றுக்கும் மேற்பட்டவர் களிடம் விசாரணை நடத்தியுள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்தில் சாட்சியம் அளித்தவர்களிடம், சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணையும் நடத்திவரும் விசாரணை நடத்தி ஏறக்குறைய முடிவடையும் தருவாயில், அப்போலோ மருத்துவமனை, ஆணைய விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டில் தடை  வாங்கிய நிலையில், கடந்த ஒரு மாதமாக விசாரணை ஆணையம் முடங்கி உள்ளது.

இந்த நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்தின் காலக்கெடு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் 4 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.