மின்னணு வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கப் போறோம்! – மோடி திட்டவட்டம்! – AanthaiReporter.Com

மின்னணு வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கப் போறோம்! – மோடி திட்டவட்டம்!

மத்தியரசு 2030ல், பொது போக்குவரத்தில், 100 சதவீத மின் வாகனங்கள் பயன்படுத்த இலக்கு நிர்ண யித்துள்ளதாக, கடந்தாண்டு கூறியிந்தது. அதே சமயம் நம் நாட்டில் மின் வாகன கொள்கையை உருவாக்கும் திட்டம் இல்லை எனவும் சமீபத்தில் தெரிவித்திருந்தது. அது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில் டெல்லியில் “மூவ்: குளோபல் மொபிலிட்டி” மாநாடு இன்று நடந்தது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசிய போது, “மின்னணு வாகனங்களை அதிகம் இயக்கும் ஓட்டு நர்கள் உள்ள இந்தியாவைக் கட்டமைக்க விரும்புகிறோம். மின்னணு வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும், பெட்ரோல், டீசலுக்கு மாற்று எரிபொருள் பயன்படுத்தி இயக்கப்படும் வாகனங்களை அதிகப்படுத்தவும் தனியாக புதிய கொள்கை விரைவில் உருவாக்கப்படும். இதன் மூலம் நாம் பருவ நிலைமாறுபாட்டை எதிர்க்க முடியும். பருவநிலைமாறுபாட்டை எதிர்க்கும் மிக வலிமை யான ஆயுதம் என்பது, சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில், கரியமிலவாயுக்களை வெளியிடாத வாகனங்கள் இயக்குவதுதான். அதாவது, சூழலுக்கு கேடு விளைவிக்காத, காற்று மாசு ஏற்படுத்தாத, நம்முடைய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் விதத்தில் இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

மேலும் அவர், “உலகளவில் மிகப்பெரிய பொருளாதாரத்தை நாம் கொண்டுள்ளோம். நாம் என்ன செய்தாலும், என்ன புதிய கண்டுப் பிடிப்புகள் கொண்டுவந்தாலும், அது எதிர்காலத் தலைமுறை யினருக்கு பயன்படும் வகையில் விட்டுச் செல்ல வேண்டும். எதிர்காலத்தில் இந்தியாவின் வாகனப் பயன்பாடு என்பது, ஆங்கிலத்தில் சி என்ற வார்த்தையை குறிப்பிடும் 7 “சி” க்களை கொண்டதாக இருக்கும். பொதுவானது(காமன்), இணைத்தல்(கனெக்ட்), வசதி(கன்வீனியன்ட்), நெருக்கடியைக் குறைத்தல் (கன்ஜெஷன் ப்ரீ), சார்ஜ், சுத்தம்(க்ளீன்), கட்டிங் எட்ஜ் போன்றவை இருக்க வேண்டும் என்பது விருப்பமாகும்” என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

அதே சமயம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் பேட்டரி வாகனங்களை அதிகரிக்க புதிய கொள்கையை உருவாக்கி, திட்டப்பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு களமிறங்கியுள்ளது. அதன்படி, ரூ.1,050 கோடியில் 4 ஆயிரத் துக்கும் மேற்பட்ட சார்ஜர் மையங்கள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களின் எண்ணிக்கையை படிப்படியாக குறைத்து, மாற்று எரிசக்தி மூலம் வாகனங்களை இயக்க புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. இருசக்கர வாகனங்கள், பேருந்து, கார் உள்ளிட்ட வாகனங்களை பேட்டரி தொழில்நுட்பத்தில் இயக்குவதை அதிகரிப்பது தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு போக்குவரத்து அமைச்சகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

பேட்டரி வாகனங்களின் திட்டங்களைக் குறைந்த செலவில் உருவாக்குவது, தரமான சார்ஜர் மையங்கள் அமைப்பது குறித்து பல்வேறு ஆராய்ச்சி மையங்களிலும் தொடர்ந்து ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. தமிழகத்திலும் பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்களை அதிகரிக்க, அதற்கான திட்டங்களைக் கொண்டு வருவது குறித்து அரசு அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஆலோசனை நடத்தி வருகிறார்களாம்.