மீண்டும் வெள்ளித்திரையில் மக்கள் திலகம் எம்.ஜி. ஆர்!

மீண்டும் வெள்ளித்திரையில் மக்கள் திலகம் எம்.ஜி. ஆர்!

இந்திய திரையுலகின் மக்கள் திலகம் எம். ஜி. ஆர், விரைவில் உலகெங்கும் வெள்ளித்திரையில் புதிய பரிணாமத்தில் “என் ஃபேஸ்” எனும் முற்றிலும் புதிய, அதியற்புத தொழிற்நுட்பத்தின் மூலம் வலம் வர இருக்கிறார்.

மலேசியாவின் சர்வதேச ஊடக தொழிற்நுட்ப நிறுவனம் ஆரஞ்ச் கவுண்டி, இத்தொழிற்நுட்பத்தை கொண்டு கடந்த கால கதாபாத்திரங்களை நிழற்பட யதார்த்தத்தின் மூலம் உயிரோட்டமாக திரையில் உருவாக்கும் ஒரு மென்பொருளை வடிவமைத்துள்ளது. அந்த ஆரஞ்ச் கவுண்டி நிறுவனமும், முன்னணி சர்வதேச ஹாலிவூட் VFX தொழிற்நுட்ப வல்லுனர்களும் இணைந்து, இந்திய திரையுலகின் மக்கள் திலகம் எம். ஜி. ஆர் என்றழைக்கபடும் ராமச்சந்திரன் அவர்களை, ஒரு சர்வதேச திரைப்படத்தின் மூலமாக மக்கள் முன் மீண்டும் உயிரோட்டமாக காட்சிப்படுத்த இருக்கிறார்கள். இந்த சர்வதேச திரைப்படத்தை புகழ்பெற்ற இயக்குனர் பி. Pவாசு இயக்குகிறார். கதை களமும், கதாபாத்திரங்களும் முறையே மலேசியாவிலும், இந்தியாவிலும் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்திய, பிராந்திய மற்றும் சர்வதேச நடிக-நடிகையர்கள் மற்றும் கலைஞர்கள் இதில் பங்குபெற இருக்கிறார்கள்.

ஆரஞ்ச் கவுண்டி மலேசியா “என் ஃபேஸ்” என்ற தனது புதிய, மிகவும் மேம்பட்ட தொழில் நுட்பத்தை, உலக புகழ்பெற்ற காட்சி விளைவு வடிவமைப்பு வல்லுனர்களின் பங்களிப்போடு நடைமுறைபடுத்துவதில், ஒரு சர்வதேச முன்னணி தொழிற்நுட்ப வல்லுனர்களின் குழுமமாக திகழ்கிறது. சர்வதேச தயாரிப்பான இத்திரைப்படம் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், சீனா, தாய்லாந்து, மற்றும் அமெரிக்காவிலும் படமாக்கப்பட இருக்கிறது.

இத்திரைப்படம் முழுவதுமே முப்பரிமாண ஸ்டீரியோஸ்கோபிக் முறையில் தயாரிக்கப் படுவதாலும், ஒவ்வொரு காட்சியுமே முப்பரிமாண முறையில் காட்சிப்படுத்தப்பட இருப்பதாலும், இது மக்களுக்கு ஒரு பெரிய விருந்தாக அமையும். இருப்பினும், இத்தகைய மேம்பட்ட கலைப்ப டைப்புகளை உருவாக்குவது என்பது பல்வேறு சவால்களுக்கு பிறகே கைகூடியது எனலாம். இரண்டு வருடங்களுக்கும் மேலாக முன் உற்பத்தி வேலைகளில் தன் முனைப்புடன் இந்நிறுவனம் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, இப்புகழ்பெற்ற நடிகரின் ஒவ்வொரு அசைவையும், முக பாவத்தையும், நடத்தையையும் மிகவும் கவனமாகவும் நுணுக்கமாகவும் செயற்கை அறிவாற்றல் தொழிற்நுட்பங்கள் மூலம் பதிவு செய்துள்ளது.

இது குறித்து ஆரஞ்ச் கவுண்டி தலைமை செயல் அதிகாரி டத்தோ மார்கழி பழனி கூறும் போது, “இயக்குனர் வாசுவின் தந்தை எம்.ஜி.ஆரின் ஒப்பனை கலைஞராக பணியாற்றிய காரணத்தால், எம்.ஜி.ஆரின் மிக நுண்மையான அசைவுகள், நடத்தைகள், முகபாவங்கள் அனைத்தையும் மிக அருகிலேயே இருந்து, கூர்ந்து கவனிக்கும் வாய்ப்பும், அவரோடு நெருங்கி பழகும் வாய்ப்பும், இயக்குனர் வாசுவிற்கு இயல்பாகவே அமைந்தது. அதனாலேயே இத்திரைப்படத்தை இயக்கு வதற்கு சரியான தேர்வாக அவரை கருதுகிறோம். மேலும் அவரது படைப்புகள் வாசு ஒரு திறமையான இயக்குனர் என்பது பறைசாற்றும் விதத்திலேயே அமைந்துள்ளதால், இத் திரை படத்திற்க்கும் தேவையான தனிச்சிறப்புடைய பங்களிப்பை அவர் தருவார்”.

ஆரஞ்ச் கவுண்டியின் தலைமை தொழிற்நுட்ப அதிகாரி விமலநாதன், “இந்தியாவில் எம்.ஜி.ஆர் இன்றும் கடவுளின் அவதாரமாகவே தமிழ் மக்களால் பார்க்கப்படுகிறார். மலேசியாவிலும் ஒவ்வொரு மாநிலத்திலும் அவருக்கு ரசிகர் மன்றங்கள் உள்ளன. அன்னாரது சமாதிக்கு வருகை தரும் எண்ணிலடங்கா மக்களின் மனங்களில் இன்றளவும் அவர் வாழ்கிறார் என்பதே அவரது அபிமானத்திற்கு ஒரு மிகப் பெரிய சாட்சி. அவர் மறைந்து இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு, அந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில் மீண்டும் வெள்ளித்திரையில் அவர் உயிர்பெறும் காட்சிகள், மக்கள் மனதில் ஒரு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தும். வணிக நோக்கிலும் ஒரு புதிய மற்றும் ஆக்கப்பூர்வமான மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாகவே அமைகிறது. எம். ஜி. ஆர் குறித்து உருவாக்கியுள்ள டிஜிட்டல் உருவகங்களைக் கொண்டே, வருங்காலத்தில் திரைப்படங்களோ அல்லது விளம்பர படங்களோ உருவாக்க முடியும் என்பதால், இந்த முயற்சி முன்னுரிமை பெறுகிறது”.

“உலகெங்கிலும் பரவியுள்ள தமிழ் மக்களிடையே எம். ஜி. ஆர் ஒரு உயர்ந்த அடையாளமாகவே திகழ்கிறார். இத்திரைப்பட வெளியீட்டின் போது, பல்வேறு விற்பனை பொருட்கள் அவரை நினைவு கூறும் வகையில் வெளியிடப்பட்ட உள்ளது. இது மறக்கவியலாத ஒரு மாமனிதரின் திருவிழா வாகவே கொண்டாடப்பட இருக்கிறது” என்கிறார் ஆரஞ்ச் கவுண்டியின் ஹர்நரைன் கில்.

இத்திரைப்படத்தின் ஆக்கபூர்வ தயாரிப்பாளரில் ஒருவராகவும், சர்வதேச ஸ்கிரிப்ட் ஆலோசக ராகவும் பங்காற்றும் எம். வெங்கடேசன், “இந்த திட்டம் ஒரு தனித்துவமான சர்வதேச தயாரிப்பு மற்றும் சர்வதேச சந்தைப்படுத்துதல் முறைகளை உள்ளடக்கி இருப்பதால், இம்முயற்சி உலக அளவில் ஆசிய திரைப்படங்களுக்கான ஒரு புதிய பாதையை வடிவமைத்து தரும் எனலாம்” .மேலும் நேர்முக கதாபாத்திரங்களை திரைப்படங்கள், கண்காட்சிகள், மற்றும் தேர்தல் பிரச்சாரங்களுக்காக வடிவமைக்கும் நோக்கில் பல்வேறு நிறுவனங்களுடன் இந்த கூட்டமைப்பு தீவிரமான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!