ஒரு நபருக்கு ஆறு நெருங்கிய நண்பர்கள் – இந்தியர்களின் நட்பு குறித்த ஆய்வு! – AanthaiReporter.Com

ஒரு நபருக்கு ஆறு நெருங்கிய நண்பர்கள் – இந்தியர்களின் நட்பு குறித்த ஆய்வு!

நமது இந்திய திருநாடு இயற்கை வளத்திலும் , அறிவாற்றலிலும் பேர் போன நாடு. மனித வளத்திலும் குறைவில்லாத நாடு . அதோடு இயற்கையின் எழிலார்ந்த வளமும் நமக்கு வரமாக வைத்திருக்கிறது என்பதெல்லாம் முன்னரே தெரிந்த தகவல் என்ற நிலையில் இந்தியர்கள் ஒவ்வொருவரும் சராசரியாக ஆறு நெருங்கிய நண்பர்களைக் கொண்டிருப்பதாக சர்வதேச ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

பிரபல சமூக வலைதளமான ஸ்னாப்சாட் சர்வதேச அளவில் மக்களின் நட்பு தொடர்பான ஆய்வு மேற்கொண்டு அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் உள்ள மக்கள் சராசரியாக ஆறு நெருங்கிய நண்பர்களைக் கொண்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது. அதேநேரம், சர்வதேச சராசரி 4.3 சதவிகிதமாக மட்டுமே இருக்கிறது.

உலகிலேயே அதிகபட்சமாக சவுதி அரேபிய மக்கள்தான் அதிக நண்பர்களை வைத்திருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது. அங்கு நண்பர்களின் சராசரி எண்ணிக்கை 6.6 ஆக உள்ளது. மிகவும் குறைவான நண்பர்களைக் கொண்ட நாடாக இங்கிலாந்து (2.6) உள்ளது. இந்தியர்களின் சராசரி நண்பர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது மட்டுமல்லாமல், அவர்கள் இன்னும் அதிகமான நண்பர்களுடன் நட்பு பாராட்ட விரும்புவதாகவும் இந்த ஆய்வில் தெரிவித்துள்ளனர். ஆய்வில் பங்கேற்ற 45 சதவிகித இந்தியர்கள் இதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வு குறித்து லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் மானுடவியல் பேராசிரியரான அமித் தேசாய், டி.என்.என். செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், ”மேற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா ஆகிய பகுதிகளில் நண்பர்களைத் தேர்வு செய்வதென்பது, ஒரே குணநலன் கொண்ட நபர்களையே நண்பர்களாகத் தேர்ந்தெடுக்க விரும்புகின்றனர். ஆனால், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் வித்தியாசமான குணநலன் கொண்ட நபர்களையே நண்பர்களாக்கிக் கொள்கின்றனர்” என்கிறார்.

ஆன்லைன் தளங்களிலோ அல்லது நேரடியாகவோ நண்பர்களுடன் உரையாடுவது அல்லது பகிர்ந்துகொள்வது என்பதில் இந்தியர்கள் மிகவும் உணர்வுப்பூர்வமாக இருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது. மேலும், இந்த ஆய்வில் பங்கேற்ற மூன்றில் இரு இந்தியர் தனது மிகவும் நெருக்கமான நண்பர் எதிர் பாலினத்தவர் என்று தெரிவித்துள்ளனர். இது அமெரிக்கா தவிர்த்து உலகின் வேறெந்த நாட்டை விடவும் அதிகமாகும். தங்களது நண்பர்களிடத்தில் நேர்மையை மட்டுமே மிகவும் எதிர்பார்ப்பதாக 63 சதவிகித இந்தியர்கள் இந்த ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

தி ஃபிரண்ட்ஷிப் ரிபோர்ட் என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வானது இந்தியா, ஆஸ்திரேலியா, ஃபிரான்ஸ், ஜெர்மனி, மலேசியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் 13 முதல் 75 வயதுடைய 10,000 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.