அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர் எண்ணிக்கையில் இந்தியாவுக்கு இந்தாண்டும் 2ம் இடம்!

அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர் எண்ணிக்கையில் இந்தியாவுக்கு இந்தாண்டும் 2ம் இடம்!

கல்வி கற்பதற்காக அதிக அளவில் வெளிநாட்டு மாணவர்கள் செல்லக்கூடிய நாடுகளின் பட்டி யலில் அமெரிக்கா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. அமெரிக்காவில் வழங்கப்படும் தரமான கல்வி, செய்முறைப் பயிற்சிகள் நிறைந்ததாக இருப்பதுவே இதற்குக் காரணம், மேலும் அமெரிக்காவில் வழங்கப்படும் பட்டங்கள், உலக அளவில் அங்கீகரிக்கப்படுவதாகவும், கடந்த 2017-18-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் 10 லட்சத்து 94 ஆயிரத்து 792 வெளிநாட்டு மாணவர்கள் கல்வி கற்றுள்ளதாகவும் இதில் இந்திய மாணவர்கள் மட்டும் 1 லட்சத்து 96 ஆயிரத்து 271 பேர் அதாவது சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளதாகவும், போன ஆண்டு தகவல் வெளியான நிலையில் 2018-19ல் 2 லட்சத்து 2000 இந்திய மாணவர்கள் மேல் படிப்பு படிக்க அமெரிக்கா சென்று உள்ளனர். இப்போதும் சீனாவுக்கு அடுத்தப்படியாக இரண்டாவது மிகப்பெரிய எண்ணிக்கையாகும். அமெரிக்காவின் 2019 சர்வதேச கல்வி பரிமாற்றம் குறித்த அறிக்கையில் இத்தகவல் இடம் பெற்றுள்ளது.

இந்தியா போன்ற நாட்டில் தனி மனிதனின் வருமானம் சராசரியாக ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாயாக இருக்கிறது. அமெரிக்கா வில் தனி மனித வருமானம் சராசரியாக 10 லட்சமாக இருக்கிறது. இதிலிருந்தே அந்நாட்டுமக்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் பொருளாதார நிலையை நாம் அறிய முடியும். கல்வியிலும் அமெரிக்கா முதன்மை பெற்று திகழ்கிறது. இதன் பல கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் உலகெங்கும் அவற்றின் தரத்திற்காக அறியப்படுகின்றன. அதன் கல்வி நிறுவனங்களின் தரத்தைப் பாராட்டாத ஆசிரியர்களும் மாணவர்களும் எங்கும் கிடையாது.

அமெரிக்காவின் உயர் படிப்புகள் தொழில் முன்னேற்றத்திற்கு கூடுதல் மதிப்பைப் பெற்றுத் தருபவை. அமெரிக்கப் படிப்பு பணி முன்னேற்றத்திற்கு அடித்தளமாக இருப்பதோடு தலைமை பண்புகளையும் மாண்புகளையும் வளர்க்கிறது. மனித அறிவு எல்லைகளை விரிவுபடுத்துவதோடு நவீன தொழில்நுட்பம், கலைத்தன்மையுடன் கூடிய ஆய்வு மற்றும் சிறப்பான பயிற்சி அம்சங்களையும் அமெரிக்கக் கல்வி வழங்குகிறது.

அமெரிக்காவில் பெறும் கல்வி ஒருவரின் வாழ்வில் முத்திரையாக விளங்குவதோடு அவரது வாழ்க்கை முழுவதும் அவரை சிறந்த பாதையில் இட்டுச் செல்கிறது. பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு படிப்பதால் உலகளாவிய பல தொடர்புகளை இது மாணவருக்கு வழங்குகிறது. படிக்க விரும்பும் பிரிவு, கல்லூரி போன்றவற்றில் அதிக அளவிலான வாய்ப்புகள் உள்ளதால் கல்வித்தரமும் மிக சிறப்பாகவே இருக்கிறது.

இந்த சிறப்பம்சங்களைத் தாண்டி அமெரிக்கக் கல்வியானது அதிக செலவைக் கொண்டதாகவே இருக்கிறது. எனினும் உதவித் தொகை, ஸ்பான்சர்ஷிப் போன்ற பல உதவிகள் கிடைப்பதாலும் மாணவரின் கவுரவத்தையும், தரத்தையும் உறுதியாக மேம்படுத்துவதால் அமெரிக்கக் கல்வி யானது பெரிதும்விரும்பப்படுகிறது. இதனால்தான் அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை 2018-19 கல்வியாண்டில் உயர்ந்து உள்ளது. குறிப்பாக கடந்த 4 ஆண்டுகளில் தொடர்ந்து உயர்வு இடம் பெற்று வருகிறது. 10 லட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு மாணவர்கள் உள்ளனர்.

2018 ஆம் ஆண்டில் சர்வதேச மாணவர்கள் அமெரிக்காவில் செலவிட்ட தொகை 44.7 பில்லியன் டாலர். இது முந்தைய ஆண்டை விட 5.5 சதவீதம் அதிகமாகும். அமெரிக்காவில் மொத்த சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 1,095,299 ஆக உள்ளது. இது கடந்த ஆண்டை விட 0.05 சதவீதம் அதிகரித்துள்ளது. அமெரிக்க உயர்கல்வி படிக்கும் மாணவர்களில் 5.5 சதவீதம் பேர் வெளிநாட்டு மாணவர்களாக உள்ளனர்.

தொடர்ச்சியாக 10வது ஆண்டாக, சீனா 2018-19ல் 3,69,548 மாணவர்களுடன் அமெரிக்காவில் முதலிடத்தில் உள்ளது. இது 2017-18 ஆண்டை விட 1.7 சதவீதம் அதிகமாகும். 2018-19ல் 2,02,014 மாணவர்களுடன் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இது கடந்த ஆண்டைவிட 2. 9 சதவீதம் அதிகமாகும். சீனா, இந்தியா, தென் கொரியா (52,250), சவுதி அரேபியா ( 37,080), கனடா( 26122) ஆகிய 5 நாடுகள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன.

மேலும் வளர்ந்து வரும் சந்தை நாடுகள் சில மாணவர் எண்ணிக்கையில் வலுவான வளர்ச்சியைக் காட்டியுள்ளன. குறிப்பாக வங்காள தேச மாணவர் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகம். பிரேசில் 9.8 சதவீதம் அதிகம், நைஜீரியா 5.8 சதவீதம் அதிகம் மற்றும் பாகிஸ்தான் 5.6 சதவீதம் அதிகமாகும். 2018-19 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் உள்ள சர்வதேச மாணவர்களில் 51.6 சதவீதம் பேர் ஸ்டெம் (STEM) துறைகளைப் தேர்ந்து எடுத்தனர். மேலும் கணிதம் மற்றும் கணினி அறிவியல் துறைகளில் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 9.4 சதவீதம் அதிகரித்து உள்ளது.

2018-19 ஆம் ஆண்டில் சர்வதேச மாணவர்களுக்கான மிகப்பெரிய கல்வித் துறையாக பொறியியல் இருந்தது, அனைத்து சர்வதேச மாணவர்களில் 21.1 சதவீதம் பேர் அதை தேர்ந்து எடுத்தனர்.

2018-19 ஆம் ஆண்டில் முதன்முறையாக சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 0.9 சதவீதமாக குறைந்துள்ளது,

2017-18 கல்வியாண்டில், 341,751 அமெரிக்க மாணவர்கள் வெளிநாடுகளில் படித்து வருகிறார்கள். இது இது முந்தைய ஆண்டை விட 2.7 சதவீதம் அதிகரிப்பு. இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய வெளிநாடுகளில் அதிகமான அமெரிக்க மாணவர்கள் ஆய்வுகளை நடத்தியுள்ளனர் என அறிக்கை கூறுகிறது.

அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மணவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்தியா மற்றும் சீனாவை சேர்ந்தவர்கள் என்று சர்வதேச கல்வி நிறுவனம் மற்றும் அமெரிக்க வெளி யுறவுத்துறை கல்வி மற்றும் கலாச்சார விவகாரங்கள் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து வளர்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று கல்வி மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான உதவி மாநில செயலாளர் மேரி ராய்ஸ் கூறி உள்ளார்.

error: Content is protected !!