கிராம வங்கிகள் இணைப்பும் அரங்கேறப் போகுதுங்கோ! – AanthaiReporter.Com

கிராம வங்கிகள் இணைப்பும் அரங்கேறப் போகுதுங்கோ!

ஒரு நாட்டின் பொருளாதாரத்தைப் பிரதிபலிக்கக் கூடியவைதான் வங்கிகள் என்பது மிகையல்ல. இந்த வங்கித் துறை சிறப்பாக செயல்படும் ஒரு நாடு நிச்சயம் பொருளதார அளவில் மேம்பட்டுக் கொண்டே இருக்கும். ஆனால்,நம் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே வங்கிகளுக்குப் போதாத காலம் என்றுதான் சொல்ல வேண்டும். வாராக் கடன் அதிகரித்து, வைப்பு நிதி, கடன் வளர்ச்சி குறைந்து, இந்திய வங்கித் துறையே சீரமைப்பை எதிர்நோக்கி நிற்கிறது. அதையொட்டியே சில பல வங்கிகள் இணைப்பு நடவடிக்கை நடந்த வண்ணமுள்ளது. அண்மையில் பேங்க் ஆப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகியவற்றை இணைக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக மண்டல கிராம வங்கிகளையும் ஒருங்கிணைத்து எண்ணிக்கையை 36 ஆகக் குறைக்க முடிவு செய்துள்ளது.

மண்டல கிராம வங்கிகள் ஆர்ஆர்பி சட்டம் 1976-ன் கீழ் சிறுவிவசாயிகள், விவசாயக் கூலிகள், கிராமப்புற கலைஞர்களுக்கு கடன் அளிக்க உருவாக்கப்பட்டது. கடந்த 2015-ம் ஆண்டு திருத்தப்பட்ட சட்டத்தில், வங்கிகள் மூலதனத்தை பெருக்கிக் கொள்ள அனுமதிக்கப்பட்டது. தற்போது மண்டல கிராமவங்கிகளில் 50 சதவீதத்தை மத்திய அரசும், 35 சதவீதத்தை ஸ்பான்ஸர் வங்கிகளும், 15 சதவீதம் மாநில அரசும் வைத்துள்ளன.

இதனிடையே தற்போது 56 மண்டல கிராமவங்கிகள் இருக்கும்நிலையில், இது 36 ஆகக் குறைக்கப்பட உள்ளது. இந்த வங்கிகள் இணைப்பால் கடன் வசதி அதிகரிக்கும், வாராக்கடன் குறையும், சேவைகள் சிறப்பாக செய்ய முடியும் என்று மத்திய அரசு தெரிவிக்கிறது. ஆனால், எந்த அளவுக்கு வங்கிச்சேவை சிறப்பாகக் கிடைக்கும் இணைத்த பின்புதான் தெரியும்.

இது பற்றி நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், பல்வேறு மாநிலஅரசுகளின் உதவியுடன் மண்டல கிராம வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. வங்கிகளை இணைப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகளுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. அரசின் நிதியுதவியில் செயல்பட்டு வரும் வங்கிகள், வங்கிகளை இணைப்பதற்கான செயல்திட்டத்தை மாநிலத்துக்குள்ளே வகுக்கத் தொடங்கிவிட்டன எனத் தெரிவித்தார்.

தொடரும் இந்த இணைப்பின் மூலம் வங்கிகளின் கடன் கொடுக்கும் தகுதி அதிகரிக்கக் கூடும், மக்களுக்குச் சேவை விரைவாக அளிக்க முடியும், நிர்வாகம் மேம்படும். மேலும், தொழில்நுட்பங் களை அதிகமாகப் பயன்படுத்தி, செலவுகளைக் குறைக்கவும், மூலதனத்தை அதிகப்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது. இந்த வங்கிகள் இணைப்புக்குப் பின்பும் அரசிடம்தான் அனைத்து அதிகாரங் களும் இருக்கும். கடந்த 2005-ம் ஆண்டு படிப்படியாக மண்டல கிராம வங்கிகள் இணைக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2005-ம் ஆண்டு 196 வங்கிகள் இருந்த நிலையில் 2006-ல் இது 136ஆகக் குறைக்கப் பட்டது. 2012-ம் ஆண்டுக்குள் 82ஆகக் குறைக்கப்பட்டு தற்போது 56 வங்கிகள் 36ஆகக் குறைக்கப்பட ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.