பேஸ்புக் நிறுவத்திற்கு இத்தாலி 10 மில்லியன் யூரோ அபராதம்! – AanthaiReporter.Com

பேஸ்புக் நிறுவத்திற்கு இத்தாலி 10 மில்லியன் யூரோ அபராதம்!

இன்றைய நிலையில்  கிட்டத்தட்ட 220 கோடி பேர்களை ஏதேதோ காரணங்களால் வளைத்துப் போட்டு உள்ள  பேஸ்புக்  வாடிக்கையாளர்களின் தகவல்களை வழக்கம் போல் அவர்களுக்கு தெரியாமல் விற்பனை செய்த குற்றத்திற்காக பேஸ்புக் நிறுவனத்திற்கு 10 மில்லியன் யூரோக்களை (ரூ 81 கோடி) இத்தாலி அபராதமாக விதித்துள்ளது.

கேம்பிரிட்ஜ் அனாலிடிகாவின் சுய முகம் வெளியான பின்னரும்.. உண்மைதான்  தகவல்கள் தவறாக பயன்படுத்தப்பட்டதாக 8.7 கோடி பேரிடம் நிறுவனரே மன்னிப்பு கேட்ட பின்னரும் பேஸ்புக் பயன் படுத்துவோர் எண்ணிக்கை  பெரிய அளவில் பாதிப்பில்லாமல் போய் கொண்டிருக்கிறது.  ஸ்நாப்சாட் போன்ற படித்தவுடன் அழிந்துவிடும் தகவல் தொடர்புகள் கொண்ட புதிய சமூக தள வசதிகளை விரும்பத்தொடங்கிவிட்டனர். தங்கள் பெற்றோர் உலாவும் ஃபேஸ்புக் பக்கம் அவர்கள் செல்வதில்லை. 2017ம் ஆண்டில் 25 வயதுக்குட்பட்ட 28 லட்சம் இளைஞர்கள் பேஸ்புக்கை விட்டு விலகியுள்ளனர். 2018ல் இதைவிட அதிகம் பேர் வெளியேறியிருப்பார்கள் என்கிறது ஓர் ஆய்வு.

இதனிடையே இதேபேஸ்புக் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு, அவை பல்வேறு வர்த்தக நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு உலகம் முழுவதும் பரவலாக  தொடர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இத்தாலியின் ஏஜிசிஎம் நுகர்வோர் மற்றும் சந்தை நிலவரக் கண்காணிப்பு அமைப்பு மேற்கொண்ட விசாரணையில், ஃபேஸ்புக்கில் நுழையும் வாடிக்கையாளர்களின் தகவல்களை, வணிக ரீதியாக செயல்படும் நிறுவனங்களுக்கு, அவர்களின் அனுமதி இல்லாமலேயே விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து, ஏஜிசிஎம் பேஸ்புக் நிறுவனத்திற்கு 10 மில்லியன் யூரோக்கள் அபராதம் விதித்துள்ளது. இது தொடர்பாக,  பேஸ்புக் தனது இணைய பக்கத்திலும், செயலியில் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என்றும் கட்டளை இட்டுள்ளது.

இந்த அபராதம் தொடர்பாக கருத்து கூறியிருக்கும் ஃபேஸ்புக் பேச்சாளர், இந்த விவகாரம் குறித்து அந்நாட்டு அதிகாரிகளுடன் பேசி பிரச்சனையை சரி செய்வதாக தெரிவித்தார். மேலும், வாடிக்கை யாளர்களின் தகவல்களை வணிக ரீதியாக பயன்படுத்துவது தொடர்பாக உருவாக்கப்பட்டிருக்கும் கொள்கை மற்றும் முடிவுகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கும் பகிரங்கமாக தெரிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.