டிஜிட்டல் பேனர்களை வைத்தால் ஓராண்டு சிறை + 5 ஆயிரம் அபராதம்! – AanthaiReporter.Com

டிஜிட்டல் பேனர்களை வைத்தால் ஓராண்டு சிறை + 5 ஆயிரம் அபராதம்!

அரசின் விதிமுறைகளை மீறி டிஜிட்டல் பேனர்களை வைத்தால் குற்றவியல் நடவடிக்கை யுடன், ஓராண்டு சிறை, 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பேனர்கள் வைப்பதை தடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது. 

சில பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நிறுவனம் தன் தயாரிப்பை விளம்பரம் செய்ய பெரிய போர்டுகளையும், முக்கியமான இடங்களில் பேனர்களாகவும் கட்டி வந்தன.தொழில்நுட்ப வளர்ச்சியில் மேம்பாடு அடைந்த பின்னர் டிஜிட்டல் மீடியாக்களின் ஆதிக்கத்தில் விளம்பரங்கள் வலுப்பெற துவங்கின. டிவி,ரேடியோ ஆகியவற்றுக்கு பரவிய விளம்பரங்கள் மெல்ல இணைய தளங்களில் தலைகாட்ட துவங்கின. அப்படிபட்ட சூழலில் டிஜிட்டல் பேனர்கள் தங்கள் முத்திரையை பதிக்க துவங்கின. சரியாக 20 வருடங்களுக்கு முன்னால் இந்த டிஜிட்டல் பேனர்களை ஏடி&டி நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இன்று உலகமே டிஜிட்டல் மயமாவதால் இந்த டிஜிட்டல் பேனர்களின் வருகை நிறுவனங்களுக்கு விளம்பர ரீதியாக லாபத்தை தந்தது. ஏற்கெனவே பொங்கல் வாழ்த்துக்களும், தீபாவளி வாழ்த்துகளும் டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில் விஸ்வரூம் எடுத்து விட்ட இந்த டிஜிட்டல் பேனரால் அடிக்கடி விபத்துகளும் , மரணமும் நிகழ்கிறது. அண்மையில் கூட குரோம் பேட்டையில் சுபஸ்ரீ என்ற ஒரு இளம் பெண் இத்தகைய பேனரால் விபத்துக்குள்ளாகி காலமானார்.

இந்நிலையில்தான் தமிழகம் முழுவதும் பேனர்கள், கொடிகள், கட்-அவுட்டுகள் வைப்பதற்கான தடை உத்தரவை கடுமையாக்கும்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இதில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக, உள்ளாட்சி அமைப்புகளின் நெடுஞ்சாலைகள், இணைப்பு சாலைகள், தெருக்கள் மற்றும் நடைபாதைகளில் டிஜிட்டல் பேனர் நிறுவக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதி நிதிகள் மற்றும் டிஜிட்டல் பேனர் கடை உரிமையாளர்களுடன் மாவட்ட அளவிலான கூட்டம் நடத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவு விவரம் எடுத்துரைக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை அரசியல் கட்சியினர் மற்றும் டிஜிட்டல் பேனர் கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நினைவூட்டும் வகையில் சில தகவல்கள் தெரிவிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளில் நெடுஞ்சாலைகள், இணைப்பு சாலைகள், தெருக்கள் மற்றும் நடை பாதைகளில் டிஜிட்டல் பேனர் மற்றும் பிளக்ஸ் போர்டுகள் நிறுவ தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அரசின் அறிவுரைகளை மீறி டிஜிட்டல் பேனர் நிறுவினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்வதுடன், ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும், அல்லது இரண்டு தண்டனைகளும் சேர்த்து நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் டிஜிட்டல் பேனர்கள் அச்சிடுபவர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அனுமதியின்றி நிறுவப்படும் டிஜிட்டல் பேனர் மற்றும் பிளக்ஸ் போர்டுகளை கண்காணிக்க தவறும் அதிகாரிகள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழக அரசின் உத்தரவை தொடர்ந்து எல்லா மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் இருந்த டிஜிட்டல் பேனர்கள் அவசர, அவசரமாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் 20,000 பேனர்கள் அகற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.