விமானப் பயணிகளுக்கு ரூ. 50 லட்சம் வரை இலவச பயண காப்பீடு! – ஐஆர்சிடிசி அறிவிப்பு – AanthaiReporter.Com

விமானப் பயணிகளுக்கு ரூ. 50 லட்சம் வரை இலவச பயண காப்பீடு! – ஐஆர்சிடிசி அறிவிப்பு

இந்தியாவின் பயண காப்பீட்டு திட்டம் சர்வதேச மருத்துவ செலவுகள் மற்றும் பயணம் தொடர்பான காப்பீட்டு தேவைகள் ஆகியவற்றை வழங்குகிறது. பயண தாமதங்கள், பயண குறுக்கீடுகள், பயணம் ரத்து மற்றும் பயண தொடர்புடைய சிக்கல்களுக்கு காப்பீடு வழங்குவது மட்டுமல்லாமல், இது உங்கள் பயணத்தின் போது ஏற்படும் மருத்துவ மற்றும் பயண தொடர்பான அவசர கால மருத்துவ செலவுகளுக்கு காப்பீடு வழங்குகிறது. இது பலரும் கண்டு கொள்ளாத நிலையில் ஐஆர்சிடிசியில் விமான டிக்கெட் பதிவு செய்யும் விமானப் பயணிகளுக்கு ரூ. 50 லட்சம் வரை இலவச பயண காப்பீடு வழங்கும் திட்டத்தை ரயில்வே துறையின் ஐஆர்சிடிசி (IRCTC) எனப்படும் இந்திய ரயில்வே காட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் இன்று அறிவித்தது.

இந்த திட்டத்தின் மூலமாக ஐஆர்சிடிசி இணையதளம் மூலமாக உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான பயணத்திற்கு பதிவு செய்யும் பயணிகள் இலவச பயண காப்பீடு பெறலாம். விமானத்தின் எந்த வகுப்பில் பயணம் செய்தாலும் இந்த காப்பீட்டைப் பெற முடியும். விமான பயணத்தின் போது ஏற்படும் உயிரிழப்பு அல்லது உடல் ரீதியான பாதிப்புகளுக்கு இந்த இலவச பயண காப்பீடு மூலமாக பொருளாதார பாதுகாப்பு கிடைக்கும்.

சில திட்டங்கள் நம் பயணத்தின் தொடர்பான ஆலோசனை, மருத்துவ அவசர காலத்தின் போது உங்கள் வீடு அல்லது மருத்துவமனைக்கு கொண்டுசெல்லுதல், பணம், விலையுயர்ந்த பொருட்கள் அல்லது பயண ஆவணங்கள் இழப்பு அல்லது திருட்டில் போகும் போது, அவசர பணஉதவி அல்லது உதவி முதலிய சேவைகளை வழங்குகின்றன என்றாலும் ஒரு வழி பயணம் மற்றும் தொடர் பயணங்களுக்காக பதிவு செய்வோரும் மேற்படி காப்பீட்டை பெறலாம். இந்த இலவச பயண காப்பீட்டுக்கான பிரிமியம் தொகையை ஐஆர்சிடிசி செலுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரதி ஏ.எக்ஸ்.ஏ ஜெனரல் இன்சுரன்ஸ் (Bharti AXA General Insurance) நிறுவனம் இந்த இலவச பயண காப்பீட்டு திட்டத்தில் ஐஆர்சிடிசியின் பங்குதாரராக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.