தக்கனூண்டு தக்காளி _ இஸ்ரேல் தயாரித்து சாதனை!

தக்கனூண்டு தக்காளி _ இஸ்ரேல் தயாரித்து சாதனை!

நமது நாட்டை போல் அல்லாமல் இஸ்ரேல் தண்ணீர் வசதி குறைவாக உள்ள நாடு. இருப்பினும் நவீன தொழில்நுட்பங்களை புகுத்தி விவசாய உற்பத்தியில் அந்நாடு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக காய்கறிகள், பழங்கள் உற்பத்தியில் சிறப்பான நிலையை இஸ்ரேல் எட்டி வருகிறது. இதேபோல் விவசாய ஆராச்சியிலும் இஸ்ரேல் சிறந்து விளங்குகிறது. அதற்கு உதாரணமாக செர்ரி தக்காளி எனப்படும் சிறிய அளவிலான தக்காளியை வடிவமைத்து ஏற்கனவே இஸ்ரேல் சாதனை படைத்திருந்தது. இந்த வகை தக்காளிக்கு அமெரிக்காவில் சிறப்பான வரவேற்பு காணப்படுகிறது. இந்நிலையில் இஸ்ரேலின் கேத்மா என்ற நிறுவனம் உலகிலேயே சிறிய அளவிலான தக்காளியை உருவாக்கி சாதனை படைத்துள்ளது.

இஸ்ரேலின் தெற்கு ஆரவா பாலைவனத்தில் அமைந்துள்ளது கேத்மா நிறுவனம். இந்த நிறுவனத்தில் ஒரு புளூபெர்ரி பழத்தின் அளவுள்ள உலகின் மிக சிறிய தக்காளியை உருவாக்கியுள்ளனர். இந்த தக்காளி உருவாக்கப்பட்டது இஸ்ரேலுக்கு கிடைத்த பெருமை என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் இதுபோன்ற பல விவசாய புதுமைகள் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தக்காளியின் விதை முதலில் ஹோலந்து நாட்டில் உருவாக்கப்பட்டது.

பின் அதில் தெற்கு இஸ்ரேலின் பருவநிலைக்கு ஏற்ப வளரும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டன. இஸ்ரேலின் ஒரு ஷெக்கல் நாணயத்தை விட சிறியதாக இருக்கும் இந்த தக்காளி சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் வளரக்கூடியது.

இந்த மாதம் இஸ்ரேலில் நடக்கவுள்ள மூன்று நாள் சர்வதேச விவசாய கண்காட்சியில் இந்த புதிய வகை தக்காளி இடம்பெறுகிறது. தற்போது இஸ்ரேல் விவசாயிகள் மற்றும் உணவுகலை நிபுணர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த தக்காளி சர்வதேச கண்காட்சியில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

error: Content is protected !!