தாய்ப்பால் கொடுப்பதை கட்டாயமாக்கி சட்டம்?! – ஐகோர்ட் நீதிபதி யோசனை! – AanthaiReporter.Com

தாய்ப்பால் கொடுப்பதை கட்டாயமாக்கி சட்டம்?! – ஐகோர்ட் நீதிபதி யோசனை!

தாய்ப்பால் கொடுப்பதை கட்டாயமாக்கி ஏன் சட்டம் இயற்றக் கூடாது என்று மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த டாக்டர் ஐஸ்வர்யா என்பவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கில், ‘நான் எம்பிபிஸ் படித்து சிவகாசியில் உள்ள சித்துராஜபுரம் ஆரம்ப சுகாதார மையத்தில் பயிற்சி டாக்டராக 2015ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி பணியில் சேர்ந்தேன். அதே ஆண்டு ஜூலை மாதம் முதல் ஜனவரி மாதம் வரை 6 மாதம் பேறு கால விடுப்பு எடுத்தேன். இதைத் தொடர்ந்து மருத்துவ மேற்படிப்பில் சேர 2 ஆண்டு கால பணியை கடந்த ஆண்டு மார்ச் மாதம் நிறைவு செய்தேன். இதனால் எனக்கு மருத்துவ மேற்படிப்பில் சேர கீழ்ப்பாக்கம் மருத்துவ மனையில் இடம் கிடைத்தது. ஆனால் 2 ஆண்டு கால பணியை முழுமையாக நிறைவு செய்ய வில்லை எனக் கூறி என்னை பணியில் இருந்து விடுவிக்க சிவகாசி சுகாதார சேவை துணை இயக்குனர் மறுத்து உத்தரவிட்டார். இதனால் எனது மருத்துவ பட்டமேற்படிப்பு சேர்க்கையை கீழ்ப்பாக்கம் மருத்துவமனை ரத்து செய்தது. இது தவறானது’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி கிருபாகரன் விசாரித்து, ‘‘ஐஸ்வர்யா தற்காலிக பயிற்சியாளர் என்பதால் அவரின் பேறுகால விடுமுறை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என அரசு தரப்பில் கூறியதை ஏற்க முடியாது. மனுதாரர் ஏற்கனவே மருத்துவ மேற்படிப்புக்கு முழு தகுதி பெற்றிருப்பதால், அடுத்த ஆண்டு மருத்துவ மேற்படிப்பிற்கு விண்ணப்பிக்காமல் அவரை தேர்வு செய்ய வேண்டும். சட்டம் இயற்றுவது மட்டும் அரசின் கடமை இல்லை, அதனால் உரியவருக்கு பலன் கிடைக்க வேண்டும்.

தாய்ப்பால் என்பது குழந்தைகளுக்கான முதல் தடுப்பு மருந்து. இந்தியாவில் தாய்ப்பால் கொடுப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 99 ஆயிரத்து 500 குழந்தைகள் பல்வேறு நோய்களுக்கு பலியாகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் பேறு காலத்தில் குழந்தைகள் இறப்பது அதிகமாகி உள்ளது. பெண்களின் பேறுகால விடுப்பு மற்றும் தாய்ப்பாலின் அவசியம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காக மத்திய மாநில அரசுகளை வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கிறேன். இந்த வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுக்கு நான் எழுப்பும் கேள்விகள்.

(1) மத்திய அரசு வழங்கும் பேறுகால விடுப்பை தமிழக அரசு போல 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக ஏன் உயர்த்தி வழங்கக்கூடாது?

(2) மத்திய அரசை போல பேறுகால விடுப்பை 6 மாதங்களாக உயர்த்தாத மாநிலங்கள் அடுத்த ஒரு ஆண்டுக்குள் உயர்த்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு ஏன் அறிவுறுத்தக்கூடாது?

(3) தேசிய நலன் கருதி மாநில பட்டியலில் உள்ள பேறுகால விடுப்பையும், குழந்தைகளுக்கான தாய்பாலுக்கான உரிமையையும் மத்திய அரசு ஏன் கையாளக்கூடாது?

(4) குறைந்தபட்சம் 6 மாதத்தில் இருந்து 2 ஆண்டு வரை தாய்ப்பால் குடிப்பதை பிறந்த குழந்தையின் அடிப்படை உரிமையாக ஏன் அறிவிக்கக் கூடாது?

(5) மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண்கள் தங்கள் குழந்தைகளை கவனிக்கவும், உணவளிக்கவும் கிரிச் வசதி செய்யப்பட்டுள்ளதா?

(6) பிரசவ கால ரிஸ்க்கை கருத்தில் கொண்டு சிறப்பு காப்பீட்டு திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் ஏன் உருவாக்கக்கூடாது?

(7) மக்கள் தொகை உயர்வை கருத்தில் கொண்டு, 2 குழந்தைகளுக்கு பிறகு பேறு கால விடுப்போ, பயன்களோ கிடையாது என பெண் ஊழியர்களிடம் உத்தரவாதம் எழுதி வங்குவதை ஏன் கட்டாயமாக்கக்கூடாது?

(8) அரசு ஊழியர்களுக்கான பேறு கால விடுப்பை வழங்க மறுக்கும் அதிகாரிகள் மீது நடிவடிக்கை எடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் ஏன் விதிகளை உருவாக்கக்கூடாது?

(9) குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் மார்பக புற்றுநோய் ஒழிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பேறு கால விடுப்பை பயன்படுத்துபவர்கள் அந்த விடுப்பு காலத்தில் மட்டுமாவது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதை மத்திய, மாநில அரசுகள் ஏன் கட்டாயமாக்கக்கூடாது?

(10) பிரபலமானவர்கள், நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், மருத்துவ ஆலோகர்களை கொண்டு தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை பணிக்கு செல்லும் பெண்களுக்கு மத்திய, மாநில அரசுகள் ஏன் விளம்பரப்படுத்தக்கூடாது?

(11) ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளில் உள்ளதுபோல தாய்ப்பால் ஊட்டுவதை கட்டாயமாக்கும் வகையில் மத்திய அரசு ஏன் சட்டம் கொண்டு வரக்கூடாது?

(12) குழந்தைகளுக்கான உணவு பொருட்களை விளம்பரம் படுத்துவதை தடை விதிக்கும் சட்டப் பிரிவுகள் முறையாக அமல்படுத்தப்படுகிறதா?

(13) பொது இடங்களில் தாய்ப்பால் தருவதற்கு தனி அறை அமைக்க சட்டம் இயற்றப்படுமா?

இந்த கேள்விகளுக்கு ஜனவரி 22-ம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டார்.