ஜெ. தண்டிக்கப்பட்ட குற்றவாளி இல்லை!ஆகவே தாராளமா நினைவிடம் கட்டலாம்! – ஐகோர்ட்!

ஜெ. தண்டிக்கப்பட்ட குற்றவாளி இல்லை!ஆகவே தாராளமா நினைவிடம் கட்டலாம்! – ஐகோர்ட்!

ஜெயலலிதாவுக்கு தமிழக அரசு சார்பில்  நினைவிட கட்டுமான பணிகளுக்குத் தடை விதிக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்.

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில், 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு செலவில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கட்டுமான பணிகளுக்குத் தடை விதிக்கக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் எம்.எல்.ரவி பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், ”சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றவர் ஜெயலலிதா. அவருக்கு நினை விடம் கட்டுவது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்” என்று குறிப்பிட்டிருந்தார். கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளுக்கு எதிராக நினைவிடம் கட்டப்படுவதாகவும் கடற்கரையில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்கு எந்தக் கட்டுமான பணிகளும் மேற்கொள்ளக் கூடாது என்ற விதிகளை மீறியதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். எனவே, ”கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி.ராஜமாணிக்கம் அமர்வு விசாரித்து வந்தது. கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி இறுதி விசாரணைக்கு வந்த போது தலைமை வழக்கறிஞர் ஆஜராகி சொத்து குவிப்பு வழக்கிலிருந்து கர்நாடக உயர் நீதிமன்றம் ஜெயலலிதாவை விடுதலை செய்ததை எதிர்த்து கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கில் மற்ற மூவர் மீதான தண்டனை உறுதி செய்யப்பட்டாலும், அப்போது ஜெயலலிதா இறந்து விட்டதால் அவருக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டது. இன்றைய தேதியில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்ட குற்றவாளி அல்ல என்பதால், அவருக்கு நினைவிடம் கட்டுவது தொடர்பாக அரசு, தன் அதிகார வரம்பிற்கு உட்பட்டுதான் முடிவெடுத்துள்ளது என வாதிட்டார்.

மேலும், மாநில கடலோர மேலாண்மை மண்டல ஒழுங்குமுறை ஆணையம், மாநகராட்சி என அனைவரிடமும் அனுமதி பெற்றே நினைவிடம் கட்டப்பட்டு வருவதாகவும் எனவே கட்டுமான பணிகளுக்குத் தடை விதிக்கக் கூடாது, மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரினார். வழக்கின் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பினை தேதி குறிப் பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், இன்று மேற்படி வழக்கில் (ஜனவரி 23) தீர்ப்பளித்த நீதிபதிகள் சத்யநாரயணன், ராஜ மாணிக்கம் , நினைவிட கட்டுமான பணிகளுக்குத் தடை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும் நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் , ”ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த கர்நாடகா உயர் நீதிமன்றம் 4 பேரையும் விடுதலை செய்தது.  இதை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருக்கும் போதே, ஜெயலலிதா மரணமடைந்து விட்டார். அதனால், அவருக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு கைவிடப்பட்டது.

எனவே, ஜெயலலிதா மரணம் அடையும்வரை கர்நாடகா உயர் நீதிமன்றம் அவரை விடுதலை செய்ததுதான் நிலுவையில் இருந்தது. எனவே, அவரை தண்டிக்கப்பட்ட குற்றவாளி என்று கூற முடியாது. மக்களின் வரிப்பணத்தை கொண்டு நினைவிடம் கட்டக்கூடாது என்று மனுதாரர் கோரியுள்ளாரே தவிர, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்க்கவில்லை. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்” என்று தெரிவித்தனர்.

அது மட்டுமின்றி ,கொள்கை முடிவு எடுக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. அதேநேரம் எதிர் காலத்தில் அரசு கொள்கை முடிவு எடுக்கும் பட்சத்தில் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட வற்றை கட்ட முக்கியத்துவம் கொடுங்கள் என அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்,

கடந்த டிசம்பர் 19ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, ஜெ நினைவிடம் வரும் மார்ச் மாதம் திறக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!