பத்திரிகைச் சுதந்திரம்: பின்னோக்கி சென்ற இந்தியா! – AanthaiReporter.Com

பத்திரிகைச் சுதந்திரம்: பின்னோக்கி சென்ற இந்தியா!

ஒவ்வொரு நாட்டிலும் ஜனநாயகம் வழங்கியுள்ள மிகப் பெரிய உரிமைகளில் ஒன்று பத்திரிகை சுதந்திரம். அந்த சுதந்திரம் பாதுகாக்கப்படும்போதுதான் ஜனநாயகத்தின் தூண்கள் உறுதியாக இருக்கும் என்று ஏட்டளவில் பலரும் சொல்லி வரும் நிலையில் பத்திரிகைகளுக்குச் சுதந்திரம் அளிப்பதில் இந்தியா 138ஆம் இடத்தில் இருப்பதாக சர்வதேச ஆய்வறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்தியா இப்பட்டியலில் 136-வது இடம் பிடித்திருந்தது குறிப்பிடத் தக்கது.

சர்வதேச அளவில் உள்ள 180 நாடுகளில் பத்திரிகைச் சுதந்திரம் பற்றிய ஆய்வறிக்கையை ரிப்போர்ட்டர்ஸ் வித்அவுட் பார்டர்ஸ் (Freedom without borders) என்ற தனியார் பத்திரிகை யாளர்கள் அமைப்பு கடந்த புதன் கிழமை (ஏப்ரல் 25) வெளியிட்டுள்ளது. அதில் பத்திரிகை சுதந்திரத்தில் இந்தியா 180 நாடுகளில் 138ஆவது இடத்தை பிடித்துள்ளது. இதற்கு காரணம் இந்தியாவில் பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் எழுதுபவர்கள், தங்கள் கருத்துகளை சுதந்திரமாக வெளியிட அச்சப்பட வேண்டிய நிலை இருக்கிறது. இந்தியாவில் உள்ள மத அமைப்புகளால் பத்திரிகையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் மிக எளிதாக தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். இந்தியாவில் காஷ்மீர் மாநிலத்தில் பத்திரிக்கையாளர்கள் யாரையும் எளிதாக அணுக முடிவதில்லை. பத்திரிகையாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை சீர்படுத்த மத்திய அரசு முன்வருவதில்லை. பத்திரிகையாளர்களுக்கு எதிராக வரும் கொலை மிரட்டல்களை கூட கண்டு கொள்வதில்லை. கடந்த ஆண்டு கௌரி லங்கேஷ் உள்ளிட்ட பல பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல இடங்களில் பத்திரிகையாளர்கள் தாக்கப்படுகின்றனர்.

அதாவது ஒவ்வொரு மனிதனுக்கும் சுயமான கருத்தைக்கொள்ளவும், வெளிப்படுத்தவும் உரிமை உள்ளது. எந்தவித இடையூறும் இல்லாமல் ஒரு கருத்தைக் கொண்டிருக்கவும், தகவல்களைக் கோரவும், பெறவும் மட்டுமல்லாமல், எந்தவித எல்லைக்கும் உட்படாமல் தகவல்களையும் கருத்துகளையும் எந்தவோர் ஊடகத்தின் வாயிலாகப் பெறுவதும் இந்த உரிமைக்கு உட்பட்டதாகும். ஆனால், அவ்வாறு உண்மையை எடுத்துரைக்கும் பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதனால், இந்தியாவில் உள்ள மத அமைப்புகளால் பத்திரிகையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.

கடந்த ஆண்டு கௌரி லங்கேஷ் உட்பட பல பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான கௌரி லங்கேஷ் (55), 2017ஆம் ஆண்டு செப்டம்பர், 5ஆம் தேதி பெங்களூருவில் உள்ள அவரது வீட்டு வாசலில் சுட்டுக் கொல்லப்பட்டார். வகுப்புவாதத்துக்கு எதிராகவும் மதவாதத்துக்கு எதிராகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் அவர் தொடர்ந்து போராடி வந்தார். மிக தைரியமாக பேசக்கூடியவர், எழுதக்கூடியவர். யாருக்கும் அஞ்சாதவர். இதனால் அவருக்கு எதிரிகள் அதிகரித்தனர். அந்தக் காரணத்தினாலேயே அவர் கொல்லப்பட்டுள்ளதாக அவரது நண்பர்களும், அவரைச் சார்ந்தவர்களும் கருதுகின்றனர். அதைத் தொடர்ந்து, திரிபுரா ’தீன் ராத்’ தொலைக் காட்சியின் இளம் பத்திரிகையாளர் சாந்தனு பவுணிக், படுகொலை செய்யப்பட்டார். இவ்வாறு பத்திரிகையாளார்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அதே சமயம் உலகம் முழுவதும் ஒவ்வொரு 4.5 நாள்களுக்கும் ஒரு பத்திரிகையாளர் கொல்லப்படுகிறார். கடந்த 2014-2015 ஆண்டு மட்டும் உலகம் முழுவதும் 194 ஆண் பத்திரிகையாளர்களும் 18 பெண் பத்திரிகையாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 2016ஆம் ஆண்டு, இந்தியாவில் ஐந்து பேர் உட்பட உலகம் முழுவதும் 93 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 2015 வரை 58 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனால், கடந்த 2015ஆம் ஆண்டு, பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா ஆறாவது இடத்தைப் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இப்பட்டியலில் நார்வே முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதுவும் இரண்டாவது முறையாக முதலிடத்தை பிடித்துள்ளது. பாகிஸ்தான் இந்த பட்டியலில் 139வது இடத்தைப் பெற்றுள்ளது. வடகொரியா, எரித்திரியா, துர்க்மெனிஸ்தான், சிரியா மற்றும் சீனா ஆகியவை கடைசி இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.