அதிரடி ஜர்னலிஸ்டான விக்கிலீக்ஸ் அசாஞ்சே கைது! – AanthaiReporter.Com

அதிரடி ஜர்னலிஸ்டான விக்கிலீக்ஸ் அசாஞ்சே கைது!

சர்வதேச அளவில் பலருக்கு வில்லனாகவும், மேலும் பலருக்கு ஹீரோவாகவும் தோற்றமளித்துக் கொண்டிருந்த விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க அரசாங்கம், ராணுவம் குறித்த முக்கிய ரகசியங்களை வெளியிட்ட விவகாரத்தில் ஜூலியன் அசாஞ்சே உலகப் பிரபலம் ஆனார். விக்கிலீக்ஸ் நிறுவனரான ஜூலியன் அசாஞ்சே ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்தவர். எந்த லாபமும் இல்லாமல் அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை வெளியிட்டு உலகையே ஆட்டத்தில் விட்டவர். அவரை கைது செய்ய அமெரிக்கா துடித்தது. லண்டனில் இருந்த அவரை கைது செய்ய இங்கிலாந்து போலீசார் முடிவு செய்தனர். ஆனால், அவர் ஈக்குவடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சமடைந்தார். அமெரிக்காவிற்கு எதிராக செயல்பட்டதால் பாலியல் வன்கொடுமை பலியும் ஜூலியன் மீது சுமத்தப்பட்டது.

இதனிடையே கடந்த ஏழு ஆண்டுகளாக ஈக்வேடார் தூதரகத்தில் உள்ள அசாஞ்சேவை பிரிட்டனிடம் ஒப்படைக்க ஈக்வேடார் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஒப்புக்கொண்டது. இந்நிலையில் அசாஞ்சேவின் பாஸ்போர்ட் வேலிடிட்டி முடிந்ததால் அவரது நிலை சிக்கலாகியது. அதே சமயம் அசாஞ்சேவின் உடல் நிலையும் சிக்கலாகி உள்ள நிலையில் அவர் எளிதாக ஆஸ்திரேலியா பயணிக்க முடியாது எனக் கூறப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் அவரது பாஸ்போர்ட் சிக்கல்கள் சரி செய்யப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், இன்று ஈக்வேடார் தூதரகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அசாஞ்சேவை லண்டன் போலீஸார் கைது செய்தனர். கடந்த 2012-ம் ஆண்டு வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட வாரண்டின் அடிப்படையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார் அசாஞ்சே. அசாஞ்சேவின் கைது குறித்து போலீஸார் தரப்பில், “ ஈக்வேடார் அரசு அசாஞ்சேவுக்கு வழங்கிய அடைக்கலத்தை வாபஸ் பெற்றதை தொடர்ந்து அவர் தூதரக அதிகாரிகளால் அழைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அசாஞ்சே விரைவில் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லப்படுகிறார்” என்று தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள ஜூலியன் அசாஞ்சே தான் ஒருவேளை ஸ்விடனுக்கு அனுப்பபட்டால் தான் அமெரிக்காவால் கைது செய்யப்படலாம் என்று தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.