ஜப்பானில் அதிகரித்து வரும் ஸ்டைரோஃபோம் வீடுகள்! – AanthaiReporter.Com

ஜப்பானில் அதிகரித்து வரும் ஸ்டைரோஃபோம் வீடுகள்!

ஜப்பானில் நிலநடுக்கம் என்பதெல்லாம் அடிக்கடி நடைபெறும் ஒரு சம்பவம் என்பதும் அதனால் அங்குள்ள வீடுகள் மண்ணில் புதைவதும் சிதிலமடைவதும் வாடிக்கைதான். இதை கவனத்தில் கொண்டு அதாவது இந்த நில நடுக்கத்தை தாங்கக்கூடிய வகையில் ஸ்டைரோஃபோம் (Styrofoam) வீடுகள் அதிக அளவில் கட்டப்பட்டு வருகின்றன. ஸ்டைரோஃபோம் என்று சொன்னதும் நம்மில் பல்ருக்கு ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் தட்டு, தம்ளர், பார்சல் கட்டும் தெர்மகோல்தான் நினைவுக்கு வரும்.  ஆனால் இந்த வீடு கட்டக்கூடிய ஸ்டைரோஃபோம் தொழில்நுட்பத்தில் மேம்பட்டது. இதில் கட்டப்படும் வீடுகள் நிலநடுக்கத்தைத் தாங்கக்கூடியவை. விலை குறைந்தவை. வெப்பத்தைக் கட்டுப்படுத்தக் கூடியவை. மிக வேகமாகவும் எளிதாகவும் வீட்டைக் கட்டி முடித்துவிட முடியும்.
இத்தனைக்கும் கடந்த பத்து ஆண்டுகளாகவே ஸ்டைரோஃபோம் வீடுகள் கட்டப்பட்டு வந்தாலும் மக்கள் அவற்றைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. கடந்த ஆண்டு நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்பட்ட பிறகு மக்களின் கவனம் இந்த வீடுகள் மீது திரும்பியிருக்கிறது. வீட்டின் எடை 80 கிலோ. பசையால் அரைக் கோள வடிவில் வீடுகள் கட்டப்படு கின்றன. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தாங்கக்கூடிய வகையில் வீட்டின் உத்திரம் வடிவமைக்கப்பட்டி ருக்கிறது. ஒரே வாரத்தில் மூன்று மனிதர்களால் இந்த வீட்டை உருவாக்கிவிட முடியும். 387 சதுர அடி பரப்பளவும் 9.8 அடி உயரமும் இருக்கிறது. இந்த வீடு துரு பிடிப்பதில்லை, கரையான்களால் அரிக்கப்படுவதில்லை, நீண்ட காலம் உழைக்கக்கூடியது.
குறிப்பாக இத்தகைய வீட்டுக்குள் குளிர்ச்சி நிலவுவதால் குளிர்சாதன பயன்பாடும் குறைந்துவிடுகிறது. 44 லட்சத்திலிருந்து 55 லட்சம் வரை வீடுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் நிரந்தரமாகவும் தங்கிக்கொள்ளலாம். அல்லது ஆபத்து ஏற்படும் காலங்களில் மட்டும் தங்கிச் செல்லலாம். ஜப்பான் டோம் ஹவுஸ் நிறுவனம் ஆண்டுக்கு 100 ஸ்டைரோஃபோம் வீடுகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.