காப்பீட்டு நிறுவனங்களில் கோரப்படாத தொகை 15,167கோடி ரூபாய் ! – AanthaiReporter.Com

காப்பீட்டு நிறுவனங்களில் கோரப்படாத தொகை 15,167கோடி ரூபாய் !

காப்பீடு செய்தவர்களின் பணத்தை அவர்களிடமோ அவர்களின் குடும்பத்தினரிடமோ சேர்ப்பிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்துக் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையம் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ள நிலையில் 23 காப்பீட்டு நிறுவனங்களில் காப்பீடு எடுத்து விட்டுக் கோரப்படாத பணம் 15ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் உள்ளதாகக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையம் தெரிவித்துள்ளது..

இதுகுறித்து ஐ.ஆர்.டி.ஏ.ஐ. வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘23 காப்பீட்டு நிறுவனங்களில் காப்பீடாக செலுத்திய ரூ.15,167 கோடியை யாரும் உரிமை கோர இதுவரையில் வரவில்லை. இந்தப் பணத்துக்கு உரியவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உடனடியாக பணத்தை விநியோகம் செய்யுமாறு கூறியுள்ளோம். பாலிசிதாரர்களின் பணத்துக்கு எல்லா காப்பீடு நிறுவனங்களும் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும். உரிய நேரத்தில் பாலிசிதாரர்களுக்கு அவர்களுக்குரிய தொகையை திருப்பிச் செலுத்த வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு மே 31ஆம் தேதி வரையிலான கணக்குப்படி யாரும் உரிமம் கோராத ரூ.15,167 காப்பீட்டுத் தொகையில் ரூ.10,509 கோடி லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன் நிறுவனத்திடம் உள்ளது. எஞ்சியுள்ள ரூ.4,657.45 கோடி தனியார் காப்பீட்டு நிறுவனங்களிடம் உள்ளது. அதில் 807.4 கோடி ஐசிஐசிஐ நிறுவனத்திடமும், ரிலையன்ஸ் நிப்பான் நிறுவனத்திடம் ரூ.696.12 கோடியும், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன் நிறுவனத்திடம் ரூ.678.59 கோடியும், ஹெச்டிஎஃப்சி ஸ்டேண்டர்டு லைஃப் இன்சூரன்ஸ் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன் நிறுவனத்திடம் ரூ.659.3 கோடியும் உள்ளது.