பிரதமர் மோடியை டெல்லி போய் சந்தித்த தமிழக ஊடக முதலாளிகள்! – பின்னணி இதுவா? – AanthaiReporter.Com

பிரதமர் மோடியை டெல்லி போய் சந்தித்த தமிழக ஊடக முதலாளிகள்! – பின்னணி இதுவா?

தமிழகத்தில் எப்படியாவது ஆட்சியைப் பிடிக்கணும்னு பாஜக நினைக்கிறது. அதற்காகக்தான் ஒரு எம்எல்ஏ கூட இல்லாம தமிழகத்தில் ஆட்சியை நடத்திட்டு வருகிறது. ஆனால் இங்கு உள்ளவர்கள் செய்யும் ஊழல்களால், பாஜக மேலிட தலைவர்கள் வெறுத்துப் போய் விட்டார்களாம். இதனால் பேசாமல் நாமே ஆட்சியை பிடிக்கனும் என்று முடிவெடுத்து விட்டார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது பத்திரிகைகளின் உரிமையாளர்கள், ஆசிரியர்களை மோடி, அமீத்ஷா சந்தித்துப் பேசினர். அதன்பின்னர், சென்னை அருகே நடந்த ராணுவ கண்காட்சியை பார்வையிட வந்த மோடி, கோட்டூர்புரத்தில் உள்ள ஐஐடி வளாகத்தில் பத்திரிகைகளி்ன் உரிமையாளர்களை சந்தித்துப் பேசினார்.

தற்போது, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்பட்டில் தமிழகத்தைச் சேர்ந்த பத்திரிகை களின் உரிமையாளர்கள் பாலசுப்பிரமணிய ஆதித்தன்(தினதந்தி), ரமேஷ்(தினமலர்), ராம்(இந்து), மனோஜ்குமார் சந்தாலியா(இன்டியன் எக்ஸ்பிரஸ், தினமணி), சீனிவாசன்(ஜூனியர் விகடன், ஆனந்த விகடன்), வரதராஜன்(குமுதம், குமுதம் ரிப்போர்ட்டர்), குணசேகரன்(நியூஸ்18), கார்த்திகை செல்வன்(புதிய தலைமுறை), ராஜேந்திரன்(ராஜ் டிவி), தேவநாதன்(வின் டிவி) மற்றும் பலர் சென்றுள்ளனர். (தினகரன், நக்கீரன் மட்டும் செல்லவில்லை) இந்த சந்திப்பு பிரதமர் மோடியின் அலுவலகத்தில் திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு நடந்துள்ளது. ஒரு மணி நேரம் சந்திப்பு, சிலரிடம் தனித்தனியாக ஆலோசனை நடந்துள்ளது.

அதன்பின்னர் அனைவரும் செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் ராஜீவ் வரதன் ரத்தோரை சந்திக்கும்படி உத்தரவு வந்ததால், பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்றுள்ளனர். அமைச்ரை ஒவ்வொரு பத்திரிகையின் உரிமையாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் தனித்தனியாக சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது ஒவ்வொருவரும் அவர்களது கோரிக்கைகளை மனுவாக கொடுத்துள்ளனர். அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதாம்.

இதற்கு பலனாக, தமிழகத்தில் பாஜகவை வளர்த்து விட வேண்டும், மோடி மற்றும் அவர் சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எதிர்க்கட்சிகளின் செய்திகளைப் புறக்கணிக்க வேண்டும், தமிழகத்தில் பாஜக மீது தமிழர்கள் கொண்டுள்ள வெறுப்புணர்வை மாற்ற வேண்டும், குறிப்பாக எட்டு வழிச்சாலை போன்று மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள்தான் சிறந்தவை என்று எழுத வேண்டும் என்று அவர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதை அப்படியே செய்வதாக அனைவரும் சத்தியம் செய்யாத குறையாக வாக்குறுதி கொடுத்து விட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. அனைவரும் டெல்லியில் இருந்து வரும்போது மனசு நிறைவாக ( நீங்கள் தவறாக நினைத்தால் கம்பெனி பொறுப்பல்ல) வந்துள்ளனர். வாழ்க பத்திரிகை ஜனநாயகம். ஊடக அறம்.

மோகன ரூபன்