‘ஜாக்கி சான் ‘-னுக்கு’ ஆஸ்கர் கிடைச்சிடுச்சு!

‘ஜாக்கி சான் ‘-னுக்கு’ ஆஸ்கர் கிடைச்சிடுச்சு!

‘ஹாங்காங்கில் 1954 ஏப்ரல் மாதம் 7-ம் தேதி அன்று ஓர் ஆண் குழந்தை கொழுகொழு என்று பிறந்தது. குழந்தையின் தந்தை சார்லஸ் சான் ஒரு சமையல்காரர். தாய் லீ-லீ வீட்டு வேலை செய்யும் பெண். பிரசவம் பார்த்த டாக்டர், அந்தக் குடும்பத்தின் நிலைமையையும் குழந்தையின் அழகையும் பார்த்து, தானே தத்தெடுத்து வளர்க்க ஆசைப்பட்டார். ஆனால், ஏழைப் பெற்றோர் மறுத்துவிட்டனர் .அந்தக் குழந்தைக்கு சான் காங்-காங் என்று பெயர் வைத்தனர். அதற்கு ஹாங்காங்கில் பிறந்தவன் என்று அர்த்தம். இந்த நிலையில் பெற்றோருக்கு ஆஸ்திரேலியாவில் வேலை கிடைத்தது. சாசனா என்ற நாடகப் பள்ளியில் காங்-காங் சேர்ந்தான். தனது ஏழாவது வயதிலேயே கராத்தே, குங்ஃபூ என மார்ஷியல் கலைகள் அனைத்தும் கற்றான்.

jack nov 13

அவன் தினமும் 18 மணி நேரம் பயிற்சி எடுத்தான். எட்டு வயதில் ‘பிக் அண்ட் லிட்டில் வாங்ஷன்’ என்ற படத்தில் முதன்முதலாக நடித்தான். அவனுடைய 18 வயதில் புரூஸ் லீ நடித்த ‘என்டர் தி டிராகன்’ படத்தில் ஒரு சிறு வேடம் கிடைத்தது. உயரமான இடத்தில் இருந்து குதிக்கும் காட்சியில் மற்ற ஸ்டன்ட் நடிகர்கள் தயக்கம் காட்ட, காங்-காங் உடனே ஓடி வந்து குதித்து புரூஸ் லீயைக் கவர்ந்தான். அதன் பின் வாய்ப்புகள் கிடைக்காததால், கட்டட வேலைகளில் உதவியாளராகக் கூலி வேலை செய்தார். தினக் கூலியாக வேலைபார்த்தாலும், இவரது துறுதுறுப்பையும், துள்ளலையும், உருவத்தையும் பார்த்து சக தொழிலாளர் ஒருவர் ‘லிட்டில் ஜாக்’என்று அழைத்தார். இதுவே பின்னர் ‘ஜாக்கி’ ஆனது.

ஹாங்காங்கில் இருந்து ஒரு தந்தி வர, ஜாக்கி சான் என்ற புதிய பெயருடன் புறப்பட்ட இவர், ‘ஃபிஸ்ட் ஆஃப் ஃப்யூரி’ என்ற படத்தில் நடித்தார். அப்போது அவர் வயது 21. அன்று முதல் அவரது வெற்றிப் பயணம் தொடர்ந்தது. இன்று காமெடி, சண்டை படங்களுக்கு இன்றுவரை நிகரில்லாத ஹீரோவாக மற்றும் ஆசியாவின் மிகபெரும் ஸ்டாராக இருக்கும் அந்த ‘கூலித் தொழிலாளி’தான் ஜாக்கிசான்!”

அப்பேர்ப்பட்ட ஜாக்கி சான் 23 ஆண்டுகளுக்கு முன்னால் ஹாலிவுட் புகழ் சில்வஸ்டர் ஸ்டாலோன் வீட்டில் ஜாக்கி சான் ஆஸ்கர் விருதை பார்த்த போது தானும் ஆஸ்கர் பெற முடிவு செய்ததாக தெரிவித்தார். அவருடைய விருப்பம் சனிக்கிழமையன்று நிறைவேறி விட்டது. ஆமாம்! தற்போது அவர் கைகளில் அந்த சிறிய ஆஸ்கர் விருது பொற்சிலை வந்து விட்டது.

நடிகர், இயக்குனர், ஸ்டண்ட் மாஸ்டர், பாடகர், தயாரிப்பாளர், தற்காப்பு கலை நிபுணர் என பன்முக திறமைகளை உள்ளடக்கிய ஜாக்கிசான், 50 வருடங்களுக்கு மேல் சினிமாவில் வேரூன்றி இருந்தாலும் இதுவரை ஒரு ஆஸ்கர் விருது பெற்றதில்லை. 62 வயதான ஜாக்கிசானுக்கு திரையுலகில் அவரது பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் ஆஸ்கர் அமைப்பு அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வாங்கி கவுரவித்துள்ளது.

ஆஸ்கர் பொற்சிலையைப் பெற்ற ஜாக்கி சான் கூறும்போது, “திரைத்துறையில் 56 ஆண்டுகள், 200 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளேன், கடுமையான உழைப்புக்குப் பிறகு ஒருவழியாக இப்போது என் கையில் ஆஸ்கர்” என்று நட்சத்திரங்கள் நிரம்பிய இரவு விருந்தில் ஜாக்கி சான் கூறினார். மேலும் தன்னுடைய பெற்றோருடன் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவைக் கண்டு களித்த போதெல்லாம், ‘இவ்வளவு திரைப்படங்களில் பணியாற்றியும் ஏன் ஆஸ்கர் என்ற அந்த உயரிய விருது உனக்குக் கிடைக்கவில்லை?’ என்று தனது தந்தை கேட்டதை நினைவு கூர்ந்தார் ஜாக்கி சான்.

விருது வழங்கும் விழாவில் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற டென்செல் வாஷிங்டன், லுபிடா நியோங், நிகோல் கிட்மன், எம்மா ஸ்டோன், ரயான் ரேனால்ட்ஸ், ஆம்ய் ஆடம்ஸ் மற்றும் தேவ் படேல் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

error: Content is protected !!