உறியடி திருவிழாவிற்கு புதிய கட்டுப்பாடுகள்! – AanthaiReporter.Com

உறியடி திருவிழாவிற்கு புதிய கட்டுப்பாடுகள்!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நடத்தப்படும் உறியடித் திருவிழாவிற்கு மகாராஷ்டிர மாநிலத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்படும். அதில், ஒருவர் மீது ஒருவர் ஏறி, உயரத்தில் இருக்கும் உறியை உடைப்பார்கள். இந்த விழாவிற்கு மகாராஷ்டிர மாநில அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி, உறியடித் திருவிழாவில் 18 வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. ஒருவர் மீது ஒருவர் ஏறிச்செல்வது 20 அடிக்கு மேல் இருக்கக்கூடாது என்றும் நிபந்தனை போடப்பட்டது. இதனை எதிர்த்து அம்மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்குப்பின், இந்த வழக்கை மும்பை உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரணைக்கு ஏற்றது.

இந்நிலையில், நேற்று இந்த வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, உறியடித் திருவிழாவை மகாராஷ்டிரராவின் வீர விளையாட்டு என்றும் அதனை போதிய பாதுகாப்பு வசதிகளுடன் நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இதில் 14 வயதுக்கு மேற்பட்டவர்களை மட்டுமே அனுமதிப்போம் என்றும் உறுதியளிக்கப்பட்டது. மேலும், உறியடித் திருவிழா நடத்த விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. மாநில அரசின் கட்டுப்பாடுகளை அறிந்த நீதிபதிகள் அவற்றுக்கு உட்பட்டு உறியடித் திருவிழா நடத்தப்படுவதை ஏற்பதாக அறிவித்தனர்.