வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் ‘தெற்கு ஆசிய செயற்கைக்கோள்! – AanthaiReporter.Com

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் ‘தெற்கு ஆசிய செயற்கைக்கோள்!

பிரதமர் உத்தரவை ஏற்று, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) விஞ்ஞானிகள், ‘தெற்கு ஆசியா செயற்கைகோள்’ (ஜி-சாட் 9) உருவாக்கி உள்ளனர். இது ஒரு தகவல்தொடர்பு செயற்கைகோளாகும். சார்க் நாடுகளுக்காக வடிவமைபக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள் இயற்கை பேரிடர் கண்கானிப்பு, தொலை தொடர்பு குறித்த தகவல் பரிமாற்றம் ஆகியவற்றை சார்க் நாடுகள் மத்தியில் மேம்படுத்த உதவும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

isro may 5

இந்த செயற்கைகோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று (வெள்ளிக் கிழமை) மாலை 4.57 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி-எப்09 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. 50 மீட்டர் உயரமும், 2,230 கிலோ எடையும் கொண்ட இந்த செயற்கைக்கோளின் ஆயுள்காலம் மொத்தம் 12 ஆண்டுகள் ஆகும்.

இந்த ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பப்பட்ட நிலையில், இறுதிக் கட்ட பணியான 28 மணி நேர ‘கவுண்ட்டவுன்’ நேற்று பகல் 12.57 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து விஞ்ஞானிகள் இதனுடைய செயல்பாடுகளை கண்காணித்து வருகின்றனர். இது ஜி.எஸ்.எல்.வி. ரகத்தில் 11-வது ராக்கெட்டாகும். இந்த ஜி-சாட் 9 செயற்கைகோள் 2,230 கிலோ எடை கொண்டது. தகவல் தொடர்புக்கு உதவும் ‘12 கே.யு.பேண்ட்’ எந்திரங்களை சுமந்து செல்கிறது. இதனுடைய ஆயுள் காலம் 12 ஆண்டுகள். இந்த செயற்கைகோள், தகவல்தொடர்பு, தெற்கு ஆசிய நாடுகளில் உள்ள மாநிலங்களுக்கு பேரிடர் பற்றி முன்கூட்டியே தகவல்களை தெரிவிப்பது, டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தகவல் திறனை அளிப்பது, மாநில நூலகங்களை இணைக்கும் திறன் கொண்டது.

2014ம் ஆண்டு மங்கல்யான் விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதை கொண்டாடிய கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி சார்க் நாடுகளுக்காக இஸ்ரோ சார்பில் ஒரு செயற்கைக்கோள் அனுப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.அவரின் வேண்டுகோளை ஏற்று இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ள இந்த பணிக்கு தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள எந்த நாட்டிலும் சொந்தமாக செயற்கைக்கோளை செலுத்தும் வசதி இல்லாத நிலையில் இந்தியா அந்த பொறுப்பை மேற்கொண்டிருப்பது வரவேற்பை பெற்றுள்ளது.

இலங்கை, பங்களாதேஷ், பூட்டான் மாலத்தீவு இலங்கை அப்கானிஸ்தான் ஆகிய சார்க் நாடுகள் இந்த திட்டத்தில் பங்கேற்றுள்ள நிலையில், பாகிஸ்தான் மட்டும் பங்கேற்கவில்லை என்பதும் 253 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த செயற்கைக்கோளின் மொத்த செலவை இந்தியாவே ஏற்றுள்ளது என்பதுடன் இந்த செயற்கை கோள் இந்தியா சார்பில் தெற்கு ஆசிய நாடுகளுடன் நட்புறவை வளர்ப்பதற்காக பரிசாக வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது