இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் காடுகளை அழிக்கும் போக்கு அதிகரிப்பு!- இஸ்ரோ எச்சரிக்கை!

இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் காடுகளை அழிக்கும் போக்கு அதிகரிப்பு!- இஸ்ரோ எச்சரிக்கை!

நவீன தொழில்நுட்ப வாழ்க்கை வாழ மனிதன் தொடங்கியது முதல் மக்கள் தொகைப் பெருக்கம் வளர்ச்சியடையத் தொடங்கியது. அதாவது, நவீன தொழில்நுட்ப வளர்ச்சி தொடங்கிய 19ம் நூற்றாண்டில்தான் மக்கள் தொகை அதிகரித்தது. 20ம் நூற்றாண்டின் இறுதியில் உலக மக்கள் தொகையில் அளவு சுமார் 600 கோடி. அதாவது ஒவ்வொரு ஆண்டும் 98 மில்லியன் மக்கள் கூடுதலாக சேருகின்றனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த மக்கள் தொகையில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில்தான் பாதி அளவு உள்ளனர். இப்படி வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் உள்ள மக்கள்தான் காடுகள், நிலம், கடல், திறந்தவெளி போன்றவற்றை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். உலகில் பயன்படுத்தப்படும் பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயுவை இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகள்தான் பாதி அளவு பயன்படுத்துகின்றனர். ஒருபுறம் வளர்ந்த நாடுகளும் மறுபுறம் வளரும் நாடுகளும் இயற்கை வளங்களை போட்டி போட்டுக்கொண்டு அழிக்கின்றன. இதற்கெல்லாம் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணம் மக்கள் தொகை பெருக்கம்தான். அதாவது மக்கள் தொகைப் பெருக்கம் சூழலை அழிக்கின்றன. நகரமயமாக்கல், தொழில்மயமாக்கல் காரணமாக கிராம மக்கள் நகரங்களை நோக்கியப் பயணிக்கின்றனர். விளைவு நகர மக்கள் தொகை பலூன் போன்று விரிவடைந்து வருகின்றன. இதன் காரணமாக இவர்களுக்குத் தேவையான வீட்டு உபயோகப் பொருட்கள் உணவு தேவைப்படுகிறது. விளைவு உற்பத்தி தொடங்க தொழிற்சாலை தொடங்க காடுகள் அழிக்கப்படுகிறது. அந்த வகையில் வரும் 2025-ம் ஆண்டுக்குள் இந்தியா, 2,305 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலான வனப் பகுதிகளை இழக்கும் என, இஸ்ரோ விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள், அந்த மான் நிக்கோபார் தீவுகள் உள்ளிட்ட இடங்களில் இந்த பாதிப்பு அதிகமாக இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. நிலப் பரப்பு மாற்றத்தை அறிவதற்கான மென்பொருளைப் பயன்படுத்தி இஸ்ரோ விஞ்ஞானிகள் காடுகளின் பரப்பளவு பற்றி ஆய்வு நடத்தினர்.இதில், இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களான அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோராம், நாகாலாந்து, திரிபுரா மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவு உள்ளிட்ட இடங்களில் கடந்த 2005 முதல் 2013-ம் ஆண்டு வரை காடுகளை அழிக்கும் நடவடிக்கைகள் 0.3 சதவீதத்துக்கும் அதிக மாக இருந்துள்ளதாகக் கூறப்பட் டுள்ளது.

மேலும், கடந்த 1880-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக் கெடுப்பின்படி 10.42 லட்சம் சதுர கிலோ மீட்டராக காடுகளின் பரப்பளவு இருந்துள்ளது. இது 31.7 சதவீதம் ஆகும். இது 2013-ம் ஆண்டு அதாவது கடந்த 133 ஆண்டுகளில் 40 சதவீதம் பரப்பளவு காடுகள் அழிக்கப் பட்டுள்ளன. குறிப்பாக வடகிழக்கு மாநிலங் களில் பெரும்பாலான வனப் பகுதிகள் தனியாரிடம் இருப்பதும், வனப்பகுதிகள் அழிக்கப்பட்டு, சாகுபடி பரப்பளவாக மாற்றப்பட்டு வருவதும் காடுகளின் அழிப்புக்கு முக்கியக் காரணங்களாக முன் வைக்கப்படுகின்றன. முக்கிய மாக, வனப்பகுதிகளில் பெரும் பாலான பாதுகாக்கப்பட்ட இடங் கள் மூலம் காடுகள் அழிப்பு குறைந்து வருவதும் தெரிய வந்துள்ளது. காடுகளை அழிவில் இருந்து மீட்கும் நடவடிக்கையில் இறங்க இந்த ஆய்வு உதவிகரமாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கொஞ்சம் ஆழமாக அலசினோமேயானால் உண்ண உணவு, சுவாசிக்க காற்று, குடிக்க நீர் இந்த மூன்றும் மனிதன் சுகாதாரமாக உயிர் வாழ்வதற்கு இன்றியமையாதவை. இந்த மூன்றையும் பெற்றபின் நாகரீகமாக அதாவது விலங்குகள் மற்றும் பிற உயிர்களிலிருந்து மாறுபட்டு வாழ உடுக்க உடை, இருக்க இருப்பிடத்தைத் தேடி அலைந்தான் மனிதன். இயற்கையோடு இணைந்து வாழ்ந்தபோது நண்பனாக பாவித்து வந்த இயற்கை, நாகரீகமாக வாழ தொடங்கியபோது எதிரியாக மாறிவிட்டது. அதாவது ஆடம்பரமாக வாழ காடுகளிலிருந்து மரங்களை வெட்டி அடுப்பெரிக்கவும், வீடுகள் கட்ட கதவு, சன்னல், மேசை, நாற்காலிக்காகவும் வீடுகளைக் கட்டிக் கொள்ளவும், விவசாயத்திற்காகவும் வனங்களை அழித்தான். அத்தோடு நின்று விடாமல் மாமிசத் திற்காகவும், அதன் தோலிலிருந்து ஆடம்பர பொருட்கள் தயாரிக்கவும் மிருகங்களை வேட்டையாடத் தொடங்கினான். விளைவு காடுகள் பாலைவனமாகவும் அறிய வகை விலங்குகள் படிப்படியாக மறையவும் தொடங்கின.
மதங்கள் எடுத்த நடவடிக்கை

இப்படி அழிந்துவரும் காடுகளையும் விலங்குகளையும் மனிதன் நாகரீகமாக வாழத்தொடங்கிய நாள் முதலே நாட்டை ஆண்டவர்கள் சிலர் கட்டுபாடுகளை விதித்ததிற்கான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. உதா: கி.மு.321 மற்றும் 300 ஆண்டுகளிலிருந்து காணப்படுகிறது. கெளடில்யரின் அர்த்த சாஸ்திரம் இது குறித்து விளக்குகிறது. ஒவ்வொரு மனிதனும் இயற்கையைப் பாதுகாப்பது அவனது தார்மீக கடமை என்று கூறுகிறது. மேலும் முக்கிய மரங்களை வெட்டினால் என்ன தண்டனை கிடைக்கும் என்றும் மரமே கடவுளின் அவதாரம் என்றும் கூறுகிறது. இந்து மதத்தை பொருத்த மட்டில் இந்தியாவின் பண்பாடு, மதம் சார்ந்த எழுத்துக்கள், வேதங்கள் மற்றும் பஞ்ச பூதங்களை வணங்க வேண்டும் என்று சொல்கிறது. மேலும் மனிதன் தாவரங்களையும் விலங்குகளையும் தனக்கென எடுப்பது அனைத்தையும் பூமிக்கே திருப்பிக் கொடுக்கவேண்டும். பசு மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு குறித்தும் வேதங்கள் கூறுகின்றன. காடுகளை பாதுகாப்பது மனித குலத்தின் சட்டக் கடமையாக்கும் என்று மனுநீதி கூறுகிறது. அப்படி காடுகளை அழித்தால் அதை அழிப்பவன் தண்டிக்கப்படுவான். இந்து மதம் மட்டுமல்ல புத்தம் இஸ்லாம், ஜைனம், கிருஸ்துவம் ஆகிய மதங்களும் உயிருள்ள மற்றும் உயிரற்ற விலங்கு நீரின் சுத்தம், தாவரம் மற்றும் விலங்களிடம் அன்பு, மரம் நடுதல் ஆகியவற்றால் சுற்றுசூழலைப் பாதுகாப்பது அவசியம் என்று கூறுகிறது. சுருக்கமாக சொல்லபோனால் பண்டைய காலத்தில் சுற்றுசூழல் பாதுகாப்பு தார்மீக கடமையாக இருந்ததே தவிர தண்டனை சட்டங்களாக இருக்கவில்லை.

இப்படிபட்ட சூழலில்தான் இயற்கையை மனித குலத்திடம் இருந்து பாதுகாக்க இந்தியாவிற்குள் நுழைந்த காலத்தில் மெக்கேலேயால் இந்திய தண்டனைச் சட்டம் 1860 இயற்றப்பட்டு சுற்றுச்சூழலை பாதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டோருக்கு தண்டனை வழங்க வகை செய்தது. Fifth Indian Easements Act 1882ன் படி சுற்றுச்சூழல், காற்று, நீர் மாசுபடுவதை தடை செய்கின்றன. காடுகளை பாதுகாக்க இந்திய வனச்சட்டம் 1865ல் இயற்றப்பட்டு மீண்டும் 1894ம் ஆண்டு வணக்கொள்கை கொண்டுவரப்பட்டது. பின்பு 1927ல் கொண்டுவரப்பட்ட திருத்தப்பட்ட இந்திய வனச்சட்டம் காடுகளை ஒதுக்கப்பட்ட காடுகள், கிராமப்புர காடுகள், பாதுகாக்கப்பட்ட காடுகள், அரசு சாரா காடுகள் என நான்கு பிரிவுகளாக பிரித்து வனக் கொள்கைகளை கடைபிடிக்கவும், பாதுகாக்கவும், தேவையான விதிகளும் ஒழுங்கு முறைகளும் வகுக்கப்பட்டன. 1893ல் வட இந்திய கால்வாய் மற்றும் கழிவுநீர் சட்டம், 1923ல் இந்திய கொதி கலன் சட்டம், 1908ல் உரிமையியல் நடைமுறைச் சட்டம், தீங்கியல் சட்டம் போன்ற சட்டங்கள் மூலம் வனங்களையும் நீர், காற்று மாசுவை மீறுவோர் மீது தண்டிக்கவும். பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் வகை செய்திருக்கிறது.

வாழும் சூழல் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு மேலோங்கியதின் பயனாய் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கும் வகையில் இந்தியா வலிமையான, சிறப்பான சுற்றுச்சூழல் சட்டங்களை இயற்றியது. அதாவது தொழிற்சாலைச் சட்டம் 1948, இந்திய சுரங்கங்கள் சட்டம் 1952, மிருகவதை தடுப்புச் சட்டம் 1960, அணுசக்தி சட்டம் 1962 மற்றும் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972ல் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தியது. இச்சட்டங்கள் மூலம் சுற்றுச்சூழலை மீறுவோர்கள்மீது தண்டனை வழங்க வகை செய்யப்பட்டிருந்தது. சுற்றுச்சூழல் மாசு என்பது இந்தியாவை மட்டும் பாதிக்கும் ஒரு காரணியாக இல்லாமல் உலக நாடுகள் அனைத்திற்கும் சுற்றுச்சூழல் மாசு பரவி விபரீத விளைவுகளை ஏற்படுத்தி உள்ளதால் அனைத்து உலக நாடுகளும் ஐநா சபையின் வழிகாட்டுதலின் பெயரில் சட்டங்கள் இயற்ற ஐ.நா கதவைத் தட்டின. இதன் விளைவாக ஐ.நா சபை பல வழிகாட்டு நெறிமுறைகளையும், நிதி உதவிகளையும் வழங்கி உலக நாடுகள் சுற்றுச்சூழலைப் பேணிகாக்க பல்வேறு வகையான சட்டங்கள் இயற்ற உதவி புரிந்தன என்பது குறிப்பிடத்தக்கது..

error: Content is protected !!