ஆன்லைன் சேல்ஸ் அலிபாபா குழுமத் தலைவர் ஜாக் மா ரிட்டையர்ட்! – AanthaiReporter.Com

ஆன்லைன் சேல்ஸ் அலிபாபா குழுமத் தலைவர் ஜாக் மா ரிட்டையர்ட்!

சர்வதேச அளவில் புகழ் பெற்ற சீனாவின் ஆன்லைன் விற்பனை நிறுவனமான அலிபாபா குழுமத் தின் நிறுவனரும் தலைவருமான ஜாக் மா தனது 54 வயதில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

(FILES) In this file photo taken on April 18, 2018, Alibaba founder Jack Ma gestures as he arrives for a meeting with Thailand’s Prime Minister Prayuth Chan-ocha in Bangkok during a visit to the country to announce the group’s investment in the Thai government’s Eastern Economic Corridor (EEC) scheme.
Alibaba co-founder and chief Jack Ma announced on September 7, 2018 he will leave from the Chinese e-commerce giant on Monday to devote his time to philanthropy focused on education. / AFP PHOTO / POOL / JORGE SILVA

ஜாக்மா (Jack Ma). சீனாவின் மிகப்பெரிய ஐ.டி நிறுவனமான அலிபாபாவின் நிறுவனர். சிறுவயதில் ஆங்கிலத்தில் பேசவேண்டி, அருகில் இருந்த நகரின் ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு சென்று அங்குள்ள வெளிநாட்டு சுற்றுலாவாசிகளுக்கு இலவச கைடாக இருந்திருக்கிறார். அதன் மூலம் அவருக்கு பல வெளிநாட்டு நட்புகளும் கிடைக்க அது ஒரு புதிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. ஜாக் சற்று குள்ளம். மிகவும் ஒல்லியான தேகம். இதனால் பிறர் ஏளனம் செய்து தாழ்வு மனப்பான்மை வளர்ந்தது. இருந்தாலும் போராடும் குணம் அவரிடம் இயல்பாகவே இருந்தது. சீனாவில் கலை அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கு கூட நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். மூன்று வருடம் தோல்வி. நான்காவது முறை வெற்றி பெற்று BA ஆங்கிலம் சேர்கிறார். அதன்பிறகு அந்தக் கல்லூரி யின் மாணவர் தலைவராக உருவாகும் அளவிற்கு வளர்கிறார். படித்துமுடித்து ஒரு பல்கலை கழகத்தில் பகுதிநேர ஆங்கில விரிவுரையாளராகவும் சேர்கிறார். அதற்குமுன் அவர் பல வேலை களுக்கு முயற்சித்திருக்கிறார். கிட்டத்தட்ட முப்பது விதமான வேலைகளுக்கு முயற்சித்தும் ஒன்றும் கிடைக்கவில்லை. இதில் காவல்துறை உள்பட பலரும் அவரை நிராகரித்தார்கள்.

ஒரு வேடிக்கையான நிகழ்ச்சி. அப்போது அவரது ஊருக்கு KFC வந்திருக்கிறது. வேலைக்கு ஆள் எடுத்திருக்கிறார்கள். அவர் உட்பட நேர்முகத்தேர்வுக்கு 24 பேர் வந்திருக்கிறார்கள். அதில் 23 பேரை வேலைக்கு எடுத்திருக்கிறார்கள், இவர் ஒருவரை தவிர. மனுஷனுக்கு எப்படி இருந்திருக்கும்? எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குதுன்னு நாம் புலம்புவோம் இல்லையா? அவர் அப்படி புலம்பவில்லை.

அவர் ஹாவர்ட் யுனிவர்சிட்டிக்கு 10 முறைக்கு மேல் விண்ணப்பித்தும் நிராகரிக்கப்பட்டிருக்கிறார். பின்னாளில் அதே யுனிவர்சிட்டி அவரை சிறப்பு விருந்தினராக அழைத்தபோது இவர் இந்த கதையை அங்கு சொல்லியிருக்கிறார்.

இணையம் வளர ஆரம்பித்த 1996இல் நண்பர்களுடன் அமெரிக்காவிற்கு சென்றிருக்கிறார். அங்கு தான் இணையம் பற்றி அவருக்கு தெரிய வருகிறது. தேடுபொறியில் எதையாவது தேடிப் பார்ப்போ மென்று ’பீர்’ என்று டைப் பண்ணினால் எல்லா நாட்டு பீர்களும் வந்திருக்கின்றன. சீனாவைத் தவிர. மேலும் ஒரு சீன வெப்சைட் கூட அவர் கண்ணில் படவில்லை. ”என்னடா இது சீனாவிற்கு வந்த சோதனை… ஊருக்கு போறோம். முதல் வேலையா வெப்சைட் கம்பெனி தொடங்குறோம்” என்று கிளம்புகிறார்.

நினைத்தபடியே அவர் சீனா வந்ததும் இணையதள நிறுவனம் தொடங்கி இணைய தொடர்பு கொடுத்து அதை பத்திரிகைகளுக்கு, வர்த்தகர்களுக்கு அறிமுகப்படுத்த அழைத்தார். அதுவும் ஒரு காமெடி. இணையத்தை தொடர்பு கொடுத்துவிட்டு முதல் இணைய பக்கம் லோடாக காத்திருக்க, இரண்டு மணிநேரம் கழித்து அது லோடு ஆனதாம். இப்படி ஒரு கடினமான சூழ்நிலையில் அவரது நிறுவனம் கொஞ்சம் கொஞ்சமாக சீனாவிற்கு இணைய உலகை அறிமுகப்படுத்தியது.

ஆரம்பக்கட்ட சறுக்கல்களுக்கு பிறகு அலிபாபா.காம் என்ற ஆன்லைன் வர்த்தக இணையதளத்தை நண்பர்களுடன் இணைந்து உருவாக்குகிறார் ஜாக்மா. நிறுவனத்தின் பெயருக்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது. அப்போது மலேசியாவில் இருந்து முதலீட்டாளர்களை தேடிக் கொண்டிருந்த சமயம். என்ன பெயர் வைக்கலாம் என்று யோசிக்கும் போது அரேபியாவின் ஆயிரத்தொரு இரவுகள் கதைகளில் வரும் அலிபாபா ஞாபகம் வருகிறது. நல்ல பெயராக இருக்கிறதே என்று யோசிக்கிறார். அவரின் டேபிளுக்கு உணவு கொண்டுவந்த பணிப்பெண்ணிடம் உனக்கு அலிபாபா பெயர் தெரியுமா என்று கேட்கிறார். ’ஓ தெரியுமே.. திறந்திடு சீசேம் என்று சொல்வாரே அவர் தானே’ என்கிறார். ஜாக்மாவிற்கு நம்பிக்கை பிறக்கிறது. உலகம் அறிந்த சரியான பெயரைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறோம். இன்னும் கண்ணில் பட்டவர் அனைவரிடமும் இதையே கேட்கிறார். எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. முடிவு செய்துவிட்டார். இது தான் நம்ம கம்பெனியின் பெயர். Alibaba

அடுத்து மளமளவென்று வேலைகள் ஆரம்பித்து வளர்கிறது. அலிபாபா வளர்ச்சியின் வேகம் கண்டு அடுத்தடுத்து மூன்று முதலீட்டு நிறுவனங்கள் சுமார் 25 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்கின்றன. அடுத்து எந்த பெரிய முதலீடும் கோராமல் அசுர வளர்ச்சி அடைகிறது. அலிபாபா ஹாங்காங் பங்குசந்தையில் நுழைய அனுப்பிய விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. ஜாக்மாவின் வாழ்வில் முதல்முயற்சியில் எப்போதும் ஒரு தோல்வியும் அதன் பிறகு ஒரு பெரும் அசுர வெற்றியும் கிடைப்பதே வழக்கம். அதே போல ஹாங்காங் சந்தையில் கிடைக்காத அனுமதி அமெரிக்க பங்குசந்தையில் கிடைக்கிறது. வெறும் 12% நிறுவன பங்குகளை மட்டுமே பங்குசந்தையில் விடுகிறார். அலிபாபாவின் அசுரவளர்ச்சி உலகம் அறிந்த ஒன்று என்பதால் பங்கு வெளியிட்ட முதல்நாளே பங்கின் மதிப்பு எகிறியது. இன்று உலகத்திலேயே பங்குசந்தையின் மூலம் அதிக மூலதனம் திரட்டிய நிறுவனம் அலிபாபா தான்.

தற்பொழுது சீனாவின் முன்ணணி நிறுவனமாக அலிபாபா நிறுவனம் உள்ளது. சீனாவின் பணக்காரர்கள் பட்டியலில் ஒருவராக உள்ள அவரிடம் 3 ஆயிரத்து 66 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் சொத்துகள் உள்ளன என போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. இன்றைய உலகின் மிகச்சிறந்த தொழில்முனைவோர்களில் ஒருவராகவும் அவர் கருதப்படுகிறார்.

இவர் வருகிற திங்கட்கிழமை (10-09-18) 54வயதுயாகும் ஜாக் மா அலிபாபா நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

வருங்காலத்தில் தனது ஓய்வு அறிவிப்பினை இது முடிவல்ல என்றும் ஒரு சகாப்தத்தின் தொடக்கம் என்றும் கூறியுள்ள ஜாக், கல்வி நோக்கம் சார்ந்த சேவையில் தனது நேரத்தினை செலவிட முடிவு செய்துள்ளார் என நியூயார்க் டைம்ஸ் நடத்திய நேர்காணலில் ஜாக் மா தெரிவித்தார்.