ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவராக சென்னையைச் சேர்ந்த ஸ்ருதி பழனியப்பன் தேர்வு!

ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவராக சென்னையைச் சேர்ந்த ஸ்ருதி பழனியப்பன் தேர்வு!

சர்வதேச அளவில் புகழ் பெற்ற அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் இளங்கலை மாணவர் அமைப்பின் தலைவராக இந்திய வம்சாவளி அதுவும் சென்னை பேரண்ட்-  மாணவி ஸ்ருதி பழனியப்பன் (20) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஹார்வர்டு யுனிவர்சிட்டி பற்றி தெரியாத தமிழர்களே கிடையாது. இந்த அமெரிக்க பல்கலைக் கழகத்தில் நம் தமிழ் இருக்கைகள் அமைக்க சென்னையில் இருந்து நன்கொடைகள் அளித்த தமிழர்கள் ஏராளம். ஆட்டோவை விற்று பணம் அளித்த முதியவர் தொடங்கி, பூ விற்று தம்மால் முடிந்த பணத்தை அளித்த வியாபாரிகளும் எக்கச்சக்கம்.

இந்நிலையில், இந்த ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடைப்பெற்ற மாணவர் சங்க தேர்தலில் சென்னையைச் சேர்ந்த தமிழ் பெண் ஸ்ருதி பழனியப்பன் 41.5 சதவிகித ஓட்டுகள் பெற்று வெற்றியடைந்துள்ளார். ஹார்வர்டு பல்கலைக்கழக இளங்கலை மாணவர்களின் சக்திவாய்ந்த அமைப்பாக இளங்கலை கவுன்சில் உள்ளது. அவருடன் சேர்ந்து போட்டியிட்ட ஜூலியா ஹூசா (20) என்பவரும் வெற்றி பெற்றனர்.

ஹார்வர்டு பல்கலைக் கழகத்தை சொந்த வீடு போல் மாற்றுவோம் என்று கூறி ஸ்ருதி வாக்கு சேகரித்தார். இதற்கு மாணவர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்தது. இதனாலேயே இந்தத்  தேர்தலில் ஸ்ருதியும் ஜூலியா வும் 41.5 சதவீத வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்தனர். இவர்களை அடுத்து இரண்டாமிடம் பிடித்த ஜோடி 26.6 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. தற்போது இளங்கலை கவுன்சில் உறுப் பினர்களாக உள்ள ஸ்ருதியும் ஜூலியாவும் விரைவில் முறையே தலைவர் மற்றும் துணைத் தலைவராக பொறுப்பேற்க உள்ளனர். சென்னையைச் சேர்ந்த ஸ்ருதியின் பெற்றோர் 1992-ம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறியவர்கள். இந்திய வம்சாவளி யைச் சேர்ந்த ஸ்ருதி மாணவர் அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது  தமிழர்கள் அனைவரையும் பூரிக்க வைத்துள்ளது.

வெற்றிக்கு பிறகு மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய ஸ்ருதி, “மாணவர்களின் கல்வியில் அக்கறைக் காட்டுவது, மனதளவில் பிரச்னைகளை எதிர்கொள்ள மாணவர்களைத் தயார் செய்வது பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் ரீதியான தொல்லைகளைத் தடுப்பது, என மாணவர்களுக் காக மனதார பணியாற்றுவேன். சமூகப் பிரச்னைகளுக்கு கண்டிப்பாக முக்கியத்துவம் கொடுப்பேன். என்னை நம்பி தேர்வு செய்த அனைவரும் நன்றி” என்று பேசினார்.

.

Related Posts

error: Content is protected !!