ரயில் பயணிக்களூக்கோர் இனிய அறிவிப்பு: இனி டிக்கெட் புக் செய்யும் போது சீட் & பெர்த் விபரம் தெரிஞ்சக்கலாம்! – AanthaiReporter.Com

ரயில் பயணிக்களூக்கோர் இனிய அறிவிப்பு: இனி டிக்கெட் புக் செய்யும் போது சீட் & பெர்த் விபரம் தெரிஞ்சக்கலாம்!

இந்தியர்களில் பலருக்கும் மிகவும் பிடித்த ரயில் பயணத்தில் இனி இதற்கான டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே ஆன்லைனில் இருக்கை விவரங்களை அறியும் வசதியை ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கிவைத்தார். அதாவது ஆன்லைனில், விமான டிக்கெட் முன் பதிவு செய்யும் போது முன் பதிவு செய்யப் பட்ட இருக்கைகளும் காலியாக உள்ள இருக்கைகளும் வெவ்வேறு நிறங்களால் உணர்த்தப்படும். அதே போல் இனி ஐஆர்சிடிசி இணைய தளம் வாயிலாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போதும் காலியாக உள்ள இடங்கள், முன் பதிவான இடங்கள், பகுதியாக முன்பதிவான இடங்களும் வெவ்வேறு நிறங்களால் உணர்த்தப்படும்.

அதிலும் பெட்டிகள் வாரியாக, படுக்கைகள் வாரியாக இந்த தகவல் வரைபட வகைக்குறிப்பு (Graphical Representation) மூலம் உணர்த்தப்படும்.இதன்மூலம் முன்பதிவு அட்டவணை தயாரான பின்னரும்கூட பயணிகள் எந்தெந்த இடங்கள் காலியாக உள்ளன என்பதை அறிந்து டிக்கெட் பரிசோதகர் வாயிலாக இருக்கை பெற முடியும்.

இந்த நடைமுறை அனைத்து ரயில்களிலும் அறிமுகமாகியுள்ளது. மேலும், ரயில் புறப்படும் இடத்தில் மட்டுமல்ல வழியில் உள்ள நிலையங்களில் ஏறுபவர்களும்கூட அந்த நிலையத்திலிருந்து இருக்கை கிடைக்குமா என்பதை இந்த வசதி மூலம் அறிந்து கொள்ளலாம். செல்ஃபோன்களில் ஐஆர்சிடிசி செயலியிலும் இந்த வசதியைப் பெற முடியும். இதனால், டிக்கெட் முன்பதிவில் வெளிப்படைத் தன்மை உறுதி செய்யப்படும் என சேவையை அறிமுகப்படுத்தி வைத்த அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

ரயில் முன்பதிவு முதல் அட்டவணையானது ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன்னதாக தயாரிக்கப்படும். அப்போது முதல் அட்டவணையின்படி இருக்கைகள் விவரம் ஆன்லைனில் தெரிவிக்கப்படும்.

இரண்டாவது அட்டவணை என்பது ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் தயாராகும். அப்போதும்கூட ஏதாவது இருக்கைகள் காலியாக இருக்கின்றனவா என்பதை பயணிகள் உறுதி செய்து கொள்ள இயலும். அதாவது முதல் அட்டவணை தயாரிப்புக்குப் பின்னர் ரத்து செய்யப்படும் டிக்கெட்டுகள் இரண்டாவது அட்டவணையில் காலி இருக்கையாக அறிவிக்கப்படும்.

இரண்டு அட்டவணைகளுமே ஒவ்வொரு ரயில் நிலையத்துக்கு ஏற்றவாறு அப்டேட் செய்யப்பட்டுக் கொண்டே இருக்கும். இது தவிர பிஎன்ஆர் கொடுத்து தகவல் அறிய முற்படும்போது பயணிகள் தங்கள் இருக்கை துல்லியமாக எங்குள்ளது என்பதையும் வரைப் பட வகைக் குறிப்பு மூலம் அறியமுடியும்.