ரிச் மேன் – போர்ப்ஸ் பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்தார் முகேஷ் அம்பானி! – AanthaiReporter.Com

ரிச் மேன் – போர்ப்ஸ் பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்தார் முகேஷ் அம்பானி!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி, 10வது ஆண்டாக இந்தியாவின் பெரும்  பணக்காரர்களுக்கான போர்ப்ஸ் பட்டியலில் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளார்.அவரது சொத்துக்கள் மதிப்பு 38 பில்லியன் டாலர்கள் (சுமார் 2.5 லட்சம் கோடி) ஆகும். பொருளாதார நிலவரம் மந்தமாக இருக்கும் போதும் 100 பணக்காரர்களின் சொத்து மதிப்பு 26% அதிகரித்துள்ளது.

முகேஷ் அம்பானிக்கு அடுத்த இடத்தில் விப்ரோ நிறுவனத்தின் அஸிம் பிரேம்ஜி 19 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் 2-வதாக உள்ளார். கடந்த ஆண்டைக் காட்டிலும் இவர் 2 இடங்கள் முன்னேறியுள்ளார். சன் பார்மா நிறுவனத்தின் திலிப் சாங்வி முன்னதாக இருந்த 2-ம் இடத்திலிருந்து 9-ம் இடத்துக்கு (12.1 பில்லியன் டாலர்கள்) இறங்கியுள்ளார்.

போர்ப்ஸ் இது பற்றி கூறும்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார பரிசோதனை முயற்சிகள் இந்திய செல்வந்தர்களை பாதிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது. முகேஷ் அம்பானியின் கடந்த ஆண்டு சொத்தில் மேலும் 15.3 பில்லியன் டாலர்கள் (67%) கூடியுள்ளது. இதன் மூலம் ஆசியாவின் 5 பெரும்பணக்காரர்களில் ஒருவராக முகேஷ் அம்பானி திகழ்வதோடு, 10-வது ஆண்டாக போர்ப்ஸ் பட்டியலில் முதலிடம் வகித்து வருகிறார்.

முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி 45-வது இடத்தில் (3.15 பில்லியன் டாலர்கள்) உள்ளார்.

யோகா குரு பாபா ராம்தேவுக்கு நெருக்கமான பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் ஆச்சார்யா பாலகிருஷ்ணா 48-வது இடத்திலிருந்து 19-வது இடத்துக்குத் தாவியுள்ளார். இவரது சொத்து மதிப்பு 6.55 பில்லியன் டாலர்கள் (ரூ.43,000 கோடி)

“இந்தியாவின் பொருளாதார சிக்கல்களுக்கிடையேயும் 2017 போர்ப்ஸ் பட்டியலில் இந்திய செல்வந்தர்களின் சொத்துக்களில் 26% முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது (31 லட்சம் கோடிக்கும் அதிகம்).

இந்துஜா சகோதரர்கள் 18.4 பில்லியன் டாலர்களுடன் 3-ம் இடத்தில் உள்ளனர் .லஷ்மி மிட்டல் (16.5பில்.டாலர்கள்), பலோஞ்ஜி மிஸ்ட்ரி (16 பில்லியன் டாலர்கள்) ஆகியோர் முறையே 4 மற்றும் 5-ம் இடங்களில் உள்ளனர்.

பட்டியலுக்குள் நுழைந்துள்ள 5 புதுமுக பணக்காரர்களில் ஈ-கவர்னன்ஸ் சர்வீசஸ் நிறுவனமான வக்ரங்கீயை நடத்தி வரும் தினேஷ் நந்த்வனா (88வது இடம், 1.72 பில்லியன் டாலர்கள்), மொபைல் வாலட் பேடிஎம் நிறுவனத்தின் விஜய் சேகர் சர்மா (99வது இடம், 1.47 பில்லியன் டாலர்கள்) மற்றும் ரானா கபூர் (100-ம் இடம், 1.46 பில்லியன் டாலர்கள்) ஆகியோர் உள்ளனர்.

போர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற அடிப்படை சொத்து 1.46 பில்லியன் டாலர்கள் இருக்க வேண்டும், இது 1.25 பில்லியன் டாலர்களிலிருந்து அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.