2000 ரூபாய் நோட்டு அச்சிடுவதை நிறுத்தி விட்டது ரிசர்வ் வங்கி? – AanthaiReporter.Com

2000 ரூபாய் நோட்டு அச்சிடுவதை நிறுத்தி விட்டது ரிசர்வ் வங்கி?

அதிக மதிப்பு கொண்ட நோட்டுகளை பதுக்கி, கறுப்பு பணம் சேர்க்கும் வாய்ப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்ற எண்ணஹ்தில் ரூ.2000 நோட்டை அச்சிடுவதை மத்திய அரசு நிறுத்தி வைத்து உள்ளதாகவும், அதன் பயன்பாட்டை மெல்ல மெல்ல குறைத்து வருவதாகவும் தகவல் வெளியாகி யுள்ளது.

2016ம் ஆண்டு நவம்பரில் மத்திய அரசு பணமதிப்பிழப்பை அறிவித்தது. அதன்படி அப்போது பயன் பாட்டில் இருந்த ரூ.500. ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. அந்த நேரத்தில் நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. தட்டுப்பாட்டை போக்க 2000 ரூபாய் நோட்டை மத்திய அரசு அறிமுகம் செய்தது.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனத்தை தெரிவித்தன. ரூ.2000 நோட்டுகள் அறிமுகமானால் அதை எளிதில் பதுக்கிவைக்க முடியும் எனவும், வரி ஏய்ப்பாளர் களுக்கு இது சாதகமாக அமைந்துவிடும் எனவும் கருத்து தெரிவித்திருந்தனர். தற்போது அது உண்மையாக ஆகிவிட்டதோ என்ற எண்ணத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி ரூ.2000 நோட்டை அச்சிடுவதை மத்திய அரசு தற்போது நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாத நிலவரத்தின் படி, நிறைய நகரங்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. தேர்தல் எதிர்வரும் நேரத்தில் பணம் பதுக்கப்பட்டிருக்கலாம் என மத்திய அரசு சந்தேகித்தது. அதற்கு ஏற்றார் போல அப்போது நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் நிறைய 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதற்கான நடவடிக்கையாகவே தற்போது 2000 ரூபாய் நோட்டை அச்சிடுவதை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மார்ச் 2018 ன் புள்ளிவிவரப்படி, மொத்தம் ரூ.18.03 லட்சம் கோடி பணம் புழக்கத்தில் உள்ளது. இதில், ரூ.6.73 லட்சம் கோடி (37 சதவீதம்) ரூ. 2 ஆயிரம் நோட்டுகளிலும், ரூ.7.73 லட்சம் கோடி(43 சதவீதம்) ரூ.500 நோட்டுகளிலும் புழக்கத்தில் உள்ளன. எஞ்சிய பணம் மற்ற நோட்டுகளில் புழக்கத்தில் உள்ளன . இந்நிலையில் தற்போது 2000 ரூபாய் நோட்டுகளின் வரத்தை குறைப்பதால் ரூ.500 நோட்டை அச்சிடுவதை அதிகப்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது குறைக்கப்படுவதால் அது செல்லாமல் போகும் என்ற நிலை இல்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 2000 ரூபாய் நோட்டு அச்சிடுவது நிறுத்தப்பட்டது குறித்தான தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை  என்பது குறிப்பிடத்தகுந்தது.