கொடநாட்டு பங்களாவில் ஐ.டி. ரெய்டு!

கொடநாட்டு பங்களாவில் ஐ.டி. ரெய்டு!

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த மாதம் 24-ந் தேதி காவலாளி ஓம் பகதூரை 11 பேர் கொண்ட கும்பல் கொலை செய்தது. இந்த சம்பவம் பற்றி நீலகிரி மாவட்ட தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பங்களாவில் ஏராளமான பணம்- நகைகள் கொள்ளை போனதாக தகவல்கள் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தனிப்படையினர் நடத்திய விசாரணையில் காவலாளி கொலை- கொள்ளை வழக்கில் 11 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டது தெரிய வந்தது.

it may 10a

இந்த வழக்கில் இதுவரை 8 பேரை கைது செய்துள்ளனர். முக்கிய குற்றவாளியான ஜெயலலிதா கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் பலியானார். அவரது கூட்டாளியான சயன் விபத்தில் படுகாயமடைந்து கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தலைமறைவாக இருந்து வரும் குட்டி என்கிற பிஜினை தேடி தனிப்படை போலீசார் இன்று வரை கேரளாவில் முகாமிட்டுள்ளனர்.

இதுவரை கைதானவர்களிடம் போலீசார் விசாரித்த போது, கனகராஜ் தான் கொடநாடு பங்களாவில் ரூ.200 கோடி வரை பணம் இருப்பதாகவும், இதை கொள்ளையடித்து பங்கிட்டு கொள்ளலாம் என கூறியதாகவும் தெரிவித்தனர்.

கொள்ளை கும்பலிடம் இருந்து இதுவரை 5 கைக்கடிகாரங்கள், ஒரு கண்ணாடி அலங்கார பொருள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உண்மையிலேயே கொடநாடு பங்களாவில் இருந்து ரூ.200 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு பதில் மர்மமாக உள்ளது.

இதற்கிடையே கொள்ளை சம்பவத்தின் பின்னணியில் வேறு யாரும் உள்ளார்களா? என்ற கோணத்திலும் தனிப்படையினரின் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதுதொடர்பாக எஸ்டேட் மேலாளர் நடராஜ் மற்றும் பங்களா ஊழியர்களிடம் மீண்டும் தீவிர விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே கொடநாடு பங்களாவில் ரூ.200 கோடி பணம் கொள்ளை போனதாக கூறப்பட்ட தகவலையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகளும் ரகசிய விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் கொடநாடு பங்களாவுக்கு 3 கார்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 10 பேர் விசாரணை நடத்தினர்.

பங்களாவில் உள்ள ஜெயலலிதா, சசிகலா ஆகியோரது அறைகள் உள்ளிட்ட 7 அறைகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாக தெரிகிறது.

வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனையால் கொடநாடு பங்களாவின் நுழைவு வாயில் முன்பு சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு முன்பே தடுப்பு வேலி அமைக்கப்பட்டது. பங்களாவுக்குள் செல்ல யாரையும் அனுமதிக்கவில்லை.

பங்களாவுக்கு வெளியே போலீசாரும், தனியார் காவலாளிகளும் பாதுகாப்புக்காக நின்றிருந்தனர்.

இந்த நிலையில் கொட நாடு பங்களாவில் சோதனை குறித்து கோவை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘கொடநாடு பங்களாவில் சோதனை குறித்து தகவல் எதுவும் இல்லை. சென்னை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகிறார்களா? என்றும் தங்களுக்கு தெரியாது’ கூறினர்.

Related Posts

error: Content is protected !!