சச்சின் டெண்டுல்கருக்கு ஹால் ஆஃப் பேம் விருது -ஐசிசிஐ கவுரவம்

சச்சின் டெண்டுல்கருக்கு  ஹால் ஆஃப் பேம் விருது -ஐசிசிஐ கவுரவம்

கிரிக்கெட் உலகின் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த ஒரே வீரர் என்ற பெருமையுடன்,கிரிக்கெட் வரலாற்றில் 100 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையுடன், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் சேர்த்தவர் என்பது போன்ற சாதனைகள் படைத்த இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கருக்கு மிக உயரிய கவுரவமாக கருதப்படும் ஹால் ஆஃப் பேம் விருதினை ஐசிசி வழங்கியுள்ளது. இதன் மூலம் ஐசிசி.யின் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இணைந்த இந்தியாவின் 6வது இந்திய வீரர் என்ற பெருமையை சச்சின் பெற்றுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும் மற்றும் அணியின் கேப்டனாகவும் இருந்தவர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர். கிரிக்கெட்டில் எல்லா காலங்களிலும் விளையாடிய வீரர்களில், சச்சின் டெண்டுல்கர் மிகச்சிறந்த வீரராக திகழ்ந்தார். இதனால். இவர் இன்றளவும் கிரிக்கெட் ஜாம்பவான் என அன்புடன் அழைக்கப்படுகிறார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் முதன்முதலாக 200 ரன்கள் எடுத்த சச்சின், 6 முறை உலக கோப்பை போட்டிகளில் இந்திய அணி சார்பில் கலந்துக்கொண்டு உள்ளார். கடந்த 2011ம் ஆண்டு நடந்த உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்தவர்களுள் சச்சினும் ஒருவராக்கும்.

அதனால்தான் இந்தியா முழுவதும், இன்றளவும் இவருக்கு இருக்கும் ரசிகர்கள் ஏராளம். எத்தனை வீரர்கள் வந்தாலும் சச்சின் டெண்டுல்கரை மறக்காத கிரிக்கெட் ரசிகர்கள் எண்ணிலடங்காது. இந்நிலையில் லண்டனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல் கருக்கு மிக உயரிய விருதான ‘Hall Of Fame’ எனும் விருதினை வழங்கி ஐசிசி கவுரவித்துள்ளது.

சச்சின் மட்டுமல்லாமல், தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டொனால்டுக்கும் ஹால் ஆஃப் பேம் கவுரவம் வழங்கப்பட்டது. இந்த கவுரவம் இந்தியா சார்பில் ஏற்கெனவே பிஷன் சிங் பேடி(2009), சுனில் கவாஸ்கர்(2009),கபில் தேவ்(2009),அனில் கும்ப்ளே(2015), ராகுல் டிராவிட்(2018) ஆகியோர் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் கூறுகையில், ”பல தலைமுறைகளாக கிரிக்கெட் விளையாட்டில் சாதித்தவர்களுக்கு ஐசிசி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அவர்கள் அனைவரும் கிரிக்கெட் விளையாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்கள். மேலும் இந்த விளையாட்டை பிரபலமடையச் செய்தவர்கள். இதில் எனது பங்களிப்பும் இருப்பது மகிழ்ச்சிக்கு உரியதாக உள்ளது. இந்தப் பட்டியலில் இடம்பெறுவதன் மூலம் நான் கௌரவிக்கப்பட்டுள்ளேன். எனது இந்த நீண்ட சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். குறிப்பாக எனது பெற்றோர்கள், சகோதரர் அஜித், மனைவி அஞ்சலி ஆகியோர் எனக்கு பக்கபலமாக இருந்துள்ளனர். அதிலும் ரமாகாந்த் ஆச்ரேக்கர் போன்ற ஒரு குருவைப் பெற்ற நான் அதிர்ஷ்டசாலி தான். கிரிக்கெட்டை நான் ரசித்து விளையாட உறுதுணையாக இருந்த மும்பை கிரிக்கெட், பிசிசிஐ, சக வீரர்கள் மற்றும் என்னை வழிநடத்திய கேப்டன்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. எனது கிரிக்கெட்டைப் பாரட்டிய ஐசிசி-க்கும் நன்றி. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என 3 வகை கிரிக்கெட்டும் மேலும் வளரும்”என்று தெரிவித்துள்ளார்.

Related Posts

error: Content is protected !!