ஜெயலலிதா நினைவிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கோலாகலம்! – AanthaiReporter.Com

ஜெயலலிதா நினைவிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கோலாகலம்!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாநினைவிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா,  இன்று நடைபெற்றது.

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா  உடல் நலக்குறைவின் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி உயிரிழந்தார். அதனைத்தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடம் அருகே ஜெ. வின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஜெயலலிதா அவர்களின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அரசு சார்பில் நினைவிடம் அமைக்கப்படும் என முன்னமே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா அவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

ரூபாய் 50 கோடி செலவில் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ள நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலின், சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு தண்டனை பெற்ற குற்றவாளி ஒருவருக்கு அரசு சார்பில் மக்கள் வரிப்பணத்தில் நினைவிடம் கட்டுவதென்பது ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என விமர்சித்துள்ளார்.

மேலும் பாமக நிறுவனர் ராமதாஸ் இதுதொடர்பாக  வெளியிட்டுள்ள அறிக்கையில், ” வருவாய்க்கு மீறி சொத்துக்குவித்த வழக்கில் தண்டிக்கப்பட்ட மறைந்த முதலமைச்சர்  ஜெயலலிதாவுக்கு  பீனிக்ஸ் பறவை வடிவத்தில் நினைவிடம் அமைப்பதற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. ஊழலில்  திளைக்கும் மாநிலம் என்ற தீராப்பழியை தமிழகத்திற்கு ஏற்படுத்திக் கொடுத்த ஒருவருக்கு நினைவு மண்டபம் அமைத்து கவுரவப்படுத்துவது ஊழலுக்கு மணிமகுடம் சூட்டுவதற்கு ஒப்பானது ஆகும்” என்று தெரிவித்திருந்தார்

ஆனாலும் திட்டமிட்டப்படி அதிமுக சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் துணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அடிக்கல் நாட்டினர். இது குறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில்,  ”உலகத் தலைவர்களின் வரிசையில் ஒருவராக விளங்கிய, மறைந்த முதல்வர் ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில், பிரமாண்டமான நினைவு மண்டபம் அமைக்க உலகளாவிய கட்டிட கலைஞர்கள் /நிறுவனங்களிடமிருந்து வரைபடங்களை பெறுவதற்கு விளம்பரப்படுத்தப்பட்டு, எல்லோரும் பாராட்டும் வகையில் நிபுணர்கள் குழு மூலம், சிறந்த வரைபடங்களை தேர்வு செய்து நினைவு மண்டபம் அமைக்கப் படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 28.6.2017 அன்று சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

அரசாணை வெளியீடு

ஜெயலலிதாவின் நினைவிடம் அமைப்பதற்காக தனியார் கட்டிட கலைஞர்கள் / நிறுவனங்களிடமிருந்து வடிவமைப்பு வரைபடங்கள் பெறுவதற்கு பொதுப்பணித்துறைக்கு ஆணை வழங்கப்பட்டது. இவ்வரைபடங்களை தேர்வு செய்ய பொதுப்பணித் துறையின் முதன்மை தலைமைப் பொறியாளர் (கட்டிடம்) தலைமையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. மேற்படி வல்லுநர் குழு உறுப்பினர்களுடன் ஜெயலலிதா நினைவிடம் அமைப்பதற்கான வடிவமைப்பு வரைபடத்தை தெரிவு செய்யும் கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில், தெரிவு செய்யப்பட்ட வரைபட மாதிரியில் உள்ளவாறு, பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித் தலைவி அம்மா செல்வி ஜெ ஜெயலலிதா நினைவிட வளாகத்தில் 50 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஜெயலலிதா நினைவு மண்டபத்தை அமைப்பதற்காக 10.1.2018 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.

ஃபீனிக்ஸ் பறவை…

எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா நினைவிட வளாகத்தில், 50 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள ஜெ ஜெயலலிதா நினைவு மண்டபத்திற்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அடிக்கல் நாட்டினார். ஜெயலலிதாவின் நினைவிடம் மற்றும் அதனைச் சார்ந்த கட்டமைப்புகள் சுமார் 50,422 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படவுள்ளது. மேலும், ஜெயலலிதாவின் நினைவிடத்தில், ஃபீனிக்ஸ் பறவை வடிவமைப்பில் நினைவுச் சின்னம், அருங்காட்சியகம், அறிவுத்திறன் பூங்கா, கருங்கல்லால் ஆன நடைபாதை வசதி, புல்வெளி மற்றும் நீர் தடாகங்கள், சுற்றுச்சுவர் ஆகியவை அமைக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.