வாட்ஸ்-அப், ஃபேஸ்புக்கில் மட்டும் அதிகரிக்கும் கூட்டுக் குடும்பக் கலாச்சாரம்!:

வாட்ஸ்-அப், ஃபேஸ்புக்கில் மட்டும் அதிகரிக்கும் கூட்டுக் குடும்பக் கலாச்சாரம்!:

முன்னொரு காலத்தில் “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்ற சொல்வடையை கேள்விப் பட்டிருக்கலாம். ஆனால் தற்போதைய சூழலில் “கூடி வாழ்ந்தால் கோடி இன்னல்” என்று உரக்க சொல்லுமளவிற்கு மாறி விட்டது. ஆம்.. ஆண் – பெண் திருமணம் ஆனவுடன் தனித்துச் செல்ல விரும்பும் இயல்பான மனப்போக்குதான், ஆனால் அதிகரித்து வரும் மேற்கத்திய கலாசாரத்தால், நமது கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை வேகமாக சிதைந்து வருகிறது. நாட்டில் மொத்தம் 25 கோடி குடும்பங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டு உள்ளது. இவற்றில் சுமார் 18 சதவீத அளவிற்கே கூட்டுக் குடும்பங்கள் காணப்படுவதாகவும், ஆனால்  சோஷியல் மீடியாக்களில் ஃபேமிலி ரிலேட்டிவ் களுடன் டச்-சில் மட்டும் இருப்பதாக சமீபத்திய புள்ளி விவரங்கள் கூறுகின்றன என்பதுதான் சோகம்.

நமது பழைய குடும்ப கூட்டமைப்பு முறைகள் ஒட்டு மொத்தமாக மாறி தற்போது தனிக்குடும்ப முறைகள்தான் நடைமுறையில் இருந்து வருகின்றன. இந்த பழைய கூட்டு குடும்ப வாழ்க்கை முறை மாறியதன் விளைவாக, குடும்ப பாசம் என்பதே மறைந்து விட்டிருக்கின்றது என சொல்லலாம். அன்றெல்லாம் குடும்பம், கோத்திரம் என்ற கலாச்சார சூழ்நிலையில் நாமெல்லாம் ஒரு கூட்டு குடும்பமாக ஒருமித்து வாழ்ந்து வந்தோம். தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, சித்தப்பா, சித்தி, மாமா, மாமி, அண்ணன், அக்கா, தம்பி, தங்கை, மகன், மகள், பேரன், பேத்தி என ஒட்டுமொத்த உறவே அப்பா அல்லது தாத்தா என்ற ஒரு தலைமையில் கீழ் இயங்கி வந்தது. அவ்வாறு வாழ்ந்த குடும்பங்களில் பெரும்பாலும் பாசம் என்ற ஓர் உணர்வு மிகைத்தோடி காணப்பட்டது. குடும்பங் களில் அவ்வப்போது சிறு சிறு சலசலப்புகள் ஏற்பட்டாலும், அதைக்கொண்டு தீராத பகை ஏற்படாத நிலை இருந்தது. குடும்ப தலைவராலோ அல்லது தலைவியாலோ அவைகளெல்லாம் உடனுக்கு டன் களையப்பட்டு விடும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்க கூடியவர்களாகவும், குறிப்பாக உதவக் கூடியவர்களாகவும் இருந்து வந்தனர்.

அப்போதெல்லாம் குடும்ப உறுப்பினர்களில் யாராவது சிலர் தொலைவான தூரத்தில் பணிபுரிந்துக் கொண்டிருப்பவர்கள் மட்டும், அவர்களின் அவசியத்தை கருதி தத்தம் மனைவி மக்களோடு தற்காலிக தனிக் குடும்பம் நடத்துவார்கள். அப்படியிருந்தாலும் அவர்கள் சமயம் கிடைக்கும் போதெல்லாம் தங்களின் தலைமை குடும்பத்தினர்களுடன் இணைந்துக் கொள்வார்கள். வீட்டு நிகழ்ச்சிகளில் தங்களது ஒற்றுமையையும், பாச உணர்வுகளையும் கட்டக் கூடியவர்களாக இருந்து வந்தனர். அன்றைய காலத்தில் வீடுகளில் திருமணம் போன்ற காரியங்கள் நடந்தால் பல நாட்களுக்கு முன்பே உறவினர்கள் அனைவரும் வந்து தங்கியிருந்து வேலைகள் அனைத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டு தான் ஊர் திரும்புவார்கள். இவைகளை விவரிப்பதென்றால் தனி கட்டுரையே உருவாக்கலாம். ஆனால் அவையெல்லாம் கனவாய் போய் விட்டது என்றே செல்ல வேண்டும்.

அண்மையில் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வின் மராட்டியம், குஜராத், கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களின் முக்கிய நகரங்களில் சுமார் 70 முதல் 75 சதவீத தனிக்குடும்பங்கள்தான் உள்ளன.நம் இந்தியாவின் சில சின்னஞ்சிறு நகரங்களில் அதிகபட்சமாக 80 சதவீதம் வரை தனிக் குடும்பங்கள் காணப்படுகிறது. தமிழக கிராமப்புறங்களிலும் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை வேகமாக சிதைந்து வருவதாக இன்னொரு புள்ளிவிவரம் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டில் ஒட்டு மொத்தமாக 11 சதவீத கூட்டுக் குடும்பங்கள் மட்டுமே இருக்கின்றன அதே சமயம் .ஆனால் இன்று சமூக வலைத்தளங்களில் மட்டும் (ஃபேஸ்புக், வாட்ஸ் அப் குரூப் உருவாக்கி) உறவுகள் கூட்டாக வாழ்வோரின் எண்ணிக்கை 32 சதவீதம் என்று தெரிய வந்துள்ளது,  இப்படி சோஷியல் மீடியா மூலம்  தெரிய வரும் தகவல்,நிகழ்ச்சிகளுக்கு  நேரில் கூட போகாமல் ஆன் லைன் மூலமே வாழ்த்து சொல்வோரே அதிகம் என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் தாங்கள் தனியாக இருப்பதே நல்லது என்று நினைக்க பல்வேறு சேனல்களில் சீரியல்கள் எச்சரிக்கை செய்கிறது என்றும் தெரிவித்தனர். அதாவது எல்லா சீரியல்களிலும் குடும்ப உறுப்பினர்களே வில்லன் அல்லது வில்லியாக  காட்டும் சூழலில் தங்கள்  குடும்ப உறுப்பினர்கள் சிலரின் போக்குடன் அதை ஒப்பிட்டு தனிக் குடித்தனமே சிறப்பு என்று நினைப்பதாகத் தெரிவித்தனர்.

ஒரு வகையில் கணவன், மனைவி இருவரும் ஒன்றாக வேலைக்கு செல்வது, குழந்தைகளின் எதிர்கால திடடம் ஆகியவற்றால் தனிக்குடும்பங்கள் பெருகுகின்றன. தமிழகத்தில் 2 கோடி குடும்பங்கள் இருப்பதாக அரசு புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அடுத்த 5 ஆண்டுகளில் தமிழக மக்கள் தொகை 8½ கோடியாக உயரும் பட்சத்தில் மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 2 கோடியே 30 லட்சமாக அதிகரிக்கலாம் என மதிப்பிடப்பட்டு இருக்கிறது. அதுபோன்று தனிக்குடும்பங்கள் விகிதமும் இதே வேகத்தில் அதிகரித்து வீடுகள், மின்சாரம், குடிநீர் போன்றவற்றின் தேவையும் பல மடங்கு உயரலாம்.

வேக வேகமாக அதிகரிக்கும் தனிக் குடும்ப வாழ்க்கை முறையால் சொந்த, பந்தங்களின் நெருக்கமான துணையின்றி இறுக்கமான சூழலில் வாழும் போக்கிற்கு மக்கள் தள்ளப்படும் சோக நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இனி கிராமங்களில் வசிப்போரும் கூட எந்திரமய வாழ்க்கையை சந்திக்கும் அவலம் ஏற்படலாம்.

தனிக்குடும்ப வாழ்க்கை முறையே சிறந்தது என்ற சிந்தனையுடன் வாழும் அமெரிக்காவில் கூட கடந்த 40 ஆண்டுகளில் 2 சதவீத அளவிற்கு கூட்டுக்குடும்பங்கள் அதிகரித்து உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. போகிற போக்கைப் பார்த்தால்  இனி எதிர்காலத்தில் நமது நாட்டில் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை சாத்தியமா? என்ற கேள்விக் குறி எழுந்திருப்பது கவலை யளிக்கும் விஷயமாகும்.

குறிப்பாக இந்த தனிக் குடித்தனப் போக்கால் தற்பொழுது கணவன் மனைவிக்கு இடையே உருவெ டுக்கும் சிறிய பிரச்சனை பெற்றோர்கள், வயதில் மூத்தவர்களின் ஆலோசனையில்லாமல் பெரிய பிரச்சனையாக மாறி விவாகரத்தில் வந்து முடிகிறது. தற்போதைய கால கட்டத்தில் அதிகரிக்கும் விவாகரத்துகளுக்கு கூட்டுக் குடும்ப வாழ்க்கை குறைவும் தனிக்குடித்தன வாழ்வின் அதிகரிப்புமே ஆகும் என்றும் தனிக் குடித்தன செய்வோரில் பலரும் தங்கள் வீட்டு நிலைமையை விட அக்கம் பக்கத்தினரின் அந்தஸ்துக்கு குறையாமல் வாழ ஆசைப்பட்டு தறிக்கெட்டு போவதாகவும் இந்த  ஆய்வு முடிவு தெரிவித்திருப்பது கவனிக்கத்தக்கது.

அகஸ்தீஸ்வரன்

Related Posts

error: Content is protected !!