இவ்வளவு கேவலமாகவா இன்ஜினியரிங் பட்டதாரியின் நிலை உள்ளது?

இவ்வளவு கேவலமாகவா  இன்ஜினியரிங் பட்டதாரியின் நிலை உள்ளது?

இந்தப் பொய்யான போலியான நாடகங்கள் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு அரங்கேறும்? இந்தக் கட்டுரையை எழுதும்போது இப்படி ஒரு பிற்போக்குத் தனமான நேர்மையற்ற நம்பிக்கை தராத கட்டுரையை ஏன் எழுத வேண்டும் என்ற எண்ணம் எமக்கு இல்லாமல் இல்லை. தமிழ்நாட்டிலுள்ள கீழ்த்தட்டு நடுத்தட்டு மக்களின் பிள்ளைகள் நம்மைப்போல பொறியியல் கல்வி கற்று மேல்நிலைக்குப் போக வேண்டாமா என்ற கேள்வி உள்மனத்தில் கடந்த ஓராண்டுக்கு மேலாகவே உழன்று கொண்டிருக்கிறது. இத்தகைய திடீர் முடிவை எடுக்கத் தூண்டிய காரணிகள் எவை? உண்மையிலேயே இந்த முடிவைச் செயற்படுத்தினால் எத்தகைய நல்ல பயன்கள் ஏற்படும் என்பதை நன்கு ஆற அமர எண்ணியே இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.

EDIT AUG 16

கடந்த நான்கைந்து ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் உள்ள பெரிய தொழில்நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்துள்ளன. தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிய பொறியியல் பட்டதாரிகள் பலர் பணியிலிருந்து பெரும் அளவில் விலக்கப்பட்டார்கள் 5-, 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்களின் மிகு ஊதியம் மற்றும் சலுகைகள் குறைக்கப்பட்டன.கட்டுமானத்துறையில் சென்னையிலும் புறநகர்களில் கட்டப்பட்ட லட்சக்கணக்கான குடியிருப்புகள் விற்காமல் தொழில் பெரிதும் நொடித்துப் போய் உள்ளது. மத்திய கிழக்குக் கரை நாடுகளில் வேலைபார்த்த பொறியியல் பட்டதாரிகளும் தொழில் திறமையாளர்களும் சொந்த நாட்டுக்குத் திருப்பிய அனுப்பப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கெல்லாம் வேலைவாய்ப்பை வழங்கி பாதுகாக்க வேண்டிய தமிழக அரசோ அரசுத்துறை அதிகாரிகளோ இதைப்பற்றிப் பேசுகிறார்களா? ஏதாவது உடன் நடவடிக்கை எடுக்கிறார்களா என்றால் ஏதுமில்லை. பொறியியல் பட்டதாரிகளில் 5% விழுக்காட்டினருக்குக்கூட அரசாங்க வேலைகள் இல்லை. பொறியியல் துறைகளில் உள்ள காலியிடங்களை உடனுக்குடன் நிரப்புவதுமில்லை. (பிரிட்டிஷ் பீரோக்கரசி தோற்றது விடுங்கள்) தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்தோர் எண்ணிக்கை 84.79 லட்சங்களைத் தாண்டி நிற்பதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதைப்பற்றிய அக்கறை ஏன் சிறிய சலனம்கூட அரசுத்துறை அதிகாரிகளிடம் காணப்படவில்லை என்பது இந்தக் காலகட்டத்தின் பேரவலம், சாபக்கேடு.

தமிழ்நாட்டிலுள்ள 552 பொறியியல் கல்லூரிகளிலிருந்து வெளிவரும் பட்டதாரிகளின் எண்ணிக்கை ஓராண்டிற்கு 80 ஆயிரங்களுக்கு மேலே. அனுமதிக்கப்பட்ட கணக்கெடுப்பின் எண்ணிக்கையில் ஆண்டுதோறும் 50 ஆயிரம்/ 60 ஆயிரம் இடங்கள் நிரம்புவதே இல்லை. இருக்கின்ற கல்லூரிகளில் புகழ்பெற்ற பெயர் வாங்கிய 30 கல்லூரிகளில் 100 %
சேர்க்கை, இடைநிலையிலுள்ள 100 கல்லூரிகளில் 50% சேர்க்கை, மீதமுள்ள 200 கல்லூரிகளில் 30 % சேர்க்கை, எஞ்சியுள்ள 200க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் 10 % முதல் – 20% சேர்க்கை.இவற்றிற்கு என்னென்ன காரணங்கள் என்று பட்டியலிடலாமா?

கல்லூரிகளில் தேவையான, போதுமான உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை ஆய்வகங்கள், நூலகங்கள், விளையாட்டுத் திடல்கள், தங்கும் விடுதிகள் இல்லை. 200 பேர்கள் இருக்க வேண்டிய ஒரு கல்லூரியில் ஆசிரியப் பெருமக்கள் 50 பேர்கள்கூட இல்லாமை. இவர்களிடம் திறமையாகச் சொல்லிக் கொடுக்கும் வல்லமை இல்லை. 95 % மேலே களப்பொறியியல் அனுபவமே இல்லை. Internet, Power point Presentation என்பவற்றின் மூலமாகவே காண்பிப்பு அடிப்படை பொறியியல் அறிவைச் சொல்லிக்கொடுப்பதே இல்லை. தரவு ஏடுகளே பலருக்குத் தெரியவில்லை. மாணவர்களைத் தேர்வு எழுதத் தயாரிக்கும் வேலை மட்டுமே நடக்கிறது.

சுருக்கமாகச் சொல்வதென்றால்…. இன்றைய பொறியியல் கல்லூரிகளில் படித்து வரும் 95% பட்டதாரிகள் அதாவது தொழிலைச் செய்யும் திறமைகள் இல்லை. எனவே, வேலை கிடைப்பதில்லை. உண்மையான சில வேலை விளம்பரங்களைக் கீழே தந்துள்ளோம். 10வது கூடப் படிக்காத 2 ஆண்டு அனுபவமுள்ள ஓட்டுநர் சம்பளம் ரூ.15 ஆயிரம்,- ரூ.20 ஆயிரம் ..5ம் வகுப்பு தாண்டாத ஒரு புரோட்டா மாஸ்டர் சம்பளம் ரூ.25 ஆயிரம். குறைந்த அனுபவமே உடைய பிளம்பர், எலக்ட்ரீஷியன் சம்பளம் ரூ. 20 ஆயிரம். ஆனால் பிளஸ் 2க்கு மேலே ரூ.10 லட்சம் செலவழித்து நான்கு ஆண்டுகள் படித்த ஒரு பொறியியல் பட்டதாரிக்கு மாதச் சம்பளம் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம். எவ்வளவு கேவலமாகப் பொறியியல் பட்டதாரியின் நிலை உள்ளது?

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் படித்து வெளிவந்து இன்று வேலையில்லாமலிருக்கும் பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை 1.71 லட்சம்; முதுநிலைப் பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை 1.59 லட்சம். மொத்தம் 3.30 லட்சத்தைத் தாண்டுகிறது. இந்நிலையில் எதற்காக இத்தனை பொறியியல் கல்லூரிகள்? யாருக்காக அவை நடத்தப்படுகின்றன?
ஏன் இந்த நிலைமை? யார் காரணம்?

1980ம் ஆண்டுகளில் கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் புதிய புதிய பொறியியல் கல்லூரிகள் நூற்றுக்கணக்கில் தொடங்கப்பட்டன. எனவே திரு எம்ஜிஆர் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்த செ.அரங்கநாயகம், தமிழ்நாட்டு மாணவர்களின் பணம் வெளி மாநிலங்களுக்குப் போகக் கூடாது என்ற போர்வையில் 100க்கு மேற்பட்ட பொறியியற் கல்லூரிகள் திறக்கப்பட காரணமாக இருந்தார். அதற்குப் பின் கருணாநிதி அமைச்சரவையிலிருந்த பொன்முடி, ஜெயலலிதா அமைச்சரவையிலிருந்த சி.வி. சண்முகம், பழனியப்பன் போன்றோரும் இந்த 10 ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் தொடங்கப்பட அனுமதி அளித்தனர். (இதன் பின்னால் நூற்றுக் கணக்கான கோடிகள் கைமாறியதாக செய்தி இதழ்கள், ஊடகங்கள் தொரிவித்தன இதைப்பற்றிய தகவல்கள் ஏதும் நம்மிடமில்லை)
இன்றைக்குத் தமிழ்நாட்டில் 552 பொறியியல் கல்லூரிகள் இப்படித்தான் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. தேவை கருதி அல்ல, வேலைகள் கிடைப்பதற்காக அல்ல. வெற்றுப்பெருமை வீண் தம்பட்டம் அடித்துக் கொள்வதற்காக மட்டும். இவற்றுள் 7+9+21= 37 மட்டுமே அரசுக் கல்லூரிகள், மற்றவை அனைத்தும் வணிக நோக்கில் இயங்கும் தனியார்மயக் கல்லூரிகள்.
நாங்கள் 1962&-70 வாக்கில் படித்தபோது தமிழ்நாட்டில் இருந்த மொத்த பொறியியல் கல்லூரிகள் 8 மட்டுமே. அரசுக்குச் சொந்தமானவை 4. தனியாருக்குச் சொந்தமானவை 4 மட்டுமே. இன்றோ அரசுக்குச் சொந்தமானவை 37, தனியாருக்குச் சொந்தமானவை 515. தன்னாட்சி பெற்ற பல்கலைக்கழகங்கள் 27.

1970 வாக்கில் வெளிவந்தவர்களுக்கே 30 % வேலை கிடைக்கவில்லை. 1980வாக்கில் தொழில் துறை கட்டுமானத்துறை வேகமான வளர்ந்தமையால் நிறைய வேலைகள் உருவாக்கப்பட்டன. ஆனால் 2005க்குப் பிறகு பொறியாளர் வேலைவாய்ப்பில் மிகப்பெரிய சாரிவு. 80 % பொறியியல் பட்டதாரிகளுக்குப் பொருத்தமான, தகுதியான வேலைகள், ஊதியம் கிடைக்கவில்லை. கிடைத்தவையும் under employment.

1962&-1970 வாக்கில் மதிப்பெண் அடிப்படையில் பொறியியற் கல்லூரியில் சேர்ந்த ஒரு மாணவர், 5 ஆண்டுகளுக்கும் சேர்த்து எல்லாச் செலவுகளுக்கும் (கல்லூரிக் கட்டணம், புத்தகங்கள், விடுதிக்கட்டணம், உணவு, உடை) ரூ.5 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரையே. அதையும் அரசு கல்வித் தகுதி உதவியாகப் (Merit Scholarship – State & Central) பெற்றவர் பலர். ஆனால் இன்று (2015&-16ல்) +2 படித்துவிட்டு 4 ஆண்டு பொறியியல் பட்டப்படிப்புக்கு ரூ5 லட்சம் (அரசுக் கல்லூரிகளில்) ரூ.10 லட்சம் தனியார் கல்லூரிகளில் சிற்றூர் பகுதிகளிலிருந்து வரும் மாணவர்கள் நிதிச் சிக்கலில் மாட்டிக்கொண்டு அவர்களுடைய பெற்றோர் நிலத்தை விற்று வங்கிகளில் கடன் வாங்கி திருப்பிக் கட்ட வழியின்றி விழிபிதுங்கி நிற்கிறார்கள்.

நன்றாகப் படித்து முடித்தாலும் ரூ.10 ஆயிரம், ரூ.15 ஆயிரத்துக்குக் கூட வேலை கிடைக்காவிட்டால் அவர்கள் என்ன செய்வார்கள்? ஒரு BA/ MA படித்த மாணவர்கள் சிறிய வேலைகளுக்கும் (உதவியாளர், எழுத்தர் & Group IV services ) செல்லும் மனநிலை உள்ளவர்களாக உள்ளனர். ஆனால் BE/ B.Tech படித்துவிட்டால் இத்தகைய நிறுவன உரிமையாளர்கள் அதிகம் படித்த இந்தப் புத்திசாலிகளை (நிலைத்து அவர்களிடம் வேலை பார்க்க மாட்டார்கள், பணிந்து நடக்கமாட்டார்கள் என்ற நிலைப்பாட்டினால்) வேலைக்கு எடுத்துக் கொள்வதில்லை. தமிழக அரசு/மத்திய அரசு நடத்தும் போட்டித் தேர்வுகள் எழுதி வேலை பெறுவோர் 5 % க்குக் குறைவே.

இத்தகைய நிலையில் வெட்டிப் பட்டதாரிகளை உற்பத்தி செய்யும் இன்றைய இரண்டாந்தர, மூன்றாம் தர, நான்காம் தரப் பொறியியல் கல்லூரிகள் தேவைதானா? மாணவர் மனத்திலும் பெற்றோர்களின் மனத்திலும் வெறும் கனவுகளை வளர்ப்பவை, வாழ்வதற்கு வழிசெய்யாதவை வேண்டுமா என்ன?உலகத்தரமான கல்வி எல்லோருக்கும். பொறியியல் படித்த அனைவருக்கும் உடனடியாக உரிய வேலைவாய்ப்பு (வெறும் ஏட்டில்) பிற மாநிலங்களில் தமிழ்நாட்டை முதல் மாநிலமாக (Numero Uno) ஆக்குவோம் என்பவை எல்லாம் வெற்று முழக்கமாகவே உள்ள நிலையில் இந்த போலியான நாடகத்தை இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு நடத்த அனுமதிப்போம்?

இதைவிடக் கொடுமை என்னவென்றால் இத்தகைய பொறியியல் கல்லூரி முதல்வர்கள் துணைவேந்தர்கள் பேராசிரியப் பெருமக்கள் (மாத ஊதியம் ரூ.1. லட்சம் முதல் ரூ.10 லட்சம் பெறுபவர்கள்) பொறியியல் பட்டதாரிகளின் இன்றைய அவல நிலை பற்றி வாயே திறப்பதில்லை, கருணையே காட்டுவதில்லை. அரசாங்கத்தை இடித்துரைப்பதே இல்லை. இதையும் மீறி சமுதாய அக்கறையோடு கல்வித் துறையில் மாற்றம் வேண்டும் என உரக்கக் குரல் எழுப்பும் கல்வியாளர்கள் பொறியியல் வல்லுநர்கள் ஓரங்கட்டப் படுகிறார்கள், ஒதுக்கப்படுகிறார்கள். இன்றைய பொறியியல் கல்வி விழிசி இன் Corporate கூண்டுக்குள் சிக்கித் தவிக்கிறது.

இன்று Campus Interview எல்லாமே பெரிய நாடக விளம்பரமாக ஏமாற்று வித்தையாகவே நடந்து கொண்டுள்ளது என்பது மற்றுமொரு கூத்து? AICTE, UGC, Director of Technical Education இவர்களுக்கு இதில் எந்தப் பொறுப்புமில்லையா? இதில் மாநில அரசுக்கும் உயர் அதிகாரிகளுக்கும் எந்தப் பொறுப்பும் கடமையும் இல்லையா? எல்லாவற்றிற்கும் உப்புச் சப்பில்லாத உதவாக்கரை சப்பைக் கட்டுகள், வெற்றறிக்கைகளே மிச்சம்.

எனவே தான் சொல்லுகிறோம், -வலியுறுத்துகிறோம் தமிழ்நாட்டிலுள்ள உதவாக்கரை 500 பொறியியல் கல்லூரிகளை உடனே மூடிவிடலாம். மூடப்படும் கல்லூரிகளை பிற படிப்புகளுக்கும் சேவைகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

பொறி. ஏ. வீரப்பன்

error: Content is protected !!