இலங்கை குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 310ஆக உயர்வு: -ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு! – AanthaiReporter.Com

இலங்கை குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 310ஆக உயர்வு: -ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு!

இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்ட்ர தினத்தன்று 3 தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் என 8 இடங்களில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு ஐ.எஸ். என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றிருப்பதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

கொழும்பு நகரில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி ஏராளமான கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் தேவாலயக் கட்டிடத்தின் சில பகுதிகள் வெடித்துச் சிதறின. இந்த குண்டுவெடிப்பு நடந்த சற்று நேரத்தில் கொழும்பு நகரில் உள்ள முக்கிய நட்சத்திர ஓட்டல்களைக் குறி வைத்து குண்டுவெடிப்புகள் நடந்தன.

இதைத்தொடர்ந்து நீர்கொழும்பு பகுதியில் உள்ள புனித செபாஸ்டியன் தேவாலயத்திலும் வெடிகுண்டு வெடித்தது. பின்னர் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மட்டக்களப்பு நகரில் உள்ள சியான் தேவாலயத்திலும் பயங்கரத் தாக்குதல் நடந்தது. மொத்தம் 8 இடங்களில் தாக்குதல்கள் நடந்தன. இந்த கொடூர குண்டுவெடிப்புகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 ஆக தற்போது உயர்ந்துள்ளது. மேலும், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை.

அதே சமயம், இதனை முஸ்லிம் அமைப்பு ஒன்று நிகழ்த்தியிருக்கலாம் என்று இலங்கை அரசு குற்றம்சாட்டி வந்த நிலையில், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றிருப்பதாக அமக் என்ற செய்தி நிறுவனத்தை மேற்கோள்காட்டி ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அமக் என்பது ஐ.எஸ். பயங்கரவாத அமைப்போடு தொடர்புடைய செய்திதளம் என்பது குறிப்பிடத்தக்கது.