ஜெயலலிதா நினைவிடம் : பிப்ரவரி 24-ம் தேதி திறக்க ஏற்பாடு!

ஜெயலலிதா நினைவிடம் : பிப்ரவரி 24-ம் தேதி திறக்க ஏற்பாடு!

நாட்டில் பல்வேறு சர்ச்சைகளும், பிரச்னைகளும் ஓடிக் கொண்டிருந்தாலும் சென்னை மெரினா கடற்கரையில் பீனிக்ஸ் பறவை அமைப்புடன் ஜெயலலிதா நினைவிடம் அமைக்கும் பணி படு தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24-ம் தேதி நினைவிடத்தை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசு முடிவு:மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ரூ.50.08 கோடி செலவில் நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. நினைவிட கட்டுமான பணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த மே மாதம் 7-ம் தேதி அடிக்கல் நாட்டினார். இதையடுத்து உடனடியாக கட்டுமான பணிகள் தொடங்கியது. தொடர்ந்து இரவு பகலாக கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 10-க்கும் மேற்பட்ட பொக்லைன் எந்திரங்கள், 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஷிப்டு அடிப்படையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நினைவிட கட்டுமான பணியில் 10 பகுதி வேலையில் 6 பகுதி வேலை முடிக்கப்பட்டு விட்டது. நடைபாதை, வாகன நிறுத்தம் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. அருங்காட்சியகம், அறிவுசார் மையம், மேற்கூரை அமைக்கும் பணி நடக்கவிருக்கிறது. மெயின் கட்டிடத்தில் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த கட்டிடத்தில் சூப்பர் ஸ்டெக்சர் அமைக்கப்படுகிறது. 15 மீட்டர் உயரத்தில் பீனிக்ஸ் பறவை தோற்றம் அமைக்கப்படுகிறது. 2 பக்கமும் இறக்கை மட்டும் 21 மீட்டர் வரை அமைக்கப்படுகிறது. இந்த பணிக்கு ஐ.ஐ.டி. நிபுணர்கள் ஸ்டெக்சுரல் வடிவமைப்பு செய்து கொடுத்துள்ளனர். அந்த கட்டுமான பணிகள் மட்டும் ஐ.ஐ.டி. நிபுணர்களின் மேற்பார்வையில் அமைக்கப்படுகிறது.

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர், “ஜெயலலிதா நினைவிடத்தில் பீனிக்ஸ் பறவை கட்டுமான பணிகள் ஜனவரி இறுதிக்குள் முழுமை அடையும். ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதி நினைவிடத்தை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்குள் அனைத்து பணிகளும் முழுவதுமாக முடிக்கப்பட்டு விடும்”என்று தெரிவித்தார்

error: Content is protected !!